புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 May 2013

தூய ஆவி ஞாயிறு

பெருவிழாத் திருப்பலி
மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்

 தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.
எல்லாரும் மலைத்துப்போய், ``இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?'' என வியந்தனர்.
``பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!'' என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 104: 1யb,24யஉ. 29bஉ-30. 31,34 (பல்லவி: 30)
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். அல்லது: அல்லேலூயா.

1யb என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24யஉ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29bஉ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

 கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-17

சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.
மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.
மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெறவேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

 தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.
நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



ஓரே இடத்தில், ஓரே மனதாய், இயேசுவின் நினைவில் ஒன்று கூடியிருந்த சீடர்கள் பெந்தகோஸ்து என்னும் 50வது நாளில் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டனர். திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் வழியாக உண்மை உணாத்தும் ஆவியின் கொடைகளாலும், வரங்களினாலும் நாமும் நிரப்பப்பட்டுள்ளோம். ஆவிக்குரிய வாழ்வு வாழ உறுதியெடுப்போம்.

முன்னுரை

அன்புள்ளோரே,
தூய ஆவியின் பெருவிழாவை கொண்டாடிட அழைக்கப்பட்டுள்ளோம்.
அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.
மூவொரு இறைவனில் மூன்றாம் ஆளாக இருப்பவர் தூயஆவியார்.
விவிலியத்தில் இவர் பேசியதாக இல்லை. மௌனமாக வீசும் தென்றலைப் போல் உள்ளார் என விவரிக்கப்பட்டுள்ளது.
எல்லா செயல்பாட்டிற்கும் கிரியா ஊக்கியாக இருக்கிறார் என விவரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கால திருச்சபையில் அனைவரையும் நிரப்பிய இவர், இன்று திருவருட்சாதனங்களின் வழியாக நம்மையும் நிரப்பி வருகின்றார்.
நம்மை இயக்கச் செய்யும் ஆவியாரிடம் நம்மை ஓப்படைப்போம்.
நேரிய வழியில் நம்மை வழிநடத்திடுவார்.

மன்றாட்டு

திருஅவையை வழிநடத்தும் அன்பர்களை உம்ஆவியின் அனலால் நிரப்பி, சமூகத்திலே இயக்குகின்ற சக்தியாக திகழ்ந்து, நெரியவழியில் நடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சமூகப் பொறுப்பாளர்களை உம்ஆவியானவர் தன் நெருப்பினால் சுட்டெரித்து, வாய்மைக்கு மதிப்பளித்து வாழும் மாந்தர்களாக செயல்பட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பலியிலே பங்குகொள்ளும் எம்மை உம்ஆவியானவர் சுத்திகரித்து, நாங்கள் புவியிலே அவரது வரங்கள், கனிகள் பெற்று, சாட்சியாக வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆவியின் அனலால், நாங்கள் பிரிவினைகளுக்கு துணை போகாமல், ஓன்றிணைக்கும் சக்தியாக விளங்கிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உம் ஆவியின் பெருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளோரை உம்ஆவியானவர், பூரண ஆசீரால் நிரப்பிட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.