புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 April 2020

பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச.குரு, மறைவல்லுநர் April 27

இன்றைய புனிதர்
2020-04-27
பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச.
குரு, மறைவல்லுநர்
பிறப்பு
8 மே 1521
நிம்வேகன்(Nimwegen), ஹாலந்து
இறப்பு
21 டிசம்பர் 1597
சுவிட்சர்லாந்து
புனிதர் பட்டம்: 21 மே 1925
திருத்தந்தை பதினோறாம் பயஸ்

இவர் ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில் பள்ளி சென்று தன் படிப்பை முடித்தார். அதன்பிறகு இயேசு சபையில் சேர்ந்து குருவாக பயிற்சி பெற்று 1546 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பிறகு இறையியல் மற்றும் மெய்யியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனி நாட்டிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு இடங்களில் ஆன்மீக குருவாக பணியாற்றி, சிறப்பான மறையுரைகளை வழங்கினார். இவரின் மறையுரை மக்களின் விசுவாசத்தை காக்கவும், உறுதிப்படுத்தவும் உதவியாக இருந்தது. இப்பணியில் இருந்தபோது பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய "மறைக்கல்வி" என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. புனித போனிப்பாஸ் ஜெர்மனியின் முதல் அப்போஸ்தலர் என்றால், புனித கனிசியுஸ் இரண்டாம் அப்போஸ்தலர் ஆவார். இவர் எழுதிய "ஆன்மீகப் பயிற்சிகள்" என்னும் நூல் இயேசு சபையில் பயிற்சியில் இருந்தவர்களுக்கு, தியானம் செய்ய பெரிதும் உதவியது. அப்போதுதான் இவர் இயேசு சபையில் "ஒரு மாத தியான முறையை" அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு ஜெர்மனியிலுள்ள, இங்கோல்ஸ்டாட் என்ற இடத்திலுருந்த பல்கலைக்கழகத்தில் இறையியல், மெய்யியல் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது நாட்டை ஆண்டு வந்த அரசி, இவரை ஆஸ்திரிய நாட்டிற்கு பேராயராக உயர்த்த முயன்றார். இதற்கு கனிசியுசும், இவரின் சபைத்தலைவர் இனிகோவும் இணங்கவில்லை. இதனால் அரசி கோபமுற்று வியன்னாவில் குருமட பயிற்சியில் இருந்த மாணவர்களை, குருவாகக்கூடாது என்று கட்டளைப்பிறப்பித்தார். இதன் விளைவாக 20 ஆண்டுகள் எவராலும் குருவாக முடியவில்லை. அப்போது இச்சிக்கலை தவிர்க்கவே குருமட மாணவர்களை பல நூல்களை எழுத வேண்டினார். அவர்களும் பல நல்ல ஞான நூல்களை எழுதினார்கள். நூல் எழுதும் ஒவ்வொருவரும் 10 பேராசிரியர்களுக்கு சமமானவர்கள் என்று கூறி அம்மாணவர்களை இறைவழியில் கொண்டு சென்றார். பிறகு சுவிட்சர்லாந்தில் புகழ் வாய்ந்த ப்ரைபூர்க் பல்கலைக்கழகத்திற்கு அடித்தளமிட்டார்.

அப்போது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளியில் பிரிந்துபோன கிறிஸ்தவர்களிடம் உரையாடல் நடத்தவும், கிறிஸ்துவ ஒற்றுமையைக் காக்கவும், "எங்கும் ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும்" என்ற நிலை நடைமுறைக்கு வரும் நாளுக்காகவும் திருச்சபை மிகுதியாகஸ் செபிக்கும்படி, திருத்தந்தை அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். இதனால் புனித கனிசியுஸ் இவ்வறிய வாய்ப்பை பயன்படுத்தி, தான் தொடங்கிய புதிய கல்லூரியில் புரொட்டாஸ்டாண்டு கிறிஸ்துவர்களுக்கும் இடமளித்து அனைவரையும் ஒன்று சேர்த்தார். அப்போது 1557 -ல் வேர்ம்ஸ் என்ற நகரில் நடைபெற்ற புரொட்டாஸ்ட்ண்ட், கத்தோலிக்க கலந்துரையாடலுக்கு அழைப்புப்பெற்றார். இவ்வுரையாடலில் கனிசியுஸ் திருச்சபைக்காகவும், குருமடமாணவர்களுக்காகவும் பரிந்து பேசினார். ஆனால் இதனால் பயனேதும் இல்லாமல் போனது. தொடர்ந்து தனது மறையுரையாலும், கல்வி கற்றுகொடுக்கும் பணியாலும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார். இவர் தனது இறுதி நாட்களை தான் தொடங்கிய கல்லூரியில் இருந்த ஆலயத்திலேயே கழித்து உயிர்துறந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித கனிசியுசை, மறையுரைகளால் உமது நற்செய்தியை போதிக்க தேர்ந்தெடுத்து, உயர்த்தினீர். அவருடைய போதனையால் நாங்களும் ஆன்ம வளர்ச்சி பெற்று, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம்பிக்கையுடன் நடக்குமாறு செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருத்தந்தை முதலாம் அன்ஸ்தாசியுஸ் Anastasius I
பிறப்பு: 4 ஆம் நூற்றாண்டு, உரோம்
இறப்பு: 19 டிசம்பர் 401 உரோம்
திருத்தந்தையாக: 399-401


துறவி தூடிலோ Tutilo von St.Gallen OSB
பிறப்பு: 850
இறப்பு: 27 ஏப்ரல் 912 செயிண்ட் காலன், சுவிஸ்

தூய சிட்டா (ஏப்ரல் 27)

இன்றைய புனிதர் : 
(27-04-2020) 

தூய சிட்டா (ஏப்ரல் 27)
“உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களிடையே முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் (மத் 20: 26 – 28).

வாழ்க்கை வரலாறு

இத்தாலியில் உள்ள லூக்கா என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மொந்தேசக்ராத்தி என்னும் இடத்தில் 1218 ஆம் ஆண்டு, சிட்டா பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்து போனார். அதனால் இவர் தனது தாயின் அரவணைப்பிலே வளர்ந்து வந்தார்.

சிட்டாவிற்கு 12 வயது நடக்கும்போது இவர் பட்டிநெர்லி என்பவருடைய வீட்டில் வேலைக்காரப் பெண்ணாகச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த இடத்தில் சிட்டா மிகவும் பொறுப்புடனும் அதே நேரத்தில் கவனத்துடனும் வேலை பார்த்து வந்தார். தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்ட பக்தியையும் பொறுமையையும் சிட்டா தன்னுடைய பணியில் நடைமுறைப்படுத்தி எல்லாருக்கும் எடுத்துக்காட்டன ஒரு பெண்மணியாக வாழ்ந்து வந்தார். இவருடைய பணிகளைப் பார்த்த வீட்டுப் பொறுப்பாளருக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. அதே நேரத்தில் இவரோடு வேலை பார்த்து வந்த பணியாளர்களோ இவர்மீது எப்போதும் பகமையோடும் வெறுப்போடும் இருந்தார்கள்.

ஒருமுறை வீட்டு உரிமையாளர் கொடுத்த வேலையை சிட்டா சிறப்புடன் செய்ததால், அவர் அவரை முக்கியப் பொறுப்பில் அமர்த்தினார். இதைக் கண்டு சிட்டாவின் மீது வெறுப்போடு இருந்தவர்கள், எங்கே சீட்டா நம்மைப் பழிவாங்குவாளோ என்று பயந்துபோனார்கள். ஆனால் சிட்டா அப்படிச் செய்யவில்லை, தன்னை வெறுத்தவர்கள் மீது அன்புமழை பொழிந்தார். அவர்களைக் கருணையோடு நடத்தினார். இதனால் அவர்கள் சீட்டாவின்மீது நல்மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்கள். சீட்டா முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் அவர் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் நடந்துகொண்டார். இதனால் எல்லாருக்கும் அவரைப் பிடித்துப் போனது.

சிட்டா ஏழைகள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார். அது மட்டுமல்லாமல், அவர்களுக்காக எப்போதும் ஜெபித்து வந்தார். இப்படிப் பட்ட சிட்டா 1271 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பிறகு இவருடைய கல்லறைக்கு நிறையப் பேர் வந்து மன்றாடினார்கள். அவர்களுடைய மன்றாட்டுகள் அனைத்தும் கேட்கப் பட்டன. இதனால் இவருக்கு 1696 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.. 1933 ஆம் ஆண்டு இவர் ‘வீட்டுவேலை பார்ப்பவர்களுடைய பாதுகாவலர்’ என்று அறிவிக்கப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிட்டாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. தாழ்ச்சி

தூய சிட்டாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். இன்றைக்குப் பலர் தாங்கள் வந்த வழியை – கடந்த கால வாழ்வை – மறப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் தூய சிட்டா மிகவும் தாழ்ச்சியோடும் பணிவோடும் பணிசெய்து வந்தார். தூய சிட்டாவைப் போன்று நாமும் தாழ்ச்சியோடு பணி செய்கின்றோமா? அல்லது தாழ்ச்சியோடு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருசமயம் சூழ்கொண்ட மேகமானது நீரை – மழையை - வார்த்தது. அப்போது அதிலிருந்த ஒரு மழைத்துளி மட்டும் பரந்த வானத்தையும் அகன்ற கடலையும் பார்த்து, “எவ்வளவு பெரிய வானம்! எவ்வளவு பெரிய கடல்! இவர்கள் முன்னால் நான் ஒரு துரும்புதானே! இருந்தாலும், இறைவன் என்னை ஒரு மழைத்துளியாய்ப் படைத்திருக்கின்றாரே, அதற்கு நன்றி” என்றது. மழைத் துளி இவ்வாறு பேசிக்கொண்டதைக் கேட்ட கடல் சிப்பி ஒன்று அதனை உயர்த்த நினைத்தது. எனவே அது தன் நாவைப் பிளந்து அதனை ஏற்றுக்கொண்டது. நாவில் போன மழைத்துளியும் பணிவு மாறாமல் பல வருடங்களாய் உள்ளேயே கிடந்தது. கனிந்த நாள் வந்தபோது அது விலையுயர்ந்த முத்தாக மாறி வெளியே வந்தது.

தாழ்ச்சியோடு வாழ்கின்ற ஒருவர் எப்படி உயர்த்தப்படுகின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. தூய சிட்டாவும் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான் அவரை ஒரு புனிதையாக இறைவன் உயர்த்தினார்.

ஆகவே, தூய சிட்டாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.