புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 March 2013

4ஆம் வாரம் - செவ்வாய்
 
முதல் வாசகம்
 கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9,12
அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது. அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார்.
பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், `மானிடா! இதைப் பார்த்தாயா?' என்றார்.
பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார். நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: ``இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)
பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.
1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. பல்லவி
4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி
7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 51: 10,12
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
 
நற்செய்தி வாசகம்
 உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3, 5-16
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர். முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, ``நலம்பெற விரும்புகிறீரா?'' என்று அவரிடம் கேட்டார். ``ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்'' என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
இயேசு அவரிடம், ``எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்'' என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார். அன்று ஓய்வுநாள்.
யூதர்கள் குணமடைந்தவரிடம், ``ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்'' என்றார்கள்.
அவர் மறுமொழியாக, ``என்னை நலமாக்கியவரே `உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று என்னிடம் கூறினார்'' என்றார். `` `படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம் கூறியவர் யார்?'' என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.
பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, ``இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.
அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
தாயாம் திருச்சபையின் 266வது தலைவர் யார். தூய பேதுருவின் வாரிசு யார் என்பதனை தீர்மானிக்கும் நாள் செவ்வாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. செபிப்போம். நீர்ப்பந்தங்கள், தாக்கங்கள், முன்சார்பு எண்ணங்கள், குறுக்கீடுகள் இன்றி தூய ஆவியின் துணையோடும், திரியேக தேவனின் விருப்பத்தோடும் நடந்தேற மன்றாடுவோம்.
நேரிடையாக சென்று சந்தித்து, பல ஆண்டுகள் சுகவீனமான மனிதரை சந்திக்கின்றார். அவருடைய கருணைக்கு, அன்புக்கு எல்லையில்லை என்பதனை இது நமக்கு உணர்த்துகின்றது. கிறிஸ்துவின் அன்புக்கு எல்லையில்லை என்பதனை இது உணர்த்துகின்றது. தானே முன்வந்து சென்று விசாரித்துநேரிடையாகவே கேட்டு விடுதலையை கொடுக்கின்றார்.
இன்றைக்கு இத்தகையோருக்கு தேவை நம்முடைய நேரிடையான சந்திப்பும், விசாரிப்பும் தான்.
தவக்காலத்தில் நம்மாலான உதவிகளை செய்வோம். விடுதலையை உணர்த்துவோம்.

11 March 2013

4ஆம் வாரம் - திங்கள்
 
முதல் வாசகம்
 இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21
ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.
நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10-11, 12b (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி
4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
 
நற்செய்தி வாசகம்
 நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54
அக்காலத்தில் இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
இயேசு அவரை நோக்கி, ``அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், ``ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்'' என்றார்.
இயேசு அவரிடம், ``நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.
``எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?'' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ``நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது'' என்றார்கள்.
`உம் மகன் பிழைத்துக்கொள்வான்' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
தன்னை தச்சனின் மகன் தானே என்று ஏற்றுக் கொள்ள மறுத்த மக்கள், அதிசயங்களை அற்புதங்களை கண்ட பின்னர் ஏற்றுக் கொள்ள முற்பட்ட போது, அவர்களிடம் எதிர்பார்த்த நம்பிக்கையின் உறுதிப்பாட்டையும் விளக்கி விட்டு, தான் செய்ய வேண்டிய கடமையை செய்து கொடுக்கின்றார். இங்கு இவர் மனிதத்தன்மையை கடந்து, இறைதன்மையை வெளிக்காட்டுகின்றார்.
சாதாரண மனிதர்கள் போல் அல்லாது தெய்வீக மனிதனாக தன்னுடைய செயல்களின் வழி வெளிப்படுத்துகின்றார்.
நாமும் மனித நிலையில் இருந்து புனிதனாகி, எப்பொழுது இறைதன்மையை பெற்றுக் கொள்வது. நம்முடைய வாழ்விலும், மனிதர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போதிலும், நம்முடைய கடமையை செய்ய வேண்டியது வரும் போது, கடமைக்காக மட்டுமன்றி, அன்புடனே அதனை செய்ய முற்படுகின்ற போது இறைதன்மையில் பங்கெடுக்கின்றோம் என்பதுவே உண்மை. இந்த தவக்காலம் நமக்கு உதவட்டும்.

09 March 2013

3ஆம் வாரம் சனி
முதல் வாசகம்
 உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
``வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்'' என்கிறார்கள். எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 16-17. 18-19b (பல்லவி: ஓசே 6: 6)
பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.
1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி
18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19b அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95: 7b, 8b காண்க `உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்,' என்கிறார் ஆண்டவர்.
 
நற்செய்தி வாசகம்
 பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ``இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்.
ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்.''
இயேசு, ``பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
பலருக்கு ஏற்புடையவராக பல முகமூடிகளை அணிந்து கொள்ளும் கூட்டமாக சமூகம் மாறி வருகிறதோ என எண்ணத் தோன்றுகின்றது.
நம்மைவிட உயர்ந்து உள்ள படித்தவர்கள், பதவியில் இருப்போர், பணக்காரர்கள் உயர் சாதியினர் எனச் சொல்லிக் கொள்வோர் இவர்களுக்கு எல்லாம் ஏற்புடையவராக திகழ்ந்நதிட வேண்டும் என தங்களை அணி செய்து கொள்வோரின் நாடக மெடையாக இந்த உலகம் மாறி வருகின்றது வேதனைக்குரியதே.
என்ன காரணம் என்றால் இத்தகைய முகமூடிகளை அணிந்து எல்லாருக்கும் ஏற்புடையவராகிட வேண்டும் என நடிக்க முன்வரும் போது முதலில் நாம் நம்முடைய இயல்பினை தொலைக்கின்றோம். எல்லாருக்காகவும் நாம் நம்மை மாற்றிக் கொள்ள முன்வரும் போது லட்சியத்தினை தொலைக்கின்றோம். காலப் போக்கிலே இது இயலாததாகும் போது விரக்தியே விஞ்சி நிற்கும்.
படைத்தவர்க்கு மட்டுமே ஏற்புடையவராகி வாழ முன்வந்தால் நாம் எதிர்நோக்கும் லட்சியத்தினை நம்முடைய இயல்பிலேயே நாம் நாமாக இருந்து அடைந்து விட முடியும்.