புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் நமது youtube சேனலில் ஒலிவடிவில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் நமது youtube சேனலில் ஒலிவடிவில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

15 March 2013

4ஆம் வாரம் - சனி
 
முதல் வாசகம்
 வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20
`ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், `மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்' என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.
படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 7: 1-2. 8bஉ-9. 10-11 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். 2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். பல்லவி
8bஉ ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். 9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். பல்லவி
10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். 11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 3: 16
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
 
நற்செய்தி வாசகம்
 கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53
அக்காலத்தில் யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, ``வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றனர்.
வேறு சிலர், ``மெசியா இவரே'' என்றனர். மற்றும் சிலர், ``கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?'' என்றனர்.
இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், ``ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?'' என்று கேட்டார்கள்.
காவலர் மறுமொழியாக, ``அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை'' என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, ``நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்'' என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர்.
அவர் அவர்களிடம், ``ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?'' என்று கேட்டார்.
அவர்கள் மறுமொழியாக, ``நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்'' என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
எதிர்க்கப்படும் அறிகுறியாக அவர் இருப்பார்.
இடம் சுட்டி பொருள் விளக்கினால் சிமியோன் தீர்க்கதரிசி குழந்தையை ஆலயத்தில் பார்த்து இயேசுவைக் குறித்து தாய் மரியாளிடம் விவரித்தது.
அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டு, அவரை பிடிக்க விரும்பினார்கள். எல்லாவற்றிக்கும் குறித்த நேரம் வந்தாலேயே காரியங்கள் அரங்கேறும் என்பதால் பிடிக்க முடியவில்லை.
இன்றைய கிறிஸ்தவ வாழ்வு தமிழகத்திலே எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பது சாட்சியத்தினாலா? அல்லது எதிர் சாட்சியத்தினாலா?
இயேசுவின் வாழ்வு தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப சாட்சியமாக இருந்ததால் எதிhக்கப்பட்டார்.
இன்று நாம் விரும்பாத கூட்டமாக மாறி, பல பல புதிய சபைகள் பிரிந்து கொண்டே போவது எதிர் சாட்சியத்தினால் தான் என்பது வேதனையான ஒன்று. அதற்கெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டும் என்பது அறிந்துள்ளோமா?
கிறிஸ்து அல்ல, கிறிஸ்தவம் விரும்பதாகாத ஒன்றாகவே சமூகத்தில் உள்ளது.
4ஆம் வாரம் - வெள்ளி
 
முதல் வாசகம்
 இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1,12-22
இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: `நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.
அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள். அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.
அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.' இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 34: 16-17. 18-19. 20, 22 (பல்லவி: 18ய)
பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4: 4b
`மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.'
 
நற்செய்தி வாசகம்
 இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30
அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
எருசலேம் நகரத்தவர் சிலர், ``இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே'' என்று பேசிக்கொண்டனர்.
ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், ``நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே'' என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
உண்மையை உண்மையாக உரக்கப் பேசுவோர் எங்குமே விட்டு வைக்கப்படுவதில்லை.
இயேசுவும் தான் தந்தையிடமிருந்து வந்துள்ளேன் என்று உண்மையை சொன்ன போது ஏற்றுக் கொள்ளாத சமூகம் அவரை கொல்லத் தேடியது.
இன்றும் அதுவே நடக்கின்றது.
உண்மையா அது என்ன என்று கேட்போரே இன்று அதிகம்.
உண்மைச் சுடும் என்பதால் இருளில் இருப்போர் பலர் உண்மை ஒளிக்கு அழைத்துச் செல்லும் என்பது உண்மையென்பதால் ஒளிக்கு வர விரும்பாதாவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே இருளின் ஆடசிக்குரிய செயல்களை செய்து ஒளியின் மக்களை வேர் அறுக்க முற்படுகிறார்கள். உண்மையை பேசுவோர், ஒளியில் வாழ்வோர் தாங்க்ள வேர் அறுக்கப்பட்டாலும். துங்களுக்கு வாழ்வு மாறுபடுகிறதே ஒழிய தாங்கள் அழிக்கப்படுவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதால் அவர்கள் சாவை குறித்து அஞ:சுவதில்லை. அதனோடு இத்தகைய செயல்கள் உண்மையின் செயல்கள் இறை செயலே என்பதால் துணிவு கொள்கிறார்கள்.
நாம் ஒளியின் மக்களே.

14 March 2013

4ஆம் வாரம் - வியாழன்
 
முதல் வாசகம்
 உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14
அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக்கொள்கிறார்கள்'' என்றார்.
மேலும் ஆண்டவர் மோசேயிடம், ``இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார்.
அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, ``ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? `மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 4ய)
பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!
19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் `மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி
21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி
23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 3: 16
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
 
நற்செய்தி வாசகம்
 உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47
அக்காலத்தில் இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: ``என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.
யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
``என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.