புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 May 2020

கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ ✠
(St. Ivo of Kermartin)
ஏழைகளுக்காக பரிந்து பேசுபவர்:
(Advocate of the Poor)

பிறப்பு: அக்டோபர் 17, 1253
கேர்மார்ட்டின், டச்சி பிரிட்டனி
(Kermartin, Duchy of Brittany)

இறப்பு: மே 19, 1303 (வயது 49)
லான்னேக், டச்சி பிரிட்டனி
(Louannec, Duchy of Brittany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: ஜூன் 1347
திருத்தந்தை ஆறாவது கிளெமென்ட்
(Pope Clement VI)

நினைவுத் திருநாள்: மே 19

பாதுகாவல்:
பிரிட்டனி, வக்கீல்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள்
(Brittany, Lawyers, Abandoned Children)

புனிதர் கேர்மார்ட்டின் நகர இவோ, ஏழை மக்களுக்காக பரிந்து பேசும் ஒரு கத்தோலிக்க குரு ஆவார்.

கி.பி. 1253ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, பிறந்த இவரது தந்தையான "ஹெலோரி" (Helori), "கெர்மார்ட்டின்" (Kermartin) நகர பிரபு ஆவார். இவரது தாயாரின் பெயர் "அஸோ டு கென்கிஸ்" (Azo du Kenquis) ஆகும். பதினான்கு வயதில் "பாரிஸ் பல்கலைகழகத்தில்" (University of Paris) கல்வி கற்க அனுப்பப்பட்ட இவர், அங்கே சிவில் சட்டம் கற்று பட்டதாரியானார். பிற மாணவர்கள் கல்வி காலத்தை கொண்டாட்டங்களில் கழிக்க, இவோ கல்வியிலும், செப வாழ்விலும் முனைப்பாக இருந்தார். நேரம் வாய்க்கும்போதெல்லாம் நோயாளிகளைப் பார்க்க சென்றார். புலால் மற்றும் திராட்சை இரசம் போன்ற மது வகைகளையும் தவிர்த்தார். இறையியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறைகளையும் கற்றார்.

கி.பி. 1284ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1285ம் ஆண்டு "ட்ரெட்ரெஸ்" (Tredrez) எனும் பங்கில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிய இவோ, அங்கிருந்து "லௌன்னேக்" (Louannec) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

"லௌன்னேக்" (Louannec) பங்கிலேயே தாம் இறக்கும்வரை ஏழைகளின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை இலவசமாக செய்தும் உதவி செய்தார். கைவிடப்பட்டவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார்.

டூர்ஸ் நகர விதவைப் பெண் (The Widow of Tours):
பாரிஸ் (Paris) நகரின் தென்மேற்கே, 111 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “ஒர்லியான்ஸ்” (Orléans) நகரின் அருகேயுள்ள “டூர்ஸ்” (Tours) நகரில், ஆயர் தமது நீதிமன்றத்தை நடத்திவந்தார். வழக்கறிஞரான ஈவோ, நீதிமன்றத்திற்கு வருகை தரும்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட விதவைப் பெண்ணுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள், நிலச்சுவான்தாரான அந்த விதவைப் பெண் கண் கலங்கி அழுவதைக் கண்டார். விசாரித்தபோது, அடுத்த நாளே தாம் ஏமாற்றப்பட்ட ஒரு பயண வணிகரின் வழக்குக்கு பதில் சொல்வதற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவள் கூறினாள். தமது பயணத்தின்போது, இவ்விதவைப் பெண்ணுடன் தங்கிச் செல்லும் “டோ” மற்றும் “ரோ” (Doe and Roe) ஆகிய இரண்டு வணிகர்கள் தந்திரமாக அவளை ஏமாற்றி, அவளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் அவள்மீது வழக்கு தொடுத்திருந்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய ஈவோ, மறுநாள் தமது சாதுர்யமான வாதத்தால் விதவையை ஏமாற்றிய வணிகர்களின் தந்திரத்தை வெளிக் கொணர்ந்தார்.

இவ்வாறு இவ்விளம் வழக்கறிஞர், விதவைப் பெண் ஏமாற்றப்படாமல் காப்பாற்றினார். விதவைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் வாதங்களும், அவரது புகழ் மேலும் பரவ வழிவகுத்தது.

புனிதர் தியோஃபிலஸ் May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ புனிதர் தியோஃபிலஸ் ✠
(St. Theophilus of Corte)
குரு, நிறுவனர்:
(Priest and Founder)

பிறப்பு: அக்டோபர் 30, 1676
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

இறப்பு: ஜூன் 17, 1740 (வயது 63)
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜனவரி 19, 1896
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருவிழா: மே 19

புனிதர் தியோஃபிலஸ், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், ஃபிரான்சிஸ்கன் (Order of Friars Minor) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட (Professed member) உறுப்பினருமாவார்.

மறையுரைகளாற்றுவதிலும், மறை போதனையிலும் பிரசித்தி பெற்ற இவர், வட இத்தாலிய நகரங்களிலும், தாம் பிறந்த “கோர்சிகா தீவு” (Corsica island) முழுவதும் ஃபிரான்சிஸ்கன் (Franciscans) இல்லங்களை நிறுவும் முயற்சிகளில் சீர்திருத்தவாதியாக செயல்பட்டார்.

தமது மகிழ்ச்சியான நடவடிக்கைகளுக்காக அறியப்பட்ட இவர், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராயுமிருந்தார். அதே நேரத்தில் தனிமை, அமைதியான, மற்றும் அவரது படாடோபமற்ற அர்ப்பணிப்புக்காகவும் அவர் அறியப்பட்டார்.

“பியாஜியோ அர்ரிகி” (Biagio Arrighi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1676ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 30ம் தேதியன்று, கோர்சிகா தீவுகளில் (Corsica island) பிறந்தார். கோர்சிகா தீவின் பிரபுக்களில் ஒருவரான “ஜியோவன்னி அன்டோனியோ” (Giovanni Antonio) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர், “மடலினா” (Maddalena) ஆகும்.

ஃபிரான்சிஸ்கன் துறவியரிடம் கல்வி கற்ற இவர், கி.பி. 1693ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 21ம் நாளன்று அச்சபையிலேயே இணைந்து, தியோஃபிலஸ் எனும் ஆன்மீக பெயரை ஏற்றுக்கொண்டார்.

தனிமையையும் அமைதியையும் மிகவும் நேசித்த அவர், அதையே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான மென்மையான முறையாக கண்டார். தன்னுடைய சக ஃபிரான்சிஸ்கன் துறவியரிடமும் கடவுளுடைய நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான வழிமுறையாக இதனையே வலியுறுத்தினார்.

ரோம் நகரில் தமது இறையியல் படிப்புகளை தனித்தன்மையுடன் நிறைவு செய்த அவர், நேபிள்ஸ் (Naples) நகரிலும் தனது இறையியல் படிப்பைத் தொடங்கினார். கி.பி. 1694ம் ஆண்டு, “சலேர்னோ” (Salerno) நகரில் தமது உறுதிமொழிகளை ஏற்ற தியோபிலஸ், கி.பி. 1700ம் ஆண்டு, நவம்பர் மாதம், 30ம் நாளன்று, இத்தாலியின் நேப்பிள்ஸ் (Naples) நகரிலுள்ள “தூய மரியா லா நோவா” பள்ளியில் (Convent of Santa Maria La Nova) குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்றதும், “சுபியாகோ” (Subiaco) நகரின் அருகேயுள்ள “சிவிடெல்லா” (Civitella) எனுமிடத்திலுள்ள ஒரு புராதன பள்ளியை சீரமைப்பதற்கான அனுமதியை தமது தலைமை துறவியரிடம் கெஞ்சி பெற்றார். இத்தாலியின் டுஸ்கான் பிராந்தியம் (Tuscan Region) மற்றும் கோர்சிகா (Corscia) தீவுகளில் “ஸுவானி” (Zuani) மற்றும் “ஃபியூசெச்சியோ” (Fucecchio) ஆகிய இடங்களில், தமது சபைக்கான இல்லங்களை நிறுவினார்.

அவர் எப்போதும் சற்று நோயாக இருந்தபோதிலும், கடவுளுடைய மக்களின் தேவைகளுக்காக நோயாளிகளுக்காகவும், கல்லறைகளிலும் தாராளமானவராக விளங்கினார். உழைத்துக் களைத்துப்போன தியோபிலஸ், கி.பி. 1740ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் தேதியன்று, தமது 63 வயதில் மரித்தார். கி.பி. 1896ம் ஆண்டு முக்திபேறு பெற்ற தியோபிலஸ், கி.பி. 1930ம் ஆண்டு, புனிதர் பட்டம் பெற்றார்.

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)

இன்றைய புனிதர் :
(19-05-2020)

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும், உங்களுள் முதன்மையானவராக இருக்கின்றவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத் 20: 26-27)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய செலஸ்டின், 1215 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள அப்ருஸி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பீட்டர் டி மோரோன்.  இவர் குடும்பத்தில் இருந்த பன்னிரெண்டு குழந்தைகளுள் பதினோறாவது குழந்தை.

இவர் சிறுவனாக இருக்கும்போது இவருடைய தாயார் இவரையும் மற்ற எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகக் கூட்டி, “உங்களுள் யார் புனிதராகப் போகிறார்?” என்று கேட்டும்போது இவரே, “நான் புனிதராகப் போகிறேன்” என்று பதில் சொல்வார். அந்தளவுக்கு பீட்டர் எனப்பட்ட செலஸ்டின் சிறுவயது முதலே புனிதராக மாறவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தார்.

செலஸ்டினுக்கு இருபதாவது வயது நடக்கும்போது துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, 31 வயதில் குருவாக மாறினார். ஆசிர்வாதப்பர் சபையில் இருக்கும்போது இவர் தாழ்ச்சிக்கும் தூய்மையான வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்த சமயத்தில் அப்போது திருத்தந்தையாக இருந்த நான்காம் நிக்கோலாஸ் என்பவர் இறந்துபோனார். எனவே திருத்தந்தைப் பதவியானது காலியாக இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குக் காலியாக இருந்தது. இதை அறிந்த செலஸ்டின், திருத்தந்தைப் பதவியானது இப்படி காலியாக இருப்பது நல்லதல்ல என்று திருச்சபையில் முக்கியப் பொறுப்பில் இருந்த கர்தினால்களிடமும் இன்னும் ஒருசிலரிடமும் எடுத்துச் சொன்னார்.

உடனே அவர்கள் யாரை திருத்தந்தையாக நியமிக்கலாம் என்று கலந்துரையாடினார்கள். இறுதியில் பீட்டர் எனப்பட்ட செலஸ்டினையே திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் திருதந்தையாக இருப்பதற்கு தகுதியற்றவன் என்று சொன்னபோதும்கூட அவர்கள் அவரைத் திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இதனால் அவர் ஐந்தாம் செலஸ்டின் என்ற பெயரில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று திருச்சபையை சிறந்தவிதமாய் வழிநடத்திச் சென்றார்.

திருத்தந்தையாகப் பொறுப்பெற்றே வெறும் ஐந்து மாதங்களில் அவர், தான் திருத்தந்தையாக இருப்பதற்கு தகுதியில்லாதவன் என உணர்ந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முன்பிருந்த ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து கடைசிவரைக்கும் ஒரு தூய்மையான துறவியாக வாழ்ந்து வந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஐந்தாம் செலஸ்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தாழ்ச்சி

தூய ஐந்தாம் செலஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். அவர் எப்போதும் தான் திருத்தந்தையாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்ற தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்துவந்தார். அதனால் அவர் புனிதராக உயர்ந்தார். அவரைப் போன்று நாம் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.
அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான்.

அவனோ துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?” என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி “மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார்.  அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

ஆம், உயர் பதவியில் இருப்பவனல்ல, உண்மையான பணிவோடு இருப்பவனே உண்மையான அரசன். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ஐந்தாம் செலஸ்டினைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனிதர் ஃபெலிக்ஸ் May 18

† இன்றைய புனிதர் †
(மே 18)

✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠
(St. Felix of Cantalice)
கப்புச்சின் துறவி:
(Capuchin Friar)

பிறப்பு: மே 18, 1515
கேன்டலிஸ், இத்தாலி
(Cantalice, Italy)

இறப்பு: மே 18, 1587
ரோம், இத்தாலி
(Rome, Italy)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : அக்டோபர் 1, 1625
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: கி.பி. 1712
திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட்
(Pope Clement XI)

நினைவுத் திருவிழா: மே 18

சித்தரிக்கப்படும் வகை: 
கப்புச்சின் திருவுடையில் 
குழந்தை இயேசுவை கரங்களில் தாங்கி

பாதுகாவல்: 
ஸ்பெல்லோ நகர் (Spello)

புனிதர் ஃபெலிக்ஸ், மத்திய இத்தாலி நாட்டின் “லாஸியோ” (Lazio) பிராந்தியத்தின், "கேன்டலிஸ்" (Cantalice) என்ற நகரில் கி.பி. 1515ம் ஆண்டு, ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். "ஸன்ட்டி" மற்றும் "ஸன்ட்டா பொர்ரி" (Santi and Santa Porri) ஆகிய பெற்றோரின் நான்கு ஆண் மகவுகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்.

வறுமையின் காரணமாக “சிட்டாடுகேல்” (Cittàducale) நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தமது பத்து வயதிலிருந்தே கால்நடைகளை மேய்ப்பவராகவும் பண்ணைப் பணியாளாகவும் வேலை செய்தார். தமது பணி நேரத்தின்போது செபிக்க கற்றுக்கொண்ட ஃபெலிக்ஸ், அங்கு வரும் கப்புச்சின் சபை துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 28 வயது வரை அதே கால்நடைகளை மேய்க்கும் மற்றும் பண்ணைப்பணிகளைச் செய்துவந்தார்.

கி.பி. 1543ம் ஆண்டு, இலையுதிர் காலம் முடிவடையும் சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த கப்புச்சின் துறவு இல்லத்தில் "பொதுநிலை சகோதரராக" (Lay Brother) இணைந்தார். எழுத படிக்க தெரியாத ஃபெலிக்ஸ், செபங்களை மனப்பாடம் செய்துகொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக வாழ்ந்தார். 1547ம் ஆண்டு, ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட ஃபெலிக்ஸ், தமது வாழ்வின் மீதமுள்ள சுமார் நாற்பது வருட காலத்தை அங்கேயே கப்புச்சின் துரவியரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக யாசகம் செய்து கழித்தார். யாசகத்திற்காக செல்லும் இவர் காலணிகள் அணிவதில்லை. மாறாக, தமது தோள்களில் ஒரு பெரிய சாக்குப் பையை சுமது செல்வார்.

இந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள், இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஓவ்வொரு நாளும் காத்துக்கிடந்தனர். இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படிப்பறிவு இல்லாத ஃபெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக திகழ்ந்தார். பலவிதமான மக்களின் பிரச்சனைகளுக்கு சாதுரியமான முடிவை அள்ளித்தந்து ரோம் நகர தெருக்களின் ஞானி எனப் போற்றப்பட்டார். 

ஒளிவு மறைவின்றி பேசும் வழக்கமுள்ள சகோதரர் ஃபெலிக்ஸ், புனிதர் சார்லஸ் போரோமியோ (Charles Borromeo), புனிதர் பிலிப் நேரி (St. Philip Neri) மற்றும் சில கர்தினால்களின் அறிமுகமானதுடன் நண்பராகவும் ஆனார்.

புனிதர் பதுவை அந்தோணியாரைப் போல, இவரும் குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்துவதைப் போன்று ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை இவருக்கு காட்சியளித்த இறை அன்னை அதிதூய கன்னி மரியாள் இவரது கைகளில் குழந்தை இயேசுவை தந்தார் என்பர்.

சகோதரர் ஃபெலிக்ஸ் கி.பி. 1587ம் ஆண்டு, தமது 72 வயதான பிறந்த தினத்தன்றே தமது இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார். 

ஃபிரான்சிஸ்கன் சபையின் ஒரு கிளையாக கி.பி. 1528ம் ஆண்டு, அங்கீகரிக்கப்பட்ட கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712ம் ஆண்டு, சகோதரர் ஃபெலிக்ஸ் உயர்த்தப்பட்டார்.

18 May 2020

முதலாம் யோவான் (மே 18)

இன்றைய புனிதர் :
(18-05-2020)

முதலாம் யோவான் (மே 18)
“அதற்குப் பேதுருவும் திருத்தூதர்களும், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட  கடவுளுக்கு அல்லவா கீழ்படிய வேண்டும்” என்றார்கள். (திப 5: 29)

வாழ்க்கை வரலாறு

யோவான், தஸ்கனி என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து இளைஞனானபோது திருத்தந்தை சிமாக்கூஸ் என்பவரிடத்தில் முதன்மைத் திருத்தொண்டராக பணி செய்து வந்தார். 523 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஹார்மித்தாஸ் என்பவர் இறந்தபிறகு, திருத்தந்தைக்கான போட்டி நடைபெற்றது. அதில் யோவான் ஏகமனதாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யோவான் திருத்தந்தையாக உயர்ந்த பிறகு சந்தித்த முதல் சவால் ஆரியபதம் என்ற தப்பறைக் கொள்கைதான். இது இயேசுவின் இறைத்தன்மையை மறுத்து வந்தது. ‘தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒரே இயல்பை அல்ல, ஒத்த இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்” என்று இந்தத் தப்பறை கொள்கை சொல்லி வந்தது. இதனை கொன்ஸ்டண்டிநோபிளில் ஆயராக இருந்த ஜஸ்டின் என்பவர் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட இத்தாலியில் அரசராக இருந்த தியோடரிக் என்ற மன்னன், திருத்தந்தையைக் கூப்பிட்டு, ஜஸ்டின் ஆரிய பதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை நிறுத்தச் சொன்னார். திருத்தந்தை யோவானும் அரசன் சொன்னதைக் கேட்டு, கொன்ஸ்டண்டிநோபிளில் இருந்த ஜஸ்டினைச் சந்தித்து மன்னன் சொன்னதைச் சொன்னார். இதனால் ஆயர் ஜஸ்டின் ஆரியபதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை ஓரளவுக்கு நிறுத்திக் கொண்டார்.

பிரச்சனையை ஓரளவுக்கு முடித்துவிட்டு, திருத்தந்தை யோவான் உரோமை நகருக்கு வந்தபோது, மன்னன் தியோடரிக்கோ திருத்தந்தை அவர்களும் ஆயர் ஜஸ்டினும் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை சிறையில் அடைத்து பலவாறாகச் சித்ரவதை செய்தான். அத்தகைய தருணங்களில் திருத்தந்தை அவர்கள் மனந்தளராமல், அதே நேரத்தில் அவன் சொன்னதைக் கேட்டு நடக்காமல், இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். இதனால் அவர் 526 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனுக்குக் மட்டுமே கீழ்ப்படிந்து நடத்தல்

தூய முதலாம் யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பாரக்கும்போது அவர்   அரசனுக்கு அல்ல, இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தார் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசன் அவரை எவ்வளவோ தனக்கு இணங்க வைக்க முயன்றபோதும் அவர் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய முதலாம் யோவானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள்வேண்டி விளம்பரம் செயதிருந்தார். விளம்பரத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாட்கள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் மட்டும் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லிக்கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.

திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை, சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து நின்றான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அதனால் அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் வாலிபன் தன் எஜமானன் என்ன சொன்னாரோ அதற்கு அப்படியே கீழ்படிந்து நடந்தான். அதனால் அவன் தன் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்தான். நாமும் இறைவனுக்கு எப்போதும் கீழ்படிந்து நடக்கின்றபோது வாழ்வில் உயர்வது உறுதி.

ஆகவே, தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

17 May 2020

தூய பாஸ்கல் பைலோன் (மே 17

இன்றைய புனிதர் :
(17-05-2020)

தூய பாஸ்கல் பைலோன் (மே 17)
“தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” (மத் 11:25)

வாழ்க்கை வரலாறு

பாஸ்கல் பைலோன் 1540 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள, டோரேஹர்மோசா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் மார்டின் மற்றும் எலிசபெத் என்பவர் ஆவர். பைலோனின் குடும்பம் சாதாரண ஒரு விவசாயக் குடும்பம். ஆனால் பக்தியில் சிறந்த குடும்பம் எனவே பைலோனும் பக்தியில் சிறந்து விளங்கிவந்தார்.

பைலோன் 7 வயது முதல் 24 வயது ஆடுமேயத்து வந்தார். அப்படி அவர் ஆடு மேய்க்கச் செல்லும்போது புத்தங்களையும் கையில் எடுத்துக்கொண்டு செல்வார். போகிற வழியில் இருக்கும் படித்தவர்களிடம் அந்தப் புத்தகங்களைக் கொடுத்து, அதை வாசித்துக் காட்டச் சொல்லி, அதன்மூலம் தன்னுடைய வாசிக்கும் பழக்கத்தையும் அறிவையும் பெருக்கிக் கொண்டார். பைலோனுக்கு 24 வயது நடக்கும் இறைவனின் சிறப்பான அழைப்பினை உணர்ந்தார். எனவே அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து சகோதரராக வாழத் தொடங்கினார்.

இவர் பிரான்சிஸ்கன் சபையில் சகோதராக இருந்த நாட்களில் எல்லாம் நற்கருணை ஆண்டவரிடத்திலும் அன்னை மரியாவிடமும் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். குறிப்பாக இவர் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக இரவு நேரங்களில் மணிக்கணக்காக முழந்தாள் படியிட்டு ஜெபித்து வந்தார். இது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

1570 ஆம் ஆண்டு இவர் பிரான்சில் உள்ள ஹியூகோனாட் என்னும் பகுதிச் சென்று நற்செய்தி அறிவிக்கச் சென்றார். அப்பகுதியில் கால்வினியன் சபையைச் சார்ந்தோர் அதிகமாக இருந்தார்கள். கால்வினியன் சபையைச் சார்ந்தவர்களோ நற்கருணையில் இயேசு இருக்கின்றார் என்று ஏற்றுக்கொள்வது கிடையாது. பைலோனோ நற்கருணையில் ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று எடுத்துச் சொன்னபோது, அவர்கள் பைலோனைக் கொலைசெய்வதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் பைலோனோ அதிர்டவசமாக அவர்களிடமிருந்து தப்பித்து வேறோர் இடத்திற்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். இதற்கு மத்தியில் பைலோன் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்துவந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 1592 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

பைலோன் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள்: நம்முடைய ஆன்மாவை அழிவிலிருந்து காத்துக்கொள்ள மூன்று வகையான இதயங்களை நாம் கொண்டிருக்கவேண்டும். ஒன்று தந்தைக் கடவுளிடம் இரஞ்சி நிற்கக்கூடிய மகனுடைய இதயம். இரண்டு அருகில் இருப்பவர்கள் மீது அன்பு கொள்ளக்கூடிய தாயின் இதயம். மூன்று நம்மையே நாம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கக்கூடிய நீதிபதியின் இதயம். இந்த மூன்று இதயங்களையும் ஒரு மனிதன் கொண்டிருக்கின்றபோது, அவன் தன்னுடைய ஆன்மாவை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக்கொள்வான்”.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்  

தூய பாஸ்கல் பைலோனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன படத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி

தூய பைலோனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய மனதில் தோன்றுகின்ற சிந்தனை எல்லாம், அவர் நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவுகடந்த பக்திகொண்டு வாழ்ந்ததுதான். தூய பைலோனைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நற்கருணையை கிறிஸ்தவர்களுடைய வாழ்வின் ஊற்றும் உச்சமும்” என்று சொல்கின்றது. இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? அதற்கு உரிய முக்கியத்துவத்தை நம்முடைய வாழ்வில் கொடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் சீனாவில் பேராயராக பணியாற்றி  21 ஆண்டுகளாக சிறையிலிருந்து சித்ரவதையை அனுபவித்த பேராயர் டோமினிக் டாங் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகின்றது. சிறையில் அவர் மிகக் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில் இரண்டு மணிநேரம், தான் விரும்பியதை செய்ய அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் வேறு எதையும் கேட்கவில்லை, திருப்பலி நிறைவேற்றி, நற்கருணை ஆண்டவரை உட்கொள்ள வேண்டும் என்றே கேட்டார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். பேராயர் டோமினிக் டாங் நற்கருணை ஆண்டவரிடத்தில் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைக்கின்றது.

ஆகவே, தூய பைலோனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

16 May 2020

புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo) May16

இன்றைய புனிதர்
2020-05-16
புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)
குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்
பிறப்பு
1591
சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து
இறப்பு
16 மே 1657
ஜானாவ் (Janow), போலந்து
முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்

புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்தனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ்வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமுமாய் இருந்து பணியாற்றினார்.
கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.


செபம்:
மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குபியோ நகர் ஆயர் உபால்டு Ubald von Gubbio
பிறப்பு: 1080 குபியோ, இத்தாலி
இறப்பு: 16 மே 1160
புனிதர்பட்டம்: 1192
பாதுகாவல்: குழந்தைகள், நரம்பு நோய்கள்


சபைத்தலைவர் சைமன் ஸ்டோக் Simon Stock
பிறப்பு: 1200, அலெஸ்போர்டு, இங்கிலாந்து
இறப்பு: 16 மே 1265 போர்டேக்ஸ் Bordeaux, பிரான்சு
பாதுகாவல்: கார்மேல் மடங்கள்

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)

இன்றைய புனிதர் :
(16-05-2020)

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)
“அவர் காலத்தில் நீதி தலைத்தோங்குவதாக; நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” (திபா 72: 7)

வாழ்க்கை வரலாறு

1110 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள குப்பியோ என்னும் இடத்தில் உபால்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதனால் இவர் இவருடைய மாமாவின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். உபால்டின் மாமா குப்பியோ நகரில் ஆயராக இருந்தார்.

உபால்டு வளர்ந்து பெரியவராகியபோது துறவுமடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இறைவனின் திருவுளமோ அவர் மறைமாவட்டக் குருவாக மாறவேண்டும் என்றாக இருந்தது. எனவே உபால்டு மறைமாவட்டக் குருவாக மாறினார்.  பின்னாளில் அவர் குப்பியோ நகரின் ஆயராகவும் உயர்ந்தார்.

ஆயர் உபால்டு பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் மன்னிக்கும் மனப்பான்மைக்கும் பேர் போனவராக விளங்கினார். ஒரு சமயம் நகரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. அப்போது உபால்டுதான் கலகக்காரர்களை ஒன்றாக ஓட்டி, அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, நகரில் அமைதியான சூழல் உருவாகக் காரணமாக இருந்தார். இன்னொரு சமயம் பிரடரிக் பார்பரோசா என்ற மன்னன் குப்பியோ நகர் மீது படையெடுத்து வந்து, சூரையாட நினைத்தான். அத்தகைய சூழலில் ஆயர்  உபால்டு மிகவும் தைரியத்தோடு பிரடரிக் பார்பரோசவையும் அவனுடைய படையையும் எதிர்கொண்டார். இதனால் அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

ஆயர் உபால்டு மிகவும் துணிச்சல் மிக்கவராகும் கனிவுள்ளவராகவும் இருந்த அதே நேரத்தில் அவர் உடல் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு வந்த நோயானது அவருடைய உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. இதனால் அவர் 1160 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1192 ஆம் ஆண்டு புனிதர் கொடுக்கப்பட்டது. இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாளில் குப்பியோ நகரில் இருந்த அனைவருமே வத்திகானில் இருந்த தூய பேதுருவின் சதுக்கத்திற்குச் சென்று, தங்களுடைய நன்றியுணர்வை காணிக்கையாக்கினார்கள்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய உபால்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மன்னித்து வாழ்வோம், மாபரன் இயேசுவைப் போன்று ஆவோம். 

தூய உபால்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், அவரிடத்தில் இருந்த மன்னிக்கும் மனப்பான்மைதான்.

ஒரு சமயம் ஆயர் உபால்டு பணிநிமித்தமாக வெளியே சென்றுகொண்டிருக்கும்போது, அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவருடைய கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்து ஆயரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அந்தத் தோட்டத் தொழிலாளரைப் பிடித்து அடிக்க முயன்றார்கள். அப்போது ஆயர் உபால்டு, அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, “இவர் தெரியாமல் என்னை அடித்துவிட்டார் அதனால் இவரை நான் மன்னிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். ஆயர் இவ்வளவு பெருந்தமையாக நடந்து கொண்டதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

தன்னை அடித்தவனை மன்னிக்கக்கூடிய மனப்பான்மை தூய உபால்டுக்கு இருந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய உபால்டைப் போன்று நாம் மன்னிக்ககூடிய மனிதர்காக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அடித்தவரை திருப்பி அடிக்கின்ற போக்கும் வன்முறைக்கு வன்முறையைக் கையாளுகின்ற போக்கும்தான் நிலவிக்கொண்டிருகின்றது. இதனால் எங்கும் வன்முறைக்கு மேல் வன்முறைதான் நிலவிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தூய உபால்டிடம் இருந்த அந்த மன்னிக்கும் மனப்பான்மை நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

ஒருமுறை மிகப் பெரிய மறைபோதகரான பில்லி கிரகாம் இவ்வாறு குறிப்பிட்டார், “மருத்துவ மனையில் இருக்கின்ற 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிப்பது”. ஆம், நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கின்றபோது நம்மிடத்தில் இருக்கக்கூடிய முக்கால்வாசி நோய் காணாமல் போய்விடும்.

ஆகவே, தூய உபால்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மன்னிப்பத்திலும் பொறுமையிலும் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய அருளை நிறைவாய் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

15 May 2020

புனித.சோபியாமறைசாட்சி May 15

இன்றைய புனிதர்
2020-05-15
புனித.சோபியா
மறைசாட்சி

பிறப்பு

இத்தாலி
இறப்பு
137
ரோம்
இவர் ஓர் திருமணமான பெண். இவருக்கு 3 பெண் குழந்தை பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் Faith. வயது 12, இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை Hope. வயது 10. மூன்றாவது குழந்தையின் பெயர் அன்பு love. வயது 9. 1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார். சோபியா. இறைவனை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள். இதனால் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள்.
குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோபியாவையும் கொன்றார்கள். சோபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள். இவர்கள் அனைவரும் 117- லிருந்து 138 ஆண்டிற்குள் மறைசாட்சிகளாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

778 ஆம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace)உள்ள எசாவ் (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவறமடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.


செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவா! உம் பொருட்டு இன்னல்கள் அடையும் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். மறைசாட்சியாக மரிக்கின்ற இன்னும் துன்பப்பட்டுகொண்டிருக்கின்றவர்களை நீர் ஆசீர்வதித்து எதையும் உமக்காக தாங்கும் இதயத்தை தந்திட வேண்டுமாய் இறைஞ்சுகிறோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பிங்கன் நகர் பெர்த்தா Berta von BIngen
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, பிங்கன், ஜெர்மனி


மறைசாட்சி ஹால்வார்ட் Halvard
பிறப்பு: 1010, நார்வே
இறப்பு: 1043, நார்வே
பாதுகாவல்: ஒஸ்லோ நகர்


எப்ராண்ட்ஸ்ஹவ்சன் நகர் துறவி ஹென்றி Heinrich von Ebrantshausen
பிறப்பு: 1120 ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 1185, எப்ராண்ட்ஸ்ஹவுசன் Ebrantshausen, பவேரியா
பாதுகாவல்: காதுகேளாதோர், வீட்டு விலங்குகள்

தூய இசிதோர் (மே 15)

இன்றைய புனிதர் :
(15-05-2020)

தூய இசிதோர் (மே 15)
“ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்” (தொநூ 2:15)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவு கூருகின்ற இசிதோர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் என்னும் இடத்தில் 1070 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம். ஆனாலும் பக்தியில் முன்மாதிரியான குடும்பம். அதனால் இசிதோர் சிறுவயது முதலே பக்தியிலும் ஒழுக்கத்திலும் பிறரன்புச் சேவையிலும் சிறந்து விளங்கி வந்தார்.

இசிதோருக்கு திருமண வயது வந்தபோது மரியா தே லா கபெஸா என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். இவர் பின்னாளில் ஒரு புனிதையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இசிதோர் தன்னுடைய சொந்த ஊரில் இருந்த ஜான் தே வர்கீஸ் என்பவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நிலத்தை உழுவதாகட்டும், அதில் பயிரிடுவதாக இருக்கட்டும், பயிரிட்டத்தை அறுவடை செய்வதாக இருக்கட்டும் எல்லா வேலையையும் இசிதோர் மிகவும் சிறப்பாகச் செய்து வந்தார். இதனால் இவரைக் குறித்து முதலாளிக்கு நன்மதிப்பு உண்டானது.

இசிதோர் தான் செய்து வந்த விவசாய வேலைகளுக்கு மத்தியிலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும் காலைத் திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் மறக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் பங்காலயத்தில் நடைபெறக்கூடிய திருப்பலியில் தவறாது கலந்துகொண்டு வந்தார். இதற்கு மத்தியில் இசிதோரோடு வேலை பார்த்துவந்த மற்ற பணியாளர்கள் இசிதோர் எப்போதுமே வேலைக்கு தாமதாகவே வருகின்றார் என்று முதலாளியிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனால் சினமடைந்த முதலாளி ஜான் தே வர்கீஸ் இசிதோரை சோதித்துப் பார்க்க விரும்பினார்.

ஒருநாள் அவர் இசிதோரை நோட்டம் விடத் தொடங்கினார். இசிதோர் அதிகாலையில் திருப்பலிக்குச் செல்வதைப் பார்த்த முதலாளி, தோட்டத்திற்குத் தாமதமாகத்தான் வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருடைய இடத்தில் இன்னொருவர் அதாவது வானதூதர்  வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அதன்பிறகு தோட்டத்தின் முதலாளி  இசிதோரை சந்தேகப்படுவதில்லை. இசிதோர் எப்போதும் போல் காலைத் திருப்பலியில் கலந்துகொண்டு விட்டு சரியான நேரத்தில் தோட்டத்திற்கு வந்து வேலை பார்த்து வந்தார்.

இசிதோருக்கு வயது ஆக ஆக, அவருடைய உடல் நலம் குன்றியது. அத்தகைய சூழ்நிலையும் அவர் ஜெபிப்பதற்கும் திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் மறக்கவே இல்லை. இப்படிப்பட்டவர்  1130 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இசிதோர் இறந்தபிறகு அவருடைய பெயரில் நிறைய புதுமைகள் நடந்தன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்றாம் பிலிப் என்ற மன்னன் இசிதோரின் புனிதப் பொருட்களை  தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துக்கொண்டு வந்து ஜெபித்தபோது அவரிடம் இருந்த தீராத நோய் நீங்கியது. அது போல அல்போன்சோ என்ற மன்னன் எதிரி நாட்டவரோடு போர் தொடுக்கச் சென்றபோது இசிதோரின் வழிநடத்தலால் அவன் போரில் வெற்றி பெற்றான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இசிதோரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனோடு இணைந்திருத்தல்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றுகின்ற ஒரே சிந்தனை ‘இறைவனோடு என்றும் இணைந்திருக்க வேண்டும்’ என்பதுதான்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது” (யோவா 15: 5). ஆம், இயேசுவோடு இணைந்திருக்கின்றபோது மட்டுமே நம்மால் கனிதர முடியும். இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தூய இசிதோர் எப்போதும் தான் புரிந்து வந்த ஜெபத்தினாலும் பல்வேறு பக்தி முயற்சிகளாலும் இறைவனோடு இணைந்திருந்தார். அதனால் இறைவனுடைய பாதுகாப்பு அவருக்கு எப்போதும் இருந்தது. நாமும் இறைவனோடு இணைந்திருக்கின்றபோது நம்மாலும் இறைவனின் அளப்பெரிய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. 

ஆகவே, தூய இசிதோரைப் போன்று இறைவனோடு இணைந்திருப்போம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

14 May 2020

புனித மத்தியா திருத்தூதர் : May 14

இன்றைய புனிதர் :
(14-05-2020)
புனித மத்தியா 
  திருத்தூதர் :  
  பிறப்பு : 1ம் நூற்றாண்டு  
  யூதேயா (இன்றய இசுரேல்)   
  
  இறப்பு : சுமார். 80 கி.பி  யெரூசலம் அல்லது சியார்சியா   
  
  ஏற்கும் சபை/ சமயம் :   கத்தோலிக்க திருச்சபை  கிழக்கு மரபுவழி திருச்சபை  ஆங்கிலிக்க ஒன்றியம்  லூதரனியம்   
  நினைவுத் திருநாள் :   கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் : மே 14  கிழக்கு மரபுவழி திருச்சபை : ஆகஸ்ட் 9  
  சித்தரிக்கப்படும் வகை : கோடரி   
  பாதுகாவல் :   குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்; தச்சர்கள்; மொன்டானா; பெரியம்மை; தையற்கலைஞர் 

  புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின் படி, யூதாசின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.   வரலாறு :  ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.    ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்டவரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்களை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று மன்றாடினர்.   அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என்னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக்கொண்டனர்.   (தி.பணி 1:15-26)    அதன்பிறகு மத்தியா, யூதேயா, எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது, யெருசலேம் நகரில் தலைவெட்டப்பட்டு, மறைசாட்சியாக இறந்தார்.    ஜெர்மனி நாட்டின் ட்ரீயர் என்ற நகரில், பழமைவாய்ந்த ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் மத்தியாவின் புனித பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளது.   செபம் :  மனிதர்களின் மனங்களை அறியும் இறைவா!   திருத்தூதர் மத்தியா எவ்வாறு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டு, உம்மைப் பற்றி சான்று பகர்ந்தாரோ, அதேபோல உம் பணிக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு துறவிகளும், குருக்களும் வாழ உதவி செய்தருளும். ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

13 May 2020

அருளாளர் இமெல்டா லம்பெர்ட்டினி May 13

† இன்றைய புனிதர் †
(மே 13)

✠ அருளாளர் இமெல்டா லம்பெர்ட்டினி ✠
(Blessed Imelda Lambertini)
பிறப்பு: கி.பி. 1322 
பொலோக்னா, இத்தாலி
(Bologna, Italy)

இறப்பு: மே 12, 1333 (வயது 11)
வால்டிபியேட்ரா, பொலோக்னா 
(Valdipietra, Bologna)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : கி.பி. 1826
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

நினைவுத் திருநாள்: மே 13

பாதுகாவல்: புதுநன்மை பெறுவோர்

அருளாளர் இமெல்டா, இத்தாலி (Italy) நாட்டின் பொலொக்னா (Bologna) எனும் நகரில், "இகானோ லம்பெர்ட்டினி" (Egano Lambertini) மற்றும் "காஸ்ட்ரோ கலுஸ்ஸி" (Castora Galuzzi) ஆகியோரின் ஒரே மகளாக கி.பி. 1322ம் ஆண்டு பிறந்தார்.

5 வயது நிறைந்த இமெல்டா, திருநற்கருணையைப் பெறுவதற்கு அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டின் காலகட்டத்தில், திருநற்கருணையைப் பெறுவதற்கு, குறைந்தது 14 வயதாகிலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஒவ்வொரு நாளும், திருப்பலிக்கு முன்னர் அச்சிறுமி பங்குத் தந்தையிடம் தன் ஆவலை வெளியிட்டாலும், பங்குத் தந்தை அவரை காத்திருக்குமாறு கூறிவந்தார்.

தமது 9வது வயதில் சிறுமி இமெல்டா டொமினிக்கன் (Dominican community) துறவு மடத்தில் இணைந்தார். கி.பி. 1333ம் ஆண்டு இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்தின நாள், சிறுமி இமெல்டாவின் ஆவல் அற்புதமாக நிறைவேறியது. 10 வயதான சிறுமி இமெல்டா, அன்றையத் திருப்பலி முடிந்தபின், கோவிலில் தனித்து செபித்துக் கொண்டிருந்தார். திருப்பலிப் பீடத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்த அருட்சகோதரி ஒருவர், இமெல்டாவுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் கண்டார். அதாவது, சிறுமி இமெல்டாவுக்கு முன், திவ்ய நற்கருணை, ஒளிவடிவில் மேலிருந்து இறங்கி வந்தது.

இதைக் கண்ட அருட்சகோதரி, உடனடியாகச் சென்று பங்குத்தந்தையையும், ஏனைய அருட்சகோதரிகளையும் அழைத்துவந்தார். திருநற்கருணையைக் கண்டதும், பங்குத்தந்தை, திருப்பலி ஆடைகளை மீண்டும் அணிந்து வந்து, அந்தரத்தில் ஒளிவீசியபடி நின்ற அந்த நற்கருணையை கையில் ஏந்தி, அதை, சிறுமி இமெல்டாவுக்கு வழங்கினார். திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட இமெல்டா, கண்களை மூடி, ஒரு புன்னகையுடன் செபித்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று மற்றவர்கள் ஆலயத்தை விட்டுச் சென்றனர்.

பல நிமிடங்கள் சென்று, துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி, சிறுமி இமெல்டாவை அழைத்துச்செல்ல கோவிலுக்கு வந்தார். செபத்தில் ஆழ்ந்திருந்த சிறுமியின் வதனத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்சகோதரி, சிறுமியின் பெயர் சொல்லி அழைத்தார். அவரிடம் அசைவு ஏதும் காணாததால், அவரது தோளில் மெலிதாக தட்டினார். உடனே சிறுமி நிலைகுலைந்து தரையில் வீழ்ந்தார். இமெல்டாவின் உயிர் பிரிந்திருந்தது.

சிறுமி இமெல்டா, போலோக்னா (Bologna) நகரிலுள்ள “சேன் சிகிஸ்மோன்டோ” (Church of San Sigismondo) ஆயலத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

கி.பி. 1826ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் லியோ (Pope Leo XII), இச்சிறுமியை முக்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார். 

புதுநன்மை பெறும் அனைவருக்கும் இமெல்டா லம்பெர்த்தினி பாதுகாவலராக விளங்குகிறார்.

புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)சபை நிறுவனர் May 13

இன்றைய புனிதர்
2020-05-13
புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)
சபை நிறுவனர்
பிறப்பு
6 டிசம்பர், 1752
வியன்னா (Wien)
இறப்பு
13 மே 1834
லா பூய் (La Puye)
புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்

அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரியான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக்காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக்காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதையெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும்படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்களின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.

அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர்ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளிக்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரிகள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மருத்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப்பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.


செபம்:
குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ஜெரார்டு Gerhard von Villamagna
பிறப்பு: 1175 புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 13 மே 1245 வில்லாமாக்னா, புளோரன்ஸ்


திருக்காட்சியாளர், துறவி மக்தலேனா அல்பிரிசி Magdalena Albrici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, கோமோ Como, இத்தாலி
இறப்பு: 13 மே 1465, கோமோ, இத்தாலி

தூய பாத்திமா அன்னை (மே 13)

தூய பாத்திமா அன்னை (மே 13)
(13-05-2020) 
 
 

வரலாற்றுப் பின்னணி

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், மேலை நாடுகளில் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவே இருந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் அபாயம், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல், இப்படிப்பட்ட அபாயச் சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் பாத்திமா அன்னையின் காட்சியானது நடைபெற்றது.

 

1916 ஆம் ஆண்டு ஒருநாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோவா டா இரியா என்ற ஊருக்குப் பக்கத்தில் லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற மூன்று சிறுமிகள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய ஒரு வானதூதர் அவர்களிடம், “நான் விண்ணகத்திலிருந்து வந்திருக்கிறேன், நீங்கள் உலக அமைதிக்காக மன்றாடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஆண்டு அதாவது 1917 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள், முன்பு தோன்றிய அதே வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி வந்து, அந்த மூன்று சிறுமிகளுக்குத் தோன்றி, “நற்கருணை ஆண்டவரே! உம்மை நான் விசுவசிக்கிறேன். உம்மை நான் நம்புகிறேன், உம்மை நான் ஆராதிக்கிறேன், உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காத, உம்மை நம்பாத, உம்மை ஆராதிக்காத, உம்மை நேசிக்காத மக்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்ற ஜெபத்தை அவர்கள் சொல்லச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

 

அவர் விடைபெற்றுச் சென்ற சில மணி நேரத்தில் வானத்திலிருந்து வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற அந்த மூன்று சிறுமிகள் இருந்த இடத்திற்கு முன்பாக இருந்த மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினாள். அவள் அச்சிறுமிகளிடம், “ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி இங்கு வந்து நீங்கள் கூடவேண்டும். ஒவ்வொருநாளும் தவறாது ஜெபமாலை சொல்லவேண்டும். ரஷ்யா நாட்டு மக்கள் மனமாற ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். இக்காட்சியைக் கண்ட அந்த மூன்று சிறுமிகளுக்கு  மலைத்துப் போய் நின்றார்கள். அவர்கள் இக்காட்சியை தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. ஏதோ உளறுகிறார்கள் என்று  சொல்லி அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள்.

 

காட்சியில் வந்த பெண்மணி சொன்னதுபோன்று அவர்கள் மூவரும் ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லி, மக்களுடைய மனமாற்றத்திற்காக ஜெபித்தார்கள். ஜூலை 13 தேதி வந்தபோது அவர்கள் மூவரும் கோவா டா இரியா என்ற அந்த இடத்திற்குச் சென்றார்கள். சொன்னதுபோன்றே அந்தப் பெண்மணி அங்கு வந்தார். அவர் அவர்களிடம், நகரத்தின் வேதனை மிகுந்த காட்சியை காட்டினார். பின்னர் அவர், “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும், அனைத்து ஆனமாக்கங்களையும் விண்ணகப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்” என்ற ஜெபத்தை சொல்லச் சொல்லி ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள். பின்னர் அவர் அங்கிருந்து மறைந்துபோக சிறுமிகள் மூவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.

 

இந்த முறை அவர்கள் தாங்கள் கண்ட காட்சியை மக்களிடத்தில் சொன்னபோதும் மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவர்களை ஏளனமாகவே பார்க்கப்பட்டார்கள். தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் ஆகஸ்டு மாதம் 13 அங்கு செல்ல முடியவில்லை. 15 ஆம் தேதிதான் அங்கு சென்றார்கள். ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அவர்கள் அங்கு சென்றபோது, அப்பெண்மணி அவர்களுக்குச் தோன்றி, “மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து விடுபடவேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு சிறுமிகள் தாங்கள் கண்ட காட்சியையும், அதில் சொல்லப்பட்ட செய்தியையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்போது மக்கள் படிப்படியாக அதை நம்பத் தொடங்கினார்கள்.

 

1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் கோவா டா இரியா என்ற இடத்தில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அப்போது ஒளிவன்ணமாய் அப்பெண்மணி காட்சி தந்து, “நானே ஜெபமாலை அன்னை. நீங்கள் அனைவரும் இரஷ்யாவை எனது மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். மரியாள் தோன்றிய சமயத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் மூன்று சிறுமிகள் இருந்த அந்த இடம் மட்டும் நனையாமல் இருந்தது. மரியாள் அச்சிறுமிகளுக்கு வேறு பல காட்சிகளைத் தந்தார். அந்தக் காட்சிகளில், “பிரான்சிஸ்காவும் ஜெசிந்தாவும் விரைவிலே விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும், லூசியா மட்டும் மண்ணகத்தில் உயிர்வாழப் போவதாகும் சொன்னார். மரியா சொன்னது போன்றே லூசியா தவிர மற்ற இரண்டு சிறுமிகளும் இறந்து விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மரியா காட்சியில் சொன்னதுப் போன்று மக்கள் மனமாறாமல் தீயவழியில் சென்றதால் இரண்டாம் உலகப் போர் வந்தது..

 

அதன்பிறகு 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு உலக நாடுகள் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இப்போது இரஷ்யா இறைவழியைக் கண்டுகொண்ட நாடாக விளங்குகின்றது.

 

பாத்திமா காட்சிகள் உணர்த்தும் உண்மை

 

தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அன்னை தன்னுடைய காட்சிகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 

ஜெபமாலை சொல்லவேண்டும்

 

அன்னை தன்னுடைய காட்சியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லக்கூடிய செய்தி ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்பதாகும். ஜெபமாலை சொல்வதன்வழியாக நாம் மீட்பின் வரலாற்றை தியானித்துப் பார்க்கின்றோம். அதன்வழியாக நாம் அன்னையின் பாதுகாப்பையும் அன்பையும் உணர்கிறோம். ஆகவே, நாம் சொல்ல சொல்லக்கூடிய ஜெபமாலை சாதாரண ஒன்று அல்ல, அது வல்லமை நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.

 

இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சின்னப் பையன் என்ற அணுகுண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும் அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசுசபை குருக்கள் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.

 

அனுதினமும் ஜெபமாலை சொல்லி ஜெபிப்பதனால் எத்தகைய நன்மைகள் நடக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, நாம் ஜெபமாலை சொல்லும் மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.

 

தீய நாட்டங்களை விட்டுவிட்டு மனமாறவேண்டும்.

 

பாத்திமா அன்னை தன்னுடைய காட்சியில் வலியுறுத்திச் சொல்லும் இன்னொரு செய்தி மனமாற்றம் என்பதாகும். மக்கள் பல்வேறு தீய நாட்டங்களால் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகையோர் மனமாற்றம் பெற்று இறைவழியில் நடக்கவேண்டும் என்பது அன்னையின் அன்பான வேண்டுகோளாக இருக்கின்றது. நாம் உண்மையில் பாவ நாட்டங்களிலிருந்து விலகி மனம்மாறிய மக்களாக வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

கலிலேயாக் கடற்கரைக்கு மிக அருகே உள்ள பழமையான நகர் கொராசின். இன்றைக்கு அந்த நகர் அழிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது. இதற்குக் காரணம் மக்களுடைய தீச்செயல்கள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அந்நகரைப் பார்த்து, “கொராசின் நகரே ஐயோ உனக்குக் கேடு, தீர்ப்பு நாளில் உனக்குக் கிடக்கும் தண்டனை மிகுதியாகும்” என்றார். (மத் 11:21,22). அவர் சொன்னது போன்று நடந்தது. ஆகவே, மனமாற்றம் பெறாத ஒவ்வொருவரும் அழிவது உறுதி என்பதே இதிலிருந்து நாம் கண்டுணரக்கூடிய செய்தி.

 

ஆகையால், தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம். அனுதினமும் ஜெபமாலை சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

12 May 2020

புனித பங்கிராஸ்மறைசாட்சி May 12

இன்றைய புனிதர்
2020-05-12
புனித பங்கிராஸ்
மறைசாட்சி
பிறப்பு
289
சின்னாடா(Synnada), பிரிஜியா(Phrygia)
இறப்பு
304
அவுரேலியா(Aurelia), ரோம்(Rome)

கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்கிராஸ் தனது 14 ஆம் வயதிலேயே டயக்ளீசியன் காலத்தில் கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார். கிறிஸ்துவை நெருங்கி பின்பற்றிய பங்கிராசின் மாமா டெனிஸ் இவரை வளர்த்தார். நாளடைவில் டெனிஸ் கிறிஸ்துவுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். புனித பங்கிராஸ் உரோமையில் மறைசாட்சியாக இறந்தார். அவர் இறந்தபோது து508 ஆம் ஆண்டு திருத்தந்தை சிக்மாக்கஸ் இவரது கல்லறைமீது ஒரு பேராலயம் எழுப்பினார். இப்புனிதரின் கல்லறை உரோமில் அவுரேலியா சாலையில் உள்ளது. உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் அழகாக காட்சியளிக்கிறது.

இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்றபோது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழுதிய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதினார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி இமெல்டா லாம்பெர்டினி
பிறப்பு: 1321 போலோஞ்யா, இத்தாலி
இறப்பு: 12 மே 1333, போலோஞ்யா, இத்தாலி


அரசர்மகள், துறவி, போர்த்துகல் நாட்டு யோஹன்னா
பிறப்பு: 6 பிப்ரவரி 1452 லிசாபோன், போர்த்துகல்
இறப்பு: 12 மே 1490 அவைரோ, போர்த்துக்கல்


மறைசாட்சி டொமிடிலா
பிறப்பு: 1 ஆம் நூற்றாண்டு, உரோம்