புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 October 2020

திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ்Pope Saint Callixtus (Callixtus I)நினைவுத் திருவிழா : அக்டோபர் 14

இன்றைய புனிதர்: 
(14-10-2020)

திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ்
Pope Saint Callixtus (Callixtus I)

நினைவுத் திருவிழா : அக்டோபர் 14
இறப்பு : 222 
திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் (Pope Saint Callixtus I or Callistus I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கிபி 217இலிருந்து 222 வரை திருப்பணி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர்திருத்தந்தை செஃபரீனுஸ் ஆவார். கலிஸ்டசின் இறப்புக்குப் பின் அர்பன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 16ஆம் திருத்தந்தை ஆவார். இவரது திருவிழா அக்டோபர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் கல்லறைத் தொழிலாளர்களின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.
கலிஸ்டஸ் (பண்டைக் கிரேக்கம்: Callixtus அல்லது Callistus; இலத்தீன்: Callixtus அல்லது Callistus) என்னும் பெயர் "அழகுமிக்கவர்","எழில் நிறைந்தவர்" என்னு பொருள்படும்.
வரலாறு
முதலாம் கலிஸ்டஸ் திருப்பணி புரிந்த காலத்தில் உரோமை மன்னர்களாக இருந்தோர் எலகாபலுஸ் (Elagabalus) என்பவரும் அவருக்குப் பின் அலக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus) என்பவருமாவர். கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.
கலிஸ்டசின் வரலாறு பற்றிய குறிப்புகள் அவருடைய எதிரிகளின் எழுத்துகளிலிருந்தே தெரிய வருகின்றன. உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் கலிஸ்டசின் எதிரிகளுள் ஒருவர். அவர் தம் "Philosophumena" என்னும் நூலில் கலிஸ்டசைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
கலிஸ்டஸ் இளமைப் பருவத்தில் ஓர் அடிமையாக இருந்தார். அவரது தலைவர் கார்ப்போஃபொருஸ் (Carpophorus) என்பவர் கைம்பெண்களையும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் பராமரிப்பதற்காகக் கிறித்தவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை கலிஸ்டசின் பொறுப்பில் கொடுத்திருந்தார். அந்நிதியைத் தொலைத்துவிட்ட கலிஸ்டஸ் உரோமையிலிருந்து தப்பியோடினார். ஆனால் போர்த்துஸ் என்னும் இடத்தில் பிடிபட்டார். தப்பிப்பதற்காகக் கடலில் குதித்த கலிஸ்டசை அவருடைய தலைவரிடம் ஒப்படைத்தனர். 
கலிஸ்டசிடம் தாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரினார்கள். அவர் உரோமையிலிருந்த சில யூதர்களிடம் பணம் கடன் வாங்கவோ திரும்பப் பெறவோ சென்றபோது எழுந்த தகராறில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
கலிஸ்டஸ் கிறித்தவர் என்று தெரிந்ததும் சார்தீனியா தீவில் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டார். உரோமை அரசன் கோம்மொதுஸ் என்பவரை மார்சியா என்னும் பெண்மணி அணுகி, கிறித்தவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டார். எனவே ஹையசிந்த் என்னும் குரு சார்தீனியாவுக்குச் சென்று அங்கே கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்ட கலிஸ்டசுக்கும் பிறருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார். அப்போது கலிஸ்டசின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆன்சியும் என்னும் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே முதலாம் விக்டர் என்னும் திருத்தந்தையிடமிருந்து பெற்ற உதவித் தொகை கொண்டு வாழ்ந்துவந்தார்.
திருத்தந்தை செஃபிரீனுசின் உதவியாளர்
திருத்தந்தை முதலாம் விக்டர் இறந்ததும் செஃபிரீனுஸ் திருத்தந்தையாகப் பதவியேற்றார். இவர் திருத்தொண்டராக இருந்த கலிஸ்டசிடம் உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.
மேலும், கலிஸ்டஸ் திருத்தந்தை செஃஃபிரீனுசின் வலது கைபோல் செயல்பட்டு, அவரது ஆலோசனையாளராகவும் விளங்கினார்.
கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டம்
கலிஸ்டசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டகல்லறைத் தோட்டம் இன்று "புனித கலிஸ்டஸ் கல்லறைப் புதைநிலம்" (Catacomb of St. Callixtus) என்று அழைக்கப்படுகின்றது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒன்பது திருத்தந்தையர் அப்புதைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் "திருத்தந்தையரின் சிறுகோவில்" என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை கலிஸ்டஸ் அவருடைய பெயர்கொண்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கப்படவில்லை.
பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த அக்கல்லறைத் தோட்டப் பகுதி 1849இல் ஜொவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி (Giovanni Battista de Rossi) என்னும் அகழ்வாய்வு வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படல்
திருத்தந்தை செஃபிரீனுஸ் இறந்ததும் அவருக்கு நெருங்கிய துணையாளராகவிருந்த கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை பெற்ற ஓர் அடிமை திருத்தந்தையாகப் பதவி ஏற்பதற்கு அக்காலத்தில் தடையிருக்கவில்லை. கிபி ஐந்தாம் நூற்றாண்டில்தான் திருத்தந்தை முதலாம் லியோ சட்டம் இயற்றி, விடுதலை பெற்ற அடிமை திருத்தந்தையாக முடியாது என்று வரையறுத்தார்.
கலிஸ்டசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
திருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த இப்போலித்து என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில:
• கலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறித்தவக் கொள்கையை கலிஸ்டஸ் "ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.
• இருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.
• அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கலிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.
• விபசாரத்தில் ஈடுபட்டோர் மனம் திரும்பி பாவப் பரிகாரம் செய்தபின் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தவறு என்னும் குற்றச்சாட்டு.
ஆக, இப்போலித்து கடுமையான ஒழுக்க நெறியைப் போதித்தார். கலிஸ்டசோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். எனவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இப்போலித்துவின்ஆதரவாளர்கள் அவரை எதிர்-திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். இப்போலித்து தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.
மொந்தானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்த தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக் காலக் கிறித்தவ அறிஞரோடும் கலிஸ்டஸ் மோத வேண்டியதாயிற்று.
திருத்தந்தை கலிஸ்டசின் இறப்பு
"உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் பழைய ஏட்டில், புனித பேதுருவுக்கு அடுத்த படியாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் புனித கலிஸ்டசுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அவுரேலியா நெடுஞ்சாலையில் (Via Aurelia) அமைந்திருந்த கலிஸ்டசின் கல்லறை 1960இல் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்லறை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் என்பவரால் கட்டியெழுப்பப்பட்டது. அதில் காணப்பட்ட குறிப்பின்படி, கலிஸ்டஸ் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரைக் கம்புகளால் அடித்துக் கொன்றார்கள். அவரது உடல் ஒரு குழியில் வீசப்பட்டது. அதனருகே கலிஸ்டசே எழுப்பியிருந்த புனித மரியா கோவில் (Basilica of Santa Maria in Trastevere) உள்ளது.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (14-10-2020)

St. Callistus I

He was the Pope for the period from 217 to 222 A.D. He was sentenced to do work in the mines of Sardinia. But he was released at the intervention of one Hyacinthus, who represented Marcia, the favorite mistress of Emperor Commodus. Pope Victor-I gave Callistus a pension, since he was ill. He was a deacon and Pope Zephyrinus entrusted the burial chambers in the custody of Callistus. He became the Pope (Bishop of Rome) after Zephyrinus, defeating one Hippolytus in the election. Pope Callistus-I admitted into the Church, the converts, who have previously denied their Christian faith without any penance. Taking this as a chance, Hippolytus spread wrong details about Callistus that Callistus is admitting sinners into the Church. But Callistus said God’s grace has no limit. There is no sin that is unpardonable. God wishes that sinners should live with change of mind. St. Callistus was killed by tossing him into a well, for his Christian faith. But his body was recovered by one Asterius, a priest at night and buried it. But Asterius was arrested for this and was killed by throwing him from a bridge into the Tiber river. Callistus was honored as a martyr.

He is a patron of cemetery workers.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment