புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 August 2013

11ஆம் வாரம்

செவ்வாய்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

 கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-9

சகோதரர் சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப் பட்டபோதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி.

இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்கு பெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்; நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்.

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும். நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக்காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 146: 1-2. 5-6. 7. 8-9ய (பல்லவி: 1ய)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

1 என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! பல்லவி

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: `` `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்கு பெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.

அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார்.

அறப்பணிச் செய்ய தங்களை கிறிஸ்துவைப் போல ஏழையாக்கிக் கொண்டோர் பலருண்டு.

புனிதர்களில் சவேரியார். அந்தோணியார் என்றும் அறிவிக்கப்படாதவர்களில் இறையாடியார் பரதேசி பீட்டர் போன்றவர்கள் அறப்பணிக்காக தங்களை ஏழையாக்கிக் கொண்டார்கள்.

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் புகழ் பெற்ற சவேரியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பீட்டர், அதனை துறந்து அறப்பணியில் தன்னை உட்படுத்தி திருவோட்டை கையில் ஏந்தி பரதேசி பீட்டரானார்.

இன்றைக்கு அறப்பணிக்காக அர்ப்பணித்தவர்கள், ஏழ்மை வார்த்தைப்பாட்டினை ஏற்றவர்கள் தங்களை கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாங்கள் சேர்த்துள்ள சொத்துக்கள், தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டுள்ள அடைமொழிகள் அறப்பணிக்காக இல்லை அந்த பெயரில் தங்களது ஏழ்மை நிலையை மாற்றிக் கொள்ளவா?

காலத்தோடு தங்களை திருத்திக் கொள்ளாதவரை, நான் கீழ் இறக்குவேன் என்று கூறும் இறைவாக்கை அலட்சியப்படுத்திட வெண்டாம்.

அழைத்தவருக்காக நம்மை ஏழையாக்கி, அறப்பணிகளை செய்வோம்.

No comments:

Post a Comment