7ஆம் வாரம்
புதன்
முதல் ஆண்டு
முதல் வாசகம்
ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 4: 11-19
ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்; தன்னைத் தேடுவோர்க்குத் துணை நிற்கும். ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்; அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்; அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்; ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர். ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்; அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்களுடைய வழிமரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர். முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்; அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்; தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்; தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும். அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும். அதை விட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டுவிடும்; அழிவுக்கு அவர்களை இட்டுச்செல்லும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 165,168. 171,172. 174,175 (பல்லவி: 165ய)
பல்லவி: திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு.
165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. 168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. பல்லவி
171 உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும். 172 உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை. பல்லவி
174 ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40
அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், ``போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார்.
அதற்கு இயேசு கூறியது: ``தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
ஞானத்தை வைகறையில் தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.
கடவுளை வைகறையில் தேடு என்றே இதனுடைய பொருள் கொள்ளலாம்.
கடவுள் ஞானமாக இருக்கிறார்.
வைகறையில் அவரைத் தேடுவோர், அவரை கண்டடைவார்கள் என்பது மட்டுமல்ல, அவரைக் கண்டவர்கள் மகிழ்ச்சியால் நிரம்புவார்கள் என்பதும் உண்மையே.