புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 March 2013

4ஆம் வாரம் ஞாயிறு - C
மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம்
 வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9,10-12
அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ``இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்'' என்றார். இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 8)
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
 
இரண்டாம் வாசகம்
 கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21
சகோதரர் சகோதரிகளே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக
அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 15: 18
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.
 
நற்செய்தி வாசகம்
 உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32
அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.
தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.
அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
2013 Mar 10 SUNDAY
3ஆம் வாரம் வெள்ளி
முதல் வாசகம்
 எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே' என்று இனி சொல்லமாட்டோம்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9
ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: ``தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே!' என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்'' எனச் சொல்லுங்கள்.
அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான். அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவிசாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 81: 5உ-7ய. 7bஉ-8. 9-10b. 13,16 (பல்லவி:10,8ய)
பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
5உ நான் அறியாத மொழியைக் கேட்டேன். 6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன. 7ய துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன். பல்லவி
7bஉ இடி முழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன். 8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்! பல்லவி
9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10b உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி
13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். 16 உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4: 17
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.
 
நற்செய்தி வாசகம்
 நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, ``அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்டார்.
அதற்கு இயேசு, `` `இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை'' என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ``நன்று போதகரே, `கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது'' என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ``நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை'' என்றார்.
அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
அன்பு கொச்சைப்படுத்தப்படுகின்றதோ எனத் தோன்றுகின்றது.
ஊடகங்ளின் ஆதிக்கம் இன்று அன்பை தவறான வழிகாட்டுதலில் போதிக்கிறதோ எனத் தோன்றுகின்றது.
பிரதானமாக நம்முடைய அன்பு படைத்தவர்க்கே என்பதனை தெளிவுப்படுத்துகின்றார். படைத்தவர்க்கு மேலாக எந்த உறவையும் அந்த உறவிற்கு அன்பையும் நாம் கொள்வோமானால் படைத்தவர்க்கு நாம் ஏற்புடையவர் ஆக முடியாது என்பதனை தெளிவாக இயேசு கூறுகின்றார்.
எல்லாரையும் நேசிப்பது தான் வாழ்வு. நேசிப்பு இல்லையென்றால் நாம் சுவாசித்தாலும் நடைபிணங்களே. ஆனால் நாம் சுவாசிக்கச் செய்த படைத்தவர்க்கே நம்முடைய பிரதானமான அன்பு. அதனை தொடர்ந்து தான் மண்ணுலகில் நம்மை கொணர்ந்த பெற்றோர், இன்று நாம் வாழ நம்மோடு துணையிருக்கும் பிற உறவுகளுக்கு நம்முடைய அன்பு. இதனை தெளிவுற அறிந்து கொண்டால் உறவுகளிலே அந்த உறவுகளின் அன்பிலோ எந்த குழப்பமும் ஏற்படாது.