இன்றைய புனிதர்
2020-04-11
புனித.தனிஸ்லாஸ்
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
26 ஜூலை 1030
ஜெசப்பனா (Szcepanow)
இறப்பு
11 ஏப்ரல் 1079
போலந்து
புனிதர் பட்டம்: 1253
திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட்
இவர் போலந்து நாட்டில் ஜெசப்பனாவிலுள்ள, போக்கினா (Bochina) என்ற ஊரில் 1030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் நாள் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் அற்புதமாக, ஓர் அதிசய குழந்தையாக இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அதன்பின் பிரான்சிலுள்ள ஓர் கன்னியர்களின் பள்ளியில் இளம் வயது படிப்பை முடித்துவிட்டு, போலந்து நாட்டிற்கு சென்று குருமடத்தில் சேர்ந்து குருவானார்.
பின்பு 1072 ஆம் ஆண்டு கிராக்காவ்(Krakau) மறைமாவட்டத்தில் ஆன்ம குருவாக பணியாற்றியபின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது போலந்து நாட்டின் அரசராக இருந்த இரண்டாம் பொலோஸ்லாஸின் (Boleslaw) தாய் தனிஸ்லாசின் உறவினர். இவர் பல நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போனார். இவரின் இறுதி சடங்கை ஆயர் தனிஸ்லாஸ் அவர்கள் நிறைவேற்றிவைத்தார். இதனால் அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளை ஆயர் தனிஸ்லாஸ் அவர்களே தீர்த்து வைத்தார். பண ஆசை பிடித்தவனாகவும், இன்னும் பல தீய செயல்களுக்கும் அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்த அரசர் இரண்டாம் பொலோஸ்லாசை மனந்திருப்பினார்.
ஆனால் மீண்டும் அரசர் பாவ நிலைக்கே திரும்பினான். ஆயர் தனிஸ்லாஸ் மீண்டும் அவரைக் கண்டித்தார். இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை கொல்ல ஆள் அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், அவரை படையாட்கள் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசனே வந்து ஆயரை 1079 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெட்டிக் கொன்றான். இப்பெரிய பாவத்தை செய்ததால் போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, ஓசியாக் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து, தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்தான்.
ஆயர் தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயனாக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏராளமான ஏழைகளுக்கு உதவிசெய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார். 1253 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்களால், அசிசி நகரில் புனிதராக உயர்த்தப்பட்டார். ஆயர் தனிஸ்லாஸ் போலந்து நாட்டிற்குப் பாதுகாவலராக உள்ளார்.
செபம்:
அன்பான இறைவா! உமது மாட்சிமைக்காக தம் உயிரை இழந்த புனித தனிஸ்லாஸைப் போல, எம் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு ஆயர்களும் உமது மகிமைக்காக வாழ வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
சபைநிறுவுநர் ஹெலேனா குவேரா Helena Guerra
பிறப்பு: 23 ஜூன் 1835 லூக்கா Lucca, இத்தாலி
இறப்பு: 11 ஏப்ரல் 1914 இத்தாலி