புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 June 2020

பதுவைப் புனிதர் தூய அந்தோனியார் (ஜூன் 13)

இன்றைய புனிதர் :
(13-06-2020)

பதுவைப் புனிதர் தூய அந்தோனியார் (ஜூன் 13)

அந்தோனியார் (பெர்னாடின் என்பதுதான் அந்தோனியாரின் திருமுழுக்குப் பெயர். அந்தோனியார் என்பது தூய வனத்து அந்தோனியார் மீது அவர் கொண்ட பற்றினால் வைத்துக்கொண்டது) 1195 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்டின் இவருடைய தாய் தெரசா பயஸ் தவேரா ஆவார். இவருடைய குடும்பம் லிஸ்பனில் அரசராக இருந்த இரண்டாம் அல்போன்சாவுக்கு மிக நெருக்கமான குடும்பம். அந்தோனியார் தன்னுடைய பள்ளிக்கல்வியை லிஸ்பனில் உள்ள கதீட்ரல் பள்ளியில் படித்தார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் தூய அகுஸ்தினார் சபையில் சேர்ந்து கொயிம்ரா என்ற இடத்தில் குருவாக படிக்கத் தொடங்கினார். 1219 ஆம் ஆண்டு இவர் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

ஒருசமயம்  மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற தூய பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள் சிலர் கொல்லப்பட்டு, அவர்களுடைய உடலானது அந்தோனியார் இருந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதைப் பார்த்த அந்தோனியார் தானும் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மொரோக்கோ நாட்டிற்குச் சென்று, அங்கே மறைசாட்சியாக உயிர்துறக்கத் துணிந்தார். அதன்படி இவர் கப்பலில் மொரோக்கோ நாட்டிற்குப் பயணமானார். ஆனால் போகும் வழியில் நோய்வாய்ப்பட்டு, நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்படவே, தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்த போது கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக கப்பல் சிசிலியில் தஞ்சம் அடைந்தது. எனவே, அவர் சிசிலியில் தரை இறங்கினார். சிசிலியில்தான் அந்தோனியார் தூய பிரான்சிஸ் அசிசியாரைச் சந்தித்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர் அருகே இருந்த ஒரு பங்கில் மறைபோதகப் பணியை ஆற்றி வந்தார்.

இந்த நேரத்தில் போர்லி என்ற இடத்தில் குருப்பட்டம் நடைபெற்றது. குருப்பட்டத்திற்கு அந்தோனியாரும் சென்றிருந்தார். அந்த குருப்பட்டத்தில் மறையுரை ஆற்றவேண்டிய குருவானவர் வராமல் போகவே, சபைத் தலைவர் அந்தோனியாரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் மறையுரை ஆற்றத் தொடங்கினார். அவர் மறையுரை ஆற்றுவதைப் பார்த்த மக்கள் கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது, இறைவார்த்தையை அவர் விளக்கிய விதம், மடைதிரண்ட வெள்ளம் போல அவரிடமிருந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள் மெய்மறந்து நின்றார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தோனியாருடைய புகழ் எங்கும் பரவியது. அவர் லாம்பர்டி என்ற பகுதி முழுவதும் நற்செய்தி அறிவிக்கப் பணிக்கப்பட்டார்.

அந்தோனியார் இறைவார்த்தையை விளக்கிய விதத்தைக் கண்டு மக்கள் பல இடங்களிலிருந்தும் அவருடைய போதனையைக் கேட்க வந்தார்கள். அப்போது அவர் ஆற்றிய புதுமைகள் ஏராளம். ஓரிடத்தில் அந்தோனியாரின் போதனையைக் கேட்பதற்காக பெண்ணொருத்தி தன்னுடைய குழந்தையைத் தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு வந்துவிட்டார். அவர் அந்தோனியாரின் போதனையைக் கேட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது குழந்தை அருகே கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்து இறந்துபோனது. அப்போது அந்தப் பெண்மணி அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. எனவே அவர் அந்தோனியாரை அணுகி வந்து, தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி கெஞ்சிக் கேட்டார். அந்தோணியாரும் அவர்மீது இரக்கம்கொண்டு அந்தக் குழந்தையை உயிர்பித்துத் தந்தார்.

அந்தோனியார் வாழ்ந்த காலத்தில் நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் இல்லை என்று ஒருவன் மறுத்து வந்தான். அந்தோனியார் அவரிடத்தில், “நீ உன்னிடத்தில் இருக்கும் கழுதையை மூன்று நாட்கள் பட்டினி போடு. மூன்று நாட்களுக்குப் பிறகு அதை இங்கே அழைத்துக்கொண்டு வா. அப்போது அதன்முன்பாக உணவையும் நற்கருணை ஆண்டவரையும் வைப்போம். ஒருவேளை அது நற்கருணை ஆண்டவருக்கு அடிபணிந்தால் அப்போது நீ நற்கருணையில் ஆண்டவர் இருப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று அவரிடத்தில் சொன்னார். அந்த மனிதரும் அதற்குச் சரியென்று சொன்னார். அந்த மனிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கழுதைக்கு உணவேதும் தராமல் அந்தோனியாரிடத்தில் கொண்டுவந்தார். அந்த கழுதைக்கு முன்பாக உணவும், இன்னொரு பக்கம் அந்தோனியார் நற்கருணை ஆண்டவரைக் கையில் ஏந்தியும் இருந்தார். மூன்று நாட்கள் கழுதை ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததால் உணவையே உட்கொள்ளும் என்று அந்த மனிதர் நினைத்தார். ஆனால் அக்கழுதையை நற்கருணை ஆண்டவர் முன்பாக முழந்தாள்படியிட்டு வணங்கியது. இதைக் கண்ட அந்த மனிதர் அந்தோனியாருடைய காலில் விழுந்து, தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டார்.

ஒருசமயம் ரூமினி நாட்டில் இருந்த யூதர்கள் சிலர் அந்தோனியார் மீது பொறாமை கொண்டு, அவருடைய உணவில் விஷம் கலந்து கொடுத்து, கொல்லப் பார்த்தார்கள். ஆனால் அந்தோனியாரோ விஷம் கலந்த அந்த உணவின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து உண்டு, அவர்களுடைய  சூழ்ச்சியை வெற்றிகொண்டார். அந்தோனியார் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று மறைபோதகப் பணியைச் செய்ததால் அவருடைய உடல் தளர்வுற்றது. அவர் தான் விரைவிலே இறக்க இருக்கிறோம் என்பதை உணர்ந்தவராய் தன்னுடைய உடலை பதுவா நகருக்கு எடுத்துகொண்டு போகும்படியாக தன்னுடைய சகோதரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அர்செல்லா நகரை அடைந்தபோதே அவருடைய ஆவி இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தது. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 36. பின்னர் சகோதரர்கள் அவரை பதுவா நகரில் அடக்கம் செய்தார்கள். அந்தோனியார் இறந்த அடுத்த ஆண்டிலேயே அவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

அவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1263 ஆண்டு, அவருடைய உடலை இடமாற்றம் செய்யும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடைய கல்லறையைத் திறந்துபார்த்தபோது அவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது. இதைப் பார்த்த பொனவெந்தூர், “ஓ பரிசுத்த நாவே, நீ எப்போதும் இறைவனைப் போற்றி புகழ்ந்ததால், அழியாமல் காக்கப்பட்டாய்” என்றார். அந்தோனியார் இறந்து எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருடைய நாவு இன்றைக்கும் அழியாமல் இருப்பதைப் பார்க்கும்போது அந்தோனியார் தன்னுடைய நாவினால் இறைவனுக்கு எந்தளவுவுக்கு மகிமை சேர்த்திருப்பார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 1946 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் பத்திநாதர் அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தினார்.

Saint of the Day : (13-06-2020)

St. Anthony of Padua

St. Anthony was born on August 15, 1195 at Lisbon in an aristocratic and wealthy family and his birth name was Fernando Martins de Bulhoes. His father was Vincente Martins de Bulhoes and mother Teresa Pais Taveira. Anthony’s father was the descendant of the famous Godfrey de Bouillin, the commander of the First Crusade (1095\-1101) and his mother was the descendant of Froila\-I, the fourth king of Asturia. He first entered into the community of Canons Regular at the Abbey of St. Vincent in Lisbon. At that time some five friars of the Franciscan Order were martyred in Morocco on January 16, 1220. On hearing the news of the martyrdom of the Franciscan Friars, Anthony wanted to join the Franciscan Order to become a martyr for Christ. Anthony joined the small hermitage in Olives and adopted the name Anthony, in the name of the church there dedicated to St. Anthony the Great. He set out for Morocco for missionary work but could not go there due to sickness but instead went to Italy. On one ordination occasion, the head of the hermitage where St. Anthony was staying called Anthony to give the sermon, as the Dominican friars were unprepared for it and the head of the hermitage could not find any suitable person from the Franciscan order to give sermon on that day. Anthony’s rich voice and the entire theme and substance of his sermon and his eloquence attracted everyone present there. After this incident Anthony was commissioned to preach Gospel throughout Lombardy in Northern Italy.

Many miracles happened at the hands of Anthony when he was alive.

One day a horse which was fasting for three days, even refused to take oats placed before it, till it had knelt down and adored the Blessed Sacrament held by St. Anthony in his hands. This miracle happened in a place called Rimini.

In another occasion some Italian heretics gave poisoned food to St. Anthony. But St. Anthony made the poisoned food eatable by the sign of the cross.

He once preached to the fishes by standing on the bank of river Brenta near Padua.

Once when St. Anthony was on his way to Italy, he stayed in the castle of Chateauneuf\-la\-Foret in the province of Limousine. In that palace Infant Jesus appeared to St. Anthony and came down and stood on the Bible held by St. Anthony. On the basis of this apparition only, St. Anthony of Padua is depicted in art holding a bible on which the Infant Jesus stands.

In yet another occasion St. Anthony and his companions stayed in the house of a poor woman during a journey and she gave bread and wine to St. Anthony and others. But she forgot to close the tap of the wine\-barrel and the wine was wasted. In that time one of Anthony’s companions broke the glass tumbler by inadvertence. St. Anthony started to pray and suddenly the broken glass tumbler was made whole and the wine\-barrel filled anew with wine.

St. Anthony died on June 13, 1231 when he was just 36 years old. St. Anthony was canonized by pope Gregory\-IX on May 30, 1232 within one year of his death. He was also proclaimed Doctor of the Church by pope Pius\-XII on January 16, 1946. His body was exhumed many years after his death and it was found that his tongue was found incorrupt.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூன் 13)

✠ பதுவை புனிதர் அந்தோனியார் ✠
(St. Anthony of Padua)

மறைப்பணிகளின் மறைவல்லுநர், அவிசுவாசிகளின் சம்மட்டி, கோடி அற்புதர்:
(Evangelical Doctor, Hammer of Heretics, Professor of Miracles)

பிறப்பு: ஆகஸ்ட் 15, 1195
லிஸ்பன், போர்ச்சுக்கல்
(Lisbon, Portugal)

இறப்பு: ஜூன் 13, 1231 (வயது 35)
பதுவை நகர், இத்தாலி
(Padua, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு மற்றும் புனிதர் பட்டம்: மே 30, 1232 
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் அந்தோனியார் திருத்தலம், பதுவை, இத்தாலி
(Basilica of Saint Anthony of Padua, Italy)

நினைவுத் திருவிழா: ஜூன் 13

பாதுகாவல்:
அமெரிக்க பழங்குடியினர் (American Indians); பிரேசில் (Brazil); முதியோர்; நற்கருணை பக்தி (Faith in the Blessed Sacrament); மீனவர்; அறுவடை; குதிரைகள்; தொலைந்துபோன பொருட்கள்; தொலைந்துபோன மக்கள்; தொலைந்துபோன ஆன்மாக்கள்; தபால்; மாலுமிகள்; ஒடுக்கப்பட்டோர்; வறியவர்; போர்ச்சுகல் (Portugal); கர்ப்பிணிகள்; பசியுறுவோர்; பயணம் செய்வோர்; பரிசல்காரர்; லிஸ்பன் (Lisbon); ஃபிரான்சிஸ்கன் சபையினர் கையகப்படுத்தியுள்ள புனித பூமி (Franciscan Custody of the Holy Land); கப்பல் பணியாளர்கள் (Mariners); டிகுவா இந்தியர்கள் (Tigua Indians); சுற்றுலா பணிப்பெண்கள் (Travel hostesses); பயணிகள் (Travellers); டுபுரன் (Tuburan); செபு (Cebu); எதிர்-புரட்சியாளர்கள் ( Counter-Revolutionaries); சேன் அன்டோனியோ டி பதுவா பங்கு (San Antonio De Padua Parish); டைடை (Taytay) (Rizal).
 

“ஃபெர்னாண்டோ மார்ட்டின்ஸ் டி புல்ஹோஸ்” (Fernando Martins de Bulhões) எனும் இயற்பெயர் கொண்ட, பதுவை புனிதர் அந்தோனியார், போர்ச்சுகீசிய கத்தோலிக்க குருவும், “ஃபிரான்சிஸ்கன்” (Franciscan Order) சபை துறவியும் ஆவார். இவர் “லிஸ்பன்” (Lisbon) நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம், இத்தாலி நாட்டிலுள்ள “பதுவை” (Padua) நகரில்தான் இவர் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும், அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் “பதுவைப் பதியர்” என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் மரித்த மறு வருடமே இவருக்கு புனிதர் பட்டம் பெற்றுத் தந்தது.

வாழ்க்கைக் குறிப்பு:
இளமை: 
ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் (Portugal) நாட்டின் தலைநகரான லிஸ்பன் (Lisbon) மாநகரிலே கி.பி. 1195ம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள், 15ம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் “வின்சென்ட் மார்டின்ஸ்” (Vicente Martins), மற்றும் “தெரெசா பைஸ் டவேய்ரா” (Teresa Pais Taveira) ஆவர். இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவர் கூரிய நுண்ணறிவு படைத்தவர் ஆவார்.

புனித அகுஸ்தீன் சபையில்:
(Augustinian Abbey of Saint Vincent)
ஆன்மீக குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த ஃபெர்னாண்டோ தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி, அப்போதைய போர்ச்சுகலின் தலைநகரான “கொயிம்ப்ரா” (Coimbra) என்னும் நகருக்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

மொராக்கோவில் (Morocco) வேத சாட்சிகளாக மரித்த ஐந்து ஃபிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், 1220ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதத்தில் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த ஃபெர்னாண்டோ, தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே கி.பி. 1221ம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி, ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

ஃபிரான்சிஸ்கன் சபையில்:
ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் ஃபெர்னாண்டோ என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதிய பெயர் பெற்றுக்கொண்டார். சிறிது காலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் மறையுரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்தும் ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும், இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் "கோடி அற்புதர்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை, இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது, மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தனவாம். இன்னொரு முறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை, அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.

மற்றுமொறு புதுமை: 
இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகளுக்கு அதிகமாக புதுமைகள் செய்ய தடை விதித்து கட்டளையிட்டார். ஒருநாள், இவர் அன்றைய தினம் செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின்னர், மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப, இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்க வைத்ததாகவும், அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும், புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் எண்ணற்ற புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது. 

இறப்பு:
கி.பி. 1231ம் ஆண்டு, பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும், நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13ம் நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 35. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப் பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டபோது, அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.

1946ம் ஆண்டு, வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம் பயஸ் (Venerable Pope Pius XII), புனிதர் அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.