புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 April 2020

புனிதர் கோன்ராட் ஏப்ரல் 21

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 21)

✠ புனிதர் கோன்ராட் ✠
(St. Conrad of Parzham)
ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர்:
(German Franciscan Lay Brother)

பிறப்பு: டிசம்பர் 22, 1818
பேட் கிரீஸ்பச், பஸ்சவ், பவேரியா அரசு
(Bad Griesbach, Passau, Kingdom of Bavaria)

இறப்பு: ஏப்ரல் 21, 1894
அல்டோட்டிங், பவேரியா அரசு
(Altötting, Kingdom of Bavaria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
ஃபிரான்சிஸ்கன் சபை
(Roman Catholic Church)
(Franciscan Order)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: கி.பி. 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 21

புனிதர் கோன்ராட், ஒரு ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர் (German Franciscan lay brother) ஆவார். இவர், பவேரியா அரசிலுள்ள “அல்டோட்டிங்” (Altötting) எனுமிடத்திலுள்ள “கபுச்சின் துறவு மடத்தில்” (Capuchin friary) சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக, சுமை தூக்கும் பணியாளாக (Porter) பணியாற்றினார். அப்பணியின்மூலம், அவர் தனது ஞானத்திற்கும் பரிசுத்தத்திற்குமான ஒரு பரவலான புகழைப் பெற்றார். கத்தோலிக்க திருச்சபை, இவரை ஒரு புனிதராக ஏற்றுள்ளது.

1818ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று பிறந்த இப்புனிதருடைய திருமுழுக்குப் பெயர், ஜான் (John) ஆகும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய தந்தையாரின் பெயர், “பர்தொலோமவுஸ் பிர்ண்டோஃபெர்” (Bartholomäus Birndorfer) ஆகும். இவருடைய தாயாரின் பெயர், “கெர்ட்ரூட் நியேடேர்மையர்” (Gertrude Niedermayer) ஆகும். இவர், தமது பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை ஆவார். இவர் பிறந்தது, அன்றைய பவேரியா அரசின் பாகமான “பேட் கிரீஸ்பச்” (Bad Griesbach) நகரிலுள்ள பண்ணை வீடாகும். இந்நகர், தற்போது ஜெர்மன் நாட்டின் பாகமாகும்.

இவரது சிறுவயது முதலே இவர் தமது மனத்தாழ்ச்சி மற்றும் தனிமையில் விருப்பம் ஆகியன மூலம் தமது எதிர்கால புனிதத்தன்மை பற்றின அறிகுறிகளைக் கொடுத்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின் அவருடைய பக்தி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தொலைதூர இடங்களில் அவர் அடிக்கடி வருகை தரும் காலநிலைக்கு வருகை தந்திருந்தார். அவர் ஆசிர்வதிக்கப்பட்ட தேவ அன்னையின்பால் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பக்தியுடன் செபமாலை செபித்தார். பண்டிகை நாட்களில், அவர் ஆசீர்வதிக்கப்பட்ட தேவ தாயின் சில தொலைதூர திருத்தலங்களுக்கு திருயாத்திரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய திருயாத்திரைகளின்போது, நடைபயணமாகவே செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். வழி நெடுகிலும் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்த இவர், திரும்பி வந்து சேரும்வரை உண்ணா நோன்பிருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமது சிறுவயதில் குடும்ப பண்ணை நிலங்களில் வேலை செய்துவந்த ஜான், தமது 14 வயதில் தமது தாயாரை இழந்தார். 31 வயதில், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மதச்சார்பற்ற உலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரிடமிருந்த அவரது பரம்பரை சொத்துக்களை அப்புறப்படுத்தியபிறகு, முதலில் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of Saint Francis) இணைந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கபுச்சின் ஃபிரான்சிஸ்கன் (Capuchin Franciscan friars) துறவியரிடையே, ஒரு உறுதிப்பாடுகள் ஏற்காத பொதுநிலை சகோதரராக இனைந்தார். அங்கே, புகுமுக பயிற்சியில் (Novitiate) இணைந்த வேளையில், “கோன்ராட்” (Conrad) எனும் ஆன்மீகப் பெயரை ஏற்றார். அப்பெயரிலேயே அவர் தமது வாழ்நாள் முழுதும் அறியப்பட்டார்.

சுமைதூக்கும் சகோதரரர் (Brother Porter) :
தமது இறுதி உறுதிப் பிரமாணங்களை ஏற்றவுடன், அவர் “அல்டோட்டிங்” (Altötting) நகரிலுள்ள “புனித ஆன்” துறவு மடத்திற்கு (Friary of St. Ann) அனுப்பப்பட்டார். இத்துறவு மடமானது, பவேரியாவின் தேசிய திருத்தலமான அன்னை மரியாளின் திருத்தலத்திற்கு சேவை புரிந்தது. சகோதரர் கோன்ராடுக்கு, அங்கே சுமை தூக்கும் பணி வழங்கப்பட்டது. அவர், தமது மரணகாலம் வரை அங்கே சுமை தூக்கும் பணியை செய்துவந்தார். அவர்களிருந்த “அல்டோட்டிங்” (Altötting) நகரம் ஒரு பெரிய மற்றும் பரபரப்பான நகராகையால், அங்கே துறவியரின் சுமை தூக்குபவராக பணியாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

சகோதரர் கோன்ராட், தமது பணிகளில் ஊக்கமுள்ளவராகவும், கவனமுள்ளவராகவும் இருந்தார். வார்த்தைகளிலிருந்து விலகி, ஏழைகளுக்கு ஆர்வமுடன் உழைப்பவராகவும், அன்னியரை வரவேற்பதில் ஆர்வம் காட்டினார். சகோதரர் கோன்ராட் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியிடத்தின் பணியை நிறைவேற்றினார். உடலின் மற்றும் ஆன்மாவின் தேவைகளுக்கு ஏற்ப, நகரத்தின் மக்களுக்கு உதவினார்.

கோன்ராட் மிகவும் சிறப்பு வழியில் மெளனத்தை, அமைதியை நேசித்தார். தாம் பணியில்லாமல் இருக்கும் வேளைகளில், கதவின் மறைவில் நின்றபடி நற்கருணையாண்டவரைப் பார்த்தவாறு நின்றிருப்பார். இரவு நேரத்தில் அவர் பல மணி நேரம் உறங்காமல் ஜெபத்திற்கு நேரத்தை செலவிடுவார். அவர் ஒருபோதும் ஓய்வு எடுப்பதில்லை என்று பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு, பக்தியின் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.

41 வருடங்கள் தாம் சேவை செய்த துறவு மடத்திலேயே 1894ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் நாளன்று, சகோதரர் கோன்ராட் மரித்தார்.

அவருடைய வாழ்நாளில், சகோதரர் கோன்ராட் தாம் சந்தித்த மக்களின் இதயங்களை வாசிக்க முடிந்ததாகக் கருதப்பட்டார். மற்றும், தீர்க்கதரிசன பரிசுகளையும் கொடுத்தார்.

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)

இன்றைய புனிதர்

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)
இயேசுவுக்காக வாழ்வோருக்கு துறவுமடம்தான் உண்மையான விண்ணகம் – தூய ஆன்செல்ம்

வாழ்க்கை வரலாறு

ஆன்செல்ம், 1033 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஆவோஸ்டா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தாய் பக்திமிக்க பெண்மணி. அதனால் அவர் ஆன்செல்மை பக்தி நெறியில் வளர்த்து வந்தார். ஆனால் அவர் சிறுது காலத்திலேயே இறந்துபோனதால் ஆன்செல்ம் தன்னுடைய தந்தையின் பராமரிப்பில் வளரவேண்டிய சூழல் உருவானது. ஆன்செல்மின் தந்தையோ அவரை பலவாறு கொடுமைப் படுத்தினார். அதனால் அவருடைய கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஆன்செல்ம் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கடைசியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பெக் என்னும் இடத்தில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, துறவியாக மாறினார். ஒருசில ஆண்டுகளிலே அந்த மடத்தின் தலைவராக மாறினார். ஆன்செல்மிற்கு இறைவன் நிறைந்த அறிவையும் ஞானத்தையும் கொடுத்திருந்தார். அதனால் நிறைய புத்தகங்களை எழுதினார். குறிப்பாக இவர் எழுதிய ‘மோனோலாக்கியம்’, ‘பிராஸ்லாக்கியம்’ ‘கடவுள் ஏன் மனிதர் ஆனார்’ போன்ற புத்தகங்கள் எல்லாம் அமரத்தத்துவம் வாய்ந்தவை. இந்தப் புத்தகங்களின் வழியாக ஆன்செல்ம் இறைவனுடைய இருத்தலை இறையியல் மற்றும் மெய்யியல் சிந்தனையோடு விளங்கினார்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கும்போது 1093 ஆம் ஆண்டு இவர் கண்டர்பரி நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு நிறைய காரியங்களை மிகத் துணிச்சலாகச் செய்தார். திருச்சபையின் புனிதத்தையும் மாண்பினை கட்டிக்காத்து உண்மையின் உரைகல்லாக விலகினார். இதனால் சினம்கொண்ட அரசன் இரண்டாம் வில்லியம் இவரை நாடு கடத்தினார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேறொரு இடத்திலிருந்த ஆன்செல்ம், மன்னன் இறந்தபிறகு மறைமாவட்டத்திற்குத் திரும்பினார். மறைவாட்டத்திற்குத் திரும்பி வந்த பிறகும்கூட அதன்பிறகு வந்த நான்காம் ஹென்றி என்ற மன்னன் ஆயர் ஆன்செல்முக்கு மிகப்பெரிய தலைவலியாய் இருந்து வந்தான். அவனும் ஆயரை நாடு கடத்தினான். ஒருசில ஆண்டுகள் வெளியே இருந்துவிட்டு, மீண்டுமாக மறைமாவட்டத்திற்கு வந்தார் ஆன்செல்ம். மன்னர்கள் அவருக்கு எவ்வளவுதான் தொந்தரவு கொடுத்தாலும் அவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து திருச்சபைக் கட்டிப் காத்தார். இவர் 1109 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1720 ஆண்டு புனிதர் பட்டமும் மறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஆன்செல்மின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


1. மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொல்வோம்

தூய ஆன்செல்மின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் மனவுறுதி இருந்ததும் அதன்மூலம் அவர் உண்மையை உரக்கச் சொன்னதும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. ஆன்செல்ம் கண்டர்பெரி நகரின் ஆயராக இருந்தபோது நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அத்தகைய தருணங்களில் அவர் யாருக்கும் ஏன் அரசருக்குக்கூட பயப்படாமல், உண்மையை உரக்கச் சொன்னார். தூய ஆன்செல்மை நினைவுகூருகின்ற நாம், அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏதென்ஸ் நகரில் இருந்த இளைஞர்களிடம் தவறான கருத்துகளைச் சொல்லி, அவர்களைத் திசை திரும்புகின்றார் என்ற குற்றத்திற்காக சாக்ரடீஸ் நீதிமன்ற விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிக்கோ சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்க விருப்பமில்லை எனவே அவர் சாக்ரடீசிடம், “ஏதென்ஸ் நகரை விட்டுச் சென்றுவிடுங்கள். அல்லது உங்கள் போதனையை நிறுத்தி விடுங்கள்” என்றார். அதற்கு சாக்ரடீஸ், “ஏதென்ஸ் நகரை விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், இருளில் பிறர் தடுமாறுவதைப் பார்த்து நான் அமைதி காக்க முடியாது. எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்” என்றார். “அப்படியானால் மரணதண்டனை மட்டுமே வழி” என்றார் நீதிபதி.

“எனக்கு மரணதண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழடைவீர்கள். இல்லையென்றால் உங்களை யாருக்குமே தெரியாது” என்று கம்பீரமாகச் சொன்னார் சாக்ரடீஸ்.

சாவுக்கு அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்ன சாக்ரடீஸ் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். தூய ஆன்செல்மும் அப்படித்தான் மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொன்னார்.

ஆகவே, தூய ஆன்செல்மின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.