இன்றைய புனிதர் :
(20-05-2020)
தூய சியன்னா பெர்னார்டின் (மே 20)
“பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் இருப்பதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூயக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன” (திப 3: 6-7)
வாழ்க்கை வரலாறு
பெர்னார்டின், 1380 ஆம் அண்டு சியன்னாவில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். எனவே இவர் தனது அத்தையின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். பெர்னார்டினுக்கு 20 வயது நடக்கும்போது சியன்னாவில் பயங்கரக் கொள்ளை நோய் – பிளேக் நோய் – ஏற்பட்டு நிறையப் பேர் இறந்துபோனார்கள். இதைப் பார்த்த பெர்னார்டின், தன்னோடு ஒருசில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் பணிசெய்தார். இதனால் அவருடைய உடல்நலம் குன்றியது. அவருடைய தொண்டையும் பாதிக்கப்பட்டது. அப்படியிருந்தபோதும் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை உணர்ந்து, அவர்களுக்கு மத்தியில் பணிசெய்து வந்தார்.
இது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து பெர்னார்டின் இறைவனின் சிறப்பான அழைப்பினை உணர்ந்தார். எனவே இவர் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு பிரான்சிஸ்கன் சபையில் போய் சேர்ந்தார். அங்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் செபத்திலும் தவத்திலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் நாட்களைச் செலவழித்தார். இதற்கிடையில் அவர் தொண்டை சரியாகி, நல்ல குரல்வளம் பெற்றார்.
இதன்பிறகு இவர் ஊர்கள்தோறும் சென்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் வல்லமையோடு அறிவிக்கத் தொடங்கினார். இதனால் பெர்னார்டினின் போதனையைக் கேட்க ஏராளமான பேர் கூடிவந்தார்கள். பெர்னார்டின் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை வல்லமையோடு அறிவித்த தருணத்தில், இயேசுவின் திருநாமத்தைப் பற்றியும் போதிக்கத் தொடங்கினார். இயேசுவின் திருநாமம் வல்லமையானது, இதனை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தால் நிறைந்த பலன் கிடைக்கும் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார். சில நேரங்களில் இவர் இயேசுவின் திருநாமம் (IHS) பதித்த அட்டைகளை மக்களுடைய தலையில் வைத்து ஜெபித்தார். அதனால் ஏராளமான புதுமைகள் நடைபெற்றன.
பெர்னார்டினைப் பிடிக்காத ஒருசிலர், அவரைப் பற்றி திருத்தந்தையிடம் மூன்றுமுறை பத்தி வைத்தார்கள். ஆனால் அவருக்கு எதிராக எந்த சான்றும் நிருபிக்கப்படாததால், அவரை திருத்தந்தை ஒன்றும் சொல்லவில்லை. சிலநேரங்களில் பெர்னார்டின் போதிப்பதைக் கேட்பதற்காக முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிவந்தார். அவர்களுக்கெல்லாம் அவர் ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைத்தார். இதனால் இறைமக்கள் அனைவரும் அவரை ‘மக்கள் போதகர்’ என்ற அழைத்து வந்தார்கள்.
இப்படி ஆண்டவருடைய கைகளில் வல்லமையுள்ள கருவியாகச் செயல்பட்ட பெர்னார்டின், 1444 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1450 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பெர்னார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவின் திருநாமத்தை நம்பிக்கையோடு உச்சரிப்போம்
தூய பெர்னாட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரு சிந்தனை இயேசுவின் திருப்பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கவேண்டும். அப்படி நாம் உச்சரித்தால் அதனால் நிறைய ஆசிர்வாதன்களைப் பெறுவோம் என்பது உறுதி என்பதாகும்.
தூய பெர்னார்டின் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரை உலகறியச் செய்தார். அத்திருப்பெயரை கொண்டே நிறைய மக்களுக்கு ஆசிர்வாதங்களைப் பெற்றுத் தந்தார். தூய பெர்னார்டினைப் போன்று இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
1274 ஆண்டு, திருத்தந்தை பத்தாம் கிரகோரியார் திருத்தந்தையாக இருந்தபோது, திருச்சபை எதிரிகளிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்தது. அத்தகைய தருணத்தில் அவர் செய்வதறியாது திகைத்தார். எனவே அவர் லயோன்ஸ் என்ற இடத்தில் ஆயர்களையும் கர்தினால்களையும் கூட்டி, பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று கேட்டார். அப்போது ஒருசிலர், “இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே, அதே நேரத்தில் எளிய வழி இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்பதுதான்” என்றார்கள். திருத்தந்தையும் அதற்குச் சரி என்று சொல்ல, திருச்சபை முழுவதும் இயேசுவின் திருபெயரைச் சொல்லி, பிரச்சனைகள் ஓயுமாறு ஜெபித்தது. இதனால் அந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்தது. அதன்பிறகு திருச்சபையில் அமைதியான ஒரு சூழ்நிலை உருவானது.
இயேசுவின் திருப்பெயருக்கு எத்துனை வல்லமை இருக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
ஆகவே, தூய பெர்னார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.