புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 March 2020

ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா march 24

இன்றைய புனிதர்
2020-03-24
ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா Katharina von Schweden
பிறப்பு
1331
ஸ்வீடன்
இறப்பு
மார்ச் 1381,
வாட்ஸ்டேனா Vadstena, ஸ்வீடன்
பாதுகாவல் : குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள்

இவர் பிரிகிட்டா Brigitta, உல்ஃப் Ulf என்பவரின் மகளாகப் பிறந்தார். தனது 14 வயதிலேயே எக்கார்ட் Eggart என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் திருமணம் ஆனபிறகும் தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ வேண்டுமென்று தங்களுக்குள் முடிவெடுத்தனர். இருவரும் சேர்ந்து கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அப்போது மிரிகிட்டாவின் தாய் 1349 ஆம் ஆண்டு உரோம் சென்று அங்கு ஓர் சபையை நிறுவினார். கத்தரீனா 20 வயதிலிருக்கும் தன் கணவர் இறந்துவிட்டார். இதனால் கத்தரீனாவும் உரோம் சென்று தன் தாய்க்கு உதவினார். இவர் தான் வாழும் வரை தன் தாயுடன் வாழ்வதாக உறுதி செய்தார். கத்தரீனாவும், தாயும் சேர்ந்து 1372 மற்றும் 1373 ம் ஆண்டுகளில் புனித நாட்டிற்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது 1373 ஜூலை 23 ல் தாய் இறந்துவிட்டார். கத்தரீனா தன் தாயின் உடலை ஸ்வீடனில் உள்ள வாட்ஸ்டேனாவிற்கு Vadstena கொண்டு சென்று அடக்கம் செய்தார். அதன்பிறகு கத்தரீனா தனது 30 ஆம் வயதில் துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அத்துறவற மடத்தையே தன் வீடாகக் கொண்டார். நாளடைவில் இவரே அம்மடத்தின் தலைவியாகவும் பொறுப்பேற்றார்.


செபம்:
வார்த்தை மனுவுருவானவரே! எம்மை உமது இறைவார்த்தைகளால் நிரப்பியருளும். இறைவார்த்தைகளை எம் உள்ளத்தில் உள்வாங்கி அவற்றின் படி நடக்கச் செய்தருளும். நாங்கள் கொடுத்துள்ள கற்பு என்னும் வார்த்தைப்பாட்டில் இறுதிவரை பிரமாணிக்கமாய் வாழச் செய்தருளும், இதன் வழியாக உமது மேலான வியத்தகு மறைப்பொருளை மனிதர்களுக்கு எடுத்துரைக்க உதவி புரியும். எம்வாழ்வில் தொடர்ந்து உம்மை வழிபடவும், உம்மீது பற்றுக்கொண்டு, இன்றைய புனிதரைப் போல, இறுதிவரை உமக்காகவும் வாழ செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

டிரியன்ட் நகர் குழந்தை சீமோன் Simon von Trient
பிறப்பு : 1472 டிரியண்ட் Trient, இத்தாலி
இறப்பு : 1475 இத்தாலி

தூய தூரியியுஸ் (மார்ச் 23)

இன்றைய புனிதர் : 
(23-03-2020) 

தூய தூரியியுஸ் (மார்ச் 23)
ஆண்டவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4: 18-19)

வாழ்க்கை வரலாறு

தூரியியுஸ், 1538 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 16 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள மயோர்க்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். அப்படியிருந்தாலும் இவர் சிறுவயதிலே மிகவும் பக்தியாக வளர்ந்து வந்தார். குறிப்பாக மரியன்னையின் மீது எப்போதும் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார். அது மட்டுமல்லாமல், பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தன்னுடைய மதிய உணவை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து தான் பசியோடு இருந்தார்.

தொடக்கக் கல்வியை வல்லாடோலிட் பள்ளிக்கூடத்தில் கற்ற தூரியியுஸ், உயர்கல்வியை சல்மான்கா பல்கலைக்கழகத்தில் கற்றார் அங்கு கற்ற கல்வியின் பயனாக அவர் வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞராக உயர்ந்த பின்பு தூரியியுஸ் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்துவந்தார். தூரியியுசிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு மன்னர் இரண்டாம் பிலிப் அவரை க்ரானடா பகுதியில் நீதிபதியாக நியமித்தார். நீதிபதியாக உயர்ந்த பின்பும் தூரியியுஸ் தன்னுடைய பணியினைச் செவ்வனே செய்து வந்தார்.

இதற்கிடையில் தூரியியுசுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அதற்கான கல்வியைக் கற்று 1578 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாக மாறிய பின்பு, இவர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்துவிட்டு இவரை இரண்டு ஆண்டுகள் கழித்து பெருவின் ஆயராக உயர்த்தினார்கள். எனவே, இவர் தன்னுடைய சொந்த மண்ணைவிட்டு பெருவிற்கு வந்தார். பெருவிற்கு வந்த சமயத்தில் மக்கள் கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே இவர் முழு மூச்சுடன் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய 50 ஆயிரம் மைல்களுக்கு கால்நடையாகவே பயணம் செய்து ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இவர் ஆற்றிய நற்செய்திப் பணியின் வழியாக நிறையப் பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். தூய லீமா ரோஸ், தூய மார்டின் தி போரஸ் போன்றோர் எல்லாம் இவர் ஆற்றிய நற்செய்திப் பணியினால் கிறிஸ்துவ மறையைத் தழுவி புனிதர்கள் ஆனார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தூரியியுசின் பணிகள் இதோடு நின்றுவிடவில்லை, நிறையப் பள்ளிக்கூடங்களையும் மருத்துவ மனைகளையும் ஏன் குருமடத்தையும் கட்டி எழுப்பினார். இதனால் ஏரளாமான மக்கள் பயன் அடைந்தார்கள்.

தூரியியுஸ் இடையராது பணிகள் செய்து வந்ததால், அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே, அவர் 1606 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 23 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு, திருத்தந்தை 13 ஆம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பகிர்ந்துண்டு வாழ்தல்

தூய தூரியியுசிடமிருந்து நாம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் இவர் பகிர்ந்து வாழ்தலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். தன்னுடைய மாணவப் பருவத்தில் தன்னுடைய உணவினை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, பகிர்ந்து வாழவேண்டும் என்னும் நெறியை நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகின்றார். நாம் நம்மிடமிருகின்ற உணவை, உடைமைகளை இன்ன பிறதை பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று. (மத் 14: 16). ஆம், தேவையில், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவு கொடுப்பது நம்முடைய கடமையாகும்.

ஒரு சமயம் கையில் காசில்லாமல் ஓரிரு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் அலைந்து திரிந்த ஒரு பெரியவருக்கு ஐம்பது ருபாய் கிடைத்தது (சாலையில் கீழே கிடந்தது). அதை எடுத்துக்கொண்டு, கடையில் கொடுத்து, உணவு வாங்கி, அதனை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். அந்நேரம் பார்த்து மூன்று சிறுவர்கள் அவரிடத்தில், “ஐயா! நாங்கள் சாப்பிட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, எங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்கள். அவர் வேறொன்றும் பேசாமல், தன்னிடம் இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து அவர்களிடத்தில் கொடுத்தார். அவர்களும் மிகவும் நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்டு உண்டார்கள். பின்னர் அவர்கள் போகின்றபோது ஒரு பழங்காலத்து நாணயத்தைப் அன்பளிப்பாக அவரிடம் கொடுத்துச் சென்றார்கள். பெரியவர் அந்த பழங்காலத்து நாணயத்தை அகழ்வாராய்ச்சி துறையினரிடம் கொடுக்க ,அவர்கள் அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை சன்மானமாகக் கொடுத்தார்கள். பெரியவர் அதைப் பெற்றுக்கொண்டு மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

பெரியவர் தன்னிடம் இருந்த உணவை சிறுவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதனால் அவர் வேறொரு விதத்தில் ஆசிர்வதிக்கப்பட்டார். நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழும்போது நாமும் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

தூய மரிய ஜோசப்பா (மார்ச் 22)

இன்றைய புனிதர்

தூய மரிய ஜோசப்பா (மார்ச் 22)
“நான் நோயுற்றிருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்” - இயேசு.

வாழ்க்கை வரலாறு

ஸ்பெயின் நாட்டில் உள்ள விக்டோரியா என்னும் ஊரில், 1843 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் மரியா ஜோசப்பா பிறந்தார். இவர் சிறு வயதிலே மிகுந்த பக்தியும் எளியவர் பால் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

தன்னுடைய தொடக்கக் கல்வியை மாட்ரிட் என்னும் இடத்தில் முடித்த மரிய ஜோசப்பா, தனது பெற்றோரிடத்தில் வந்து துறவியாகப் போகப்போகிறேன் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். பெற்றோரும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், அவருடைய விருப்பத்தின்படி போக அனுமதித்தார்கள். எனவே மரிய ஜோசப்பா, கன்செப்சனலிஸ்ட் என்னும் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் சேர்ந்த சில நாட்களிலே கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கவே, அவர் அந்த சபையிலிருந்து வெளியேறினார். சிறுது நாட்களில் உடல்நலம் தேறிய மரிய ஜோசப்பா, ‘சர்வெண்ட்ஸ் ஆப் மேரி’ என்னும் சபையில் சேர்ந்தார். அந்த சபையிலும் அவரால் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. இதனால் அவர் அச்சபையிலிருந்து வெளியேறினார்.

சர்வெண்ட்ஸ் ஆப் மேரி என்ற சபையிலிருந்து வெளியேறிய மரிய ஜோசப்பா, 1871 ஆம் ஆண்டு ‘சர்வெண்ட்ஸ் ஆப் ஜீசஸ்’ என்ற சபையைத் தொடங்கினார். இந்தச் சபையினுடைய பிரதான நோக்கமே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதுதான். மரிய ஜோசப்பா, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகம் சுழிக்காமல் பணிவிடை செய்தார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் நோயாளிகளுக்கு மத்தியில் பணி செய்த மரிய ஜோசப்பா, 1912 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி இறந்து போனார். அவர் இறந்தபோது ஸ்பெயின் நாட்டில் அழாதவர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவர் எல்லாருடைய அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

மரிய ஜோசப்பா இறந்த பிறகு, அவருடைய பெயரில் நிறைய அற்புதங்கள் நடைபெற்றன. இவற்றையெல்லாம் பார்த்து 2000 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஏழைகள் வாழ்வு உயர வேண்டும், நோயாளிகள் நலம்பெற வேண்டும் என்று அவர்களுக்காகத் தன்னுடைய வாழ்வினை அர்ப்பணித்த தூய மரிய ஜோசப்பாவிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நோயாளிகளிடத்தில் அன்பு

தூய மரிய ஜோசப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றப்போது அவர் நோயாளிடத்தில் கொண்டிருந்த அன்பும் இரக்கமும்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. நோயாளிகளிடத்தில் மரிய ஜோசப்பாவிற்கு இருந்த அன்பைப் போன்று நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியின் பல இடங்களில் ஆண்டவர் இயேசு நோயாளிகள் மீது பரிவுகொண்டு அவர்களுடைய நோய்களைக் குணப்படுத்தினார் என்றது பார்க்கின்றோம். இயேசுவைப் போன்று நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற வல்லமை நமக்கு இல்லாவிட்டாலும், நோயாளிகளை நம்மால் அன்புடன் கவனித்துக்கொள்ள முடியும்; அவர்களுக்குச் சேவை செய்வதன் வழியாக ஆண்டவருக்குச் சேவை செய்ய முடியும் (மத் 25: 40).

இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

1980-ஆம் ஆண்டு! ஹவுராவின் ஒரு சாலை! மூன்று வயது போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை பரிதாபமாக அழுது நின்று கொண்டிருந்தது. அதைக் கண்ட அன்னை தெரசா அந்தக் குழந்தையை தனது காப்பகத்திற்கு கொண்டு வந்து ஆதரவு அளித்தார். இன்று அந்தக் குழந்தை 39- வயது வாலிபனாக வளர்ந்துள்ளார். கவுதம் லெவிஸ் எனும் பெயருடைய அவர் இன்று விமான ஓட்டி, புகைப்படக் கலைஞர், இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மையுள்ள மனிதனாக உருவாகியுள்ளார். அவர் இசை அமைத்து வடிவமைத்த அன்னை தெரசா பற்றிய பாடல் 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ஆம் தேதி 200 நாடுகளில் வெளியிடப்பட்டது. “அன்னை தெரசா இல்லை எனில் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மட்டேன்” என்கிறார் கவுதம்! கவுதமைப் போல பல ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளையும் நோயாளிகளையும் பெண்களையும் தமது கருணை இல்லத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு மறுவாழ்வும் ஆதரவும் அளித்தவர் அன்னை தெரசா! என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தொடங்கி வைத்த இந்தப் புனிதப் பணியை நாமும் தொடர்ந்து செய்வதுதான் இறைவனுக்கு ஏற்ற செயலாகும்.

ஆகவே, தூய ஜோசப்பாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகள்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

தூய நிக்கோலாஸ் தே ஃப்ளூ (மார்ச் 21)

இன்றைய புனிதர்

தூய நிக்கோலாஸ் தே ஃப்ளூ (மார்ச் 21)
நிகழ்வு

ஒரு சமயம் நிக்கோலாஸ் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் வெள்ளை நிறத்தில் இருந்த லில்லி மலரை குதிரை ஒன்று சாப்பிட்டு விழுங்குவதைக் கண்டார். இதனுடைய அர்த்தம் என்னவென்று அவர் நீண்ட நேரமாக யோசித்துப் பார்த்தார். கடைசியில்தான் அவருக்குப் புரிந்தது. தூய்மையான ஆன்மாவை இந்த உலக வாழ்க்கை தின்றுகொண்டிருக்கின்றது என்று. உடனே அவர் வேறெதையும் பற்றி யோசிக்காமல், எல்லாவற்றையும் துறந்து. துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

உலக செல்வங்களில் அல்ல, உண்மையான செல்வமும் ஒப்பற்ற செல்வமாகிய இறைவனில் பற்று கொண்டு வாழவேண்டும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

நிக்கோலாஸ், 1417 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் இரண்டாம் நாள், சுவிட்சர்லாந்தில் இருந்த ஓர் உயர் குடியில் பிறந்தார். அக்காலத்தில் இளைஞர்கள் யாவரும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், நிக்கோலாஸ் சில காலத்திற்கு இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அது மட்டுமல்லாமல் இராணுவத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.

குறிப்பிட்ட காலம் இராணுவத்தில் பணியாற்றிய பின்பு தன் சொந்த ஊருக்குத் திரும்பி டாரத்தி என்ற பெண்ணை மணந்துகொண்டார். இறைவன் நிக்கோலாஸ் – டாரத்தி தம்பதியருக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இல்வாழ்க்கை இப்படி மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் நிக்கோலாஸ் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். உடனே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அனுமதி பெற்று துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்; ரான்பிட் சினே என்ற இடத்தில் ஒரு குடிசை அமைத்து அங்கேயே ஜெப தவ வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். நிக்கோலாஸ் அங்கு இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நிறையப் பேர் அவரிடத்தில் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றார்கள். அவரும் அவர்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனை வழங்கி வந்தார். நிக்கோலாசிடம் ஆலோசனை கேட்பதற்காக கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, பிற சபையைச் சார்ந்தவர்களும் அவரிடத்தில் வந்தார்கள். எல்லாருக்கும் அவர் நல்ல விதமாய் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

ஒருசமயம் நாட்டில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு நாடே இரண்டாக உடைந்துபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நிக்கோலாஸ் கொடுத்த அறிவுரையின் படி மக்கள் நடந்ததால், அப்படிப்பட்ட ஓர் அபாயம் நடைபெறாமல் நின்றுபோனது. நிக்கோலாஸ், துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் நற்கருணையைத் தவிர வேறு எதையும் உண்ணாமல் இருந்தது எல்லாருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பினையும் தந்தது. இப்படி ஒரு நல்ல ஆலோசகராக, இறைவன்மீது ஆழமான விசுவாசம் கொண்டவராக வாழ்ந்த வந்த நிக்கோலாஸ் 1487 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1947 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய நிக்கோலாசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஆன்மாவைக் காத்துக்கொள்ள முயற்சிப்போம்

தூய நிக்கோலாசின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஆன்மாவைக் காத்துக்கொள்வதாகும். இன்றைக்கு மனிதர்கள் உலக வாழ்க்கையில் சிக்குண்டு தூய ஆன்மாவைத் தொலைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஆன்மாவை பாவத்திலிருந்து காப்பாற்றிய நிக்கோலாஸ் நமக்கு ஒரு முன்னுதாரணம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், “மனிதர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன?” என்று. ஆம், ஆன்மாவை இழப்பதனால், உலக செல்வங்கள் அத்தனையும் நமக்கிருந்தாலும் அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. ஆகவே, தூய நிக்கோலாசைப் போன்று ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டிய முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும்.

ஆன்மாவை எப்படிக் காத்துக்கொள்வது என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்பதுதான் நாம் ஆன்மாவைக் காத்துக்கொள்வதற்கான முதன்மையான வழி என்பது நமக்குப் புரியும். இயேசு கூறுவார், “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்கொடுக்கப்படும்” என்று (மத் 6: 33). ஆண்டவருக்கு உகந்த வழியில் நடக்கின்றபோது நம்முடைய ஆன்மா காப்பாற்றப்படும், அதே நேரத்தில் நாம் கடவுளிடமிருந்து எல்லா ஆசிரியும் பெறமுடியும்.

ஆகவே, நிக்கோலாசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, ஆன்மாவைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.