† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 18)
✠ அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ✠
(Blessed Andrés Hibernón Real)
மறைப்பணியாளர்:
(Religious)
பிறப்பு: கி.பி. 1534
மூர்சியா, ஸ்பெயின் அரசு
(Murcia, Kingdom of Spain)
இறப்பு: ஏப்ரல் 18, 1602 (வயது 68)
காண்டியா, வலென்சியா, ஸ்பெயின் அரசு
(Gandia, Valencia, Kingdom of Spain)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: மே 22, 1791
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)
நினைவுத் திருநாள்: ஏப்ரல் 18
பாதுகாவல்:
மூர்சியா (Murcia)
அல்கன்டரில்லா (Alcantarilla)
அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல், “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையைச்” (Order of Friars Minor) சேர்ந்த ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளர் ஆவார்.
அந்நாளைய ஸ்பேனிஷ் அரசின் மூர்சியா நகரில் 1534ம் ஆண்டு வசதியான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஹிபெர்நான். பாதகமான சூழ்நிலைகளின் காரணமாக, இவரது மொத்த குடும்பமும் நிதி நிலைமையில் நொடித்துப்போனது. இவர்களது குடும்பச் சுமையை குறைக்கும் நோக்கில், இவரது மாமன் ஒருவர் இவரது கல்விப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். எனவே இவர் தமது கல்வியை வலேன்சியா (Valencia) நகரில் தொடங்கினார். இவரது இன்னொரு மாமன் ஒருவர் பாதிரியாராக இருந்த மூர்சியா பேராலயத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார்.
இவர் தமது இளமையில், கஷ்டப்படும் தமது பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் உதவும் பொருட்டும், எதிர்பாராத விதமாக வரவிருக்கும் சகோதரியின் திருமணத்திற்காகவும் வெளியூர் சென்று கடினமாக உழைத்து கணிசமாக பொருள் சேர்த்தார். தாம் உழைத்துச் சேர்த்த பணத்துடன் ஊர் திரும்பும் வழியில், இவரை வழிமறித்த திருடர்கள் கும்பல் ஒன்று, இவரிடமிருந்த பணம் பொருள் முழுவதையும் கொள்ளையடித்துச் சென்றது. இதனால் தாம் அடைந்த ஏமாற்றமும் வருத்தமும், தம்மை இவ்வுலகின் பொருள் ஆசைகளில் எவ்வளவு தூரம் ஈர்த்திருக்கிறது என்பதனை உணர்ந்தார்.
திருட்டு போகக்கூடிய - அழிந்து போகும் இவ்வுலக செல்வங்களை சேர்க்கும் ஆசைகளுக்கு மாறாக, இனிமேல் யாராலும் கொள்ளையடிக்க இயலாத செல்வங்களை சேர்க்க முடிவு செய்தார்.
1556ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பிராந்தியமான "அல்பாசிட்" (Albacete) என்னுமிடத்திலுள்ள "இளம் துறவியர் சபையின்" பள்ளியில் (Convent of the Order of Friars Minor) சேர மிகவும் தாழ்ச்சியுடன் கெஞ்சி அனுமதி பெற்றார். 1557ம் ஆண்டு, நவம்பர் மாதம், முதல் தேதியன்று, தமது துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்டதுடன், அன்றுமுதல் தமது புதுமுக துறவுப் பயிற்சியையும் தொடங்கினார்.
அடிக்கடி அன்னை மரியாளின் திருத்தலங்களை நாடிச் செல்ல ஆரம்பித்த ஹிபெர்நான், மணிக்கணக்கில் நற்கருணையாண்டவரின் முன்பு முழங்கால்படியிட்டு நின்றபடி செபிக்க தொடங்கினார். இதன்மூலம் அவர் நற்கருணையாண்டவரிடம் தீவிர பக்தியை தம்மில் உருவாக்கினார். இந்த துறவி, அடிக்கடி தமது குருக்களுடன் இணைந்து நோயிற்றோரை சந்திக்க சென்றார்.
1563ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம், இவர் "எல்ச்" (Elche) என்னுமிடத்திலுள்ள "புனித ஜோஸ் 'அல்கன்டரைன்' ஃபிரான்சிஸ்கன் சீர்திருத்த பள்ளிக்கு" (Alcantarine Franciscan Reform Convent of San José) மாற்றப்பட்டார்.
1574ம் ஆண்டுவரை அங்கேயே தமது செப வாழ்வினை அர்ப்பணித்த துறவி ஹிபெர்நான், "வலேன்சியா'வில்" (Valencia) ஸ்தாபிக்கப்பட்டிருந்த பள்ளியின் நடைமுறைப் பணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமது துறவு மட தலைவர்களால் "வலேன்சியா" (Valencia) அனுப்பப்பட்டார். அங்கே, இவருக்கு "வலென்சியா" உயர்மறைமாவட்ட பேராயர் புனிதர் "ஜுவான் டி ரிபெர்" (Archbishop of Valencia Saint Juan de Riber) அவர்களின் நட்பு கிட்டியது.
தாம் மரிப்பதன் நான்கு ஆண்டுகளின் முன்னேயே தாம் மரிக்கப்போகும் நாளை முன்னறிவித்த இத்துறவி, அவர் முன்னறிவித்திருந்ததன்படியே, 1602ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18ம் நாள் செபமாலை செபித்துவிட்டு மரித்தார்.