புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 March 2013


புதன்

முதல் வாசகம்


என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10



ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.



அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் `அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.



பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, ``எங்களைப் பார்'' என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.



பேதுரு அவரிடம், ``வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்'' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.



அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்



திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 3b)



பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!



அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!



1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி



3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி



6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி



8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி



விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



திபா118: 24



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.





நற்செய்தி வாசகம்



அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.



+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35



வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள்.

இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

அவர் அவர்களை நோக்கி, ``வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ``எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!''என்றார்.

அதற்கு அவர் அவர்களிடம், ``என்ன நிகழ்ந்தது?'' என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், ``நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை'' என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, ``அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!'' என்றார்.

மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.

அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், ``எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று'' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.

அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ``வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'' என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.

அங்கிருந்தவர்கள், ``ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள்.

அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

செவ்வாய்



முதல் வாசகம்


மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41



பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.''



அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள்.



அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.

ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார்.



மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 33: 4-5. 18-19. 20. 22 (பல்லவி: 5b)



பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.



அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!



4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி



18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி



20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! பல்லவி



விரும்பினால், தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



திபா 118: 24



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.





நற்செய்தி வாசகம்



நான் ஆண்டவரைக் கண்டேன்.



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18



அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.



இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள்.



அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார்.



இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.



இயேசு அவரிடம், ``ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார்.



மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார்.



இயேசு அவரிடம், ``மரியா'' என்றார்.



மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார்.



இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள்.



இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்'' என்றார்.



மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான் ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பாஸ்கா எண்கிழமை திங்கள்


முதல் வாசகம்


கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33



பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: ``யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே.

கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

தாவீது அவரைக் குறித்துக் கூறியது: `நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.

ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.'

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.

அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, `அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.''



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 16: 1-2. 5,7-8. 9-10. 11 (பல்லவி: 1)



பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.



அல்லது: அல்லேலுயா, அல்லேலூயா, அல்லேலூயா!



1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன். பல்லவி



5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி



9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி



11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி





விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



திபா 118: 24



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.





நற்செய்தி வாசகம்



என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.



+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15



அக்காலத்தில் கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.



திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள்.



அப்பொழுது இயேசு அவர்களிடம், ``அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்'' என்றார்.



அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.



அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, `` `நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உட லைத் திருடிச் சென்றுவிட்டனர்' எனச் சொல்லுங்கள்.



ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்'' என்று அவர்களிடம் கூறினார்கள்.



அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.