† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 9)
✠ அருளாளர் அன்னி கேத்தரீன் எம்மெரிச் ✠
(Blessed Anne Catherine Emmerich)
திருக்காட்சியாளர்/ கன்னியர்/ மாற்றுத்திறனாளி:
(Marian Visionary/ Virgin/ Physically challenged)
பிறப்பு: செப்டம்பர் 8, 1774
கோயெஸ்ஃபெல்ட், வெஸ்ட்ஃபாலியா, தூய ரோம பேரரசு
(Coesfeld, Westphalia, Holy Roman Empire)
இறப்பு: ஃபிப்ரவரி 9, 1824 (வயது 49)
டூல்மென், வெஸ்ட்ஃபாலியா, ஜெர்மனி கூட்டமைப்பு
(Dülmen, Westphalia, German Confederation)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முத்திபேறு பட்டம்: அக்டோபர் 3, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 9
அருளாளர் அன்னி கேத்தரீன் எம்மெரிச், ரோமன் கத்தோலிக்க “அகுஸ்தினிய துறவற சபையைச்" (Augustinian Canoness) சார்ந்தவர் ஆவார். இவர், ஜெர்மனியின் "மூன்ஸ்ட்டர்" மறை மாவட்டத்தைச் (Diocese of Münster) சேர்ந்தவர். எம்மெரிச், "ஃப்ளாம்ச்சென்" (Flamschen) எனப்படும் ஜெர்மனிய விவசாய சமூகத்து குடும்பமொன்றில் பிறந்தவர் ஆவார். தமது வாழ்க்கையின் இறுதி காலத்தை படுத்த படுக்கையாக கழித்த இவர், தமது 49 வயதில், தாம் அருட்கன்னியராக வாழ்ந்த "டுல்மேன்" (Dülmen) என்ற இடத்தில் மரித்தார்.
எம்மெரிச், ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையையும், பாடுகளையும், திருக்காட்சியாகக் கண்டவர். இவருக்கு அர்ச்சிஷ்ட அன்னை கன்னி மரியாளின் தரிசனம் திருக்காட்சியாக கிடைத்ததால் பிரபலமும், புளகாங்கிதமும் அடைந்தார். இதனால், நகரின் பல பிரபலங்கள் இவரைக் காண ஆர்வமாயிருந்தனர். "க்ளேமேன்ஸ் ப்ரேன்ட்டனோ" (Clemens Brentano) எனும் பிரபல கவிஞர் இவரை மிக நீண்ட நேரம் பேட்டி கண்டு, இவரின் திருக்காட்சிகளின் அடிப்படையில் இரண்டு புத்தகங்களை எழுதினர். இப்புத்தகங்கள் இரண்டும் அந்நாளில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாயின.
வாழ்க்கை:
"அன்னா கேதரீனா" (Anna Katharina) என்ற இயற்பெயர் கொண்ட எம்மெரிச், ஏழை விவசாய பெற்றோரின் ஒன்பது குழந்தைகளின் ஒருவராவார். சிறு வயதிலிருந்தே வீட்டிலும் விவசாய பண்ணையிலும் பணி செய்ய வேண்டியிருந்தது. அவரது பள்ளி வாழ்க்கை மிகவும் சுருக்கமாக இருந்தாலும் அவர் மிகவும் சிறு வயதிலேயே செபிப்பதில் ஈர்க்கப்பட்டவராக இருந்தார்.
தமது பன்னிரண்டு வயதில் அருகாமையிலுள்ள பெரிய பண்ணையொன்றில் பணி செய்ய ஆரம்பித்தார். இங்கே மூன்று வருடங்கள் பணி செய்தார். அதன்பின்னர், ஆடை தயாரிக்கும் பணியை கற்றுக்கொண்ட எம்மெரிச், பல வருடங்கள் அந்த பணியையே செய்து வந்தார்.
எம்மெரிச் பல்வேறு பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். ஆனால், எதிர்ஜாமீனாக கொடுப்பதற்கு அவரிடம் பணமில்லாத காரணத்தால் அவர் எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்டார். இறுதியில், “எளிய கிளாரா” (Poor Clares) எனப்படும் துறவற சபையினர் அவரை ஏற்றுக்கொள்வதாக கூறினர். ஆனாலும் அவரை "ஆர்கன்" எனும் இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொண்டு வரச்சொன்னார்கள். எம்மெரிச் சங்கீதம் கற்பதற்காகவும், "ஆர்கன்" இசைக்கருவியை வாசிக்க கற்கவும் "ஸோன்ட்ஜென்" (Söntgen) எனும் சங்கீதம் வாசிப்பவரை அணுகினார். ஆனால், ஏழையான காரணத்தால் அவர் அதனை கற்க இயலவில்லை. "ஸோன்ட்ஜென்" (Söntgen) குடும்பத்தினர் அவரை வீட்டு வேலை செய்ய வலியுறுத்தினர். பின்னர், "ஸோன்ட்ஜென்" குடும்பத்தின் மகளான "கிளாரா" (Klara Söntgen) என்பவருடன் எம்மெரிச் பள்ளியில் சேர்ந்தார்.
ஆன்மீக வாழ்க்கை:
கி.பி. 1802ம் ஆண்டு, தமது இருபத்தெட்டு வயதில் எம்மெரிச் தமது சிநேகிதியான "கிளாராவுடன்" (Klara Söntgen) "டுல்மென்" (Dülmen) நகரிலுள்ள "அகுஸ்தீனிய துறவு சபையில்" (Augustinian nuns) இணைந்தார். அடுத்த வருடமே அவர் தமது சமய உறுதிமொழி எடுத்தார். துறவு மடத்தில், சபையின் விதிமுறைகளை கண்டிப்புடன் ஏற்று நடந்தார். அதே வேளை, அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட ஆரம்பித்தார். அதனால் ஏற்பட்ட வலி வேதனைகளை பெரும் துன்பங்களுடன் தாங்கிக்கொண்டார். அவ்வளவு வேதனைகளிலும் அவர் மடத்தின் நியதி மற்றும் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதில் வைராக்கியமாக இருந்தார். இவரது கண்டிப்புகளால் வெறுப்பு கொண்டிருந்த அருட்சகோதரியர்கூட இவரது வலி தாங்கும் வன்மை கண்டு வியந்தனர்.
கி.பி. 1812ம் ஆண்டு, "வெஸ்ட்ஃபாலியாவின்" அரசன் (King of Westphalia) "ஜெரோம் போனபார்ட்" (Jérôme Bonaparte) இவர்களின் மடத்தை வலுக்கட்டாயமாக மூடினான். இதனால் வேறு வழியற்ற எம்மெரிச், அங்குள்ள ஒரு விதவைப் பெண்ணொருவரின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார்.
நோய்வாய்ப்படுதல்:
கி.பி. 1813ம் ஆண்டின் ஆரம்பத்தில் எம்மெரிச்சின் உடலில் அபூர்வமான அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன; அதிசயிக்கத்தக்க காயங்கள் தோன்றின. அங்கிருந்த பங்குத்தந்தை இரண்டு மருத்துவர்களை அழைத்து எம்மெரிச்சை பரிசோதிக்க சொன்னார். இந்த விவரங்களும் தகவல்களும் வெளியே பரவுமுன்னே, பங்குத்தந்தை இதனை அங்குள்ள (Vicar General) என்றழைக்கப்படும் ஆங்கிலிக்கன் சமூகத்தின் ஆயர் அல்லது பேராயரின் துணை அதிகாரிக்கு தகவல் சொன்னார். திருச்சபை அதிகாரிகள் நீண்ட விசாரணை நடத்தினர். அநேக மருத்துவர்கள் இதனை ஆய்வு செய்ய ஆர்வமாக இருந்தனர். இந்த வேளையில்தான் கவிஞர் "க்ளேமேன்ஸ் ப்ரேன்ட்டனோ" (Clemens Brentano) முதன்முதலில் வருகை தந்தார்.
கி.பி. 1818ம் ஆண்டின் இறுதியில் எம்மெரிச்சின் கைகள் மற்றும் கால்களின் காயங்களிலிருந்து இரத்தம் வருவது நின்றுப்போனது. காயங்கள் மூடிக்கொண்டன. எம்மெரிச்சின் உடலிலிருந்த காயங்களை நகரின் பலரும் நேரில் கண்டிருந்தும், பலர் இவரை ஏளனம் செய்தனர். இவர் பொய்யாக நடிப்பதாகவும், சதி செய்கிறார் என்றும், மோசடி பேர்வழி என்றும் நிந்தித்தனர். இதனால் கி.பி. 1819ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அரசு அதிகாரிகள் தலையிட்டு எம்மெரிச்சை வேறொரு வீட்டுக்கு கொண்டு சென்று மூன்று வாரங்கள் வைத்திருந்து கண்காணித்தனர். அவர்களால் மோசடிக்கான ஆதாரங்களாக எதனையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
எம்மெரிச்சின் மார்பக எலும்பின்மீது இருந்த சிலுவை அடையாளம் வித்தியாசமாக "Y" வடிவில் இருந்தது. "கோயெஸ்ஃபெல்ட்" (Coesfeld) நகரின் ஆங்கிலிக்கன் தேவாலயத்திலிருந்த சிலுவையும் அதுபோலவே இருந்தது.
திருக்காட்சிகள்:
சிறு வயதில் தமக்கு ஆண்டவர் இயேசுவானவர் தரிசனம் தந்ததாகவும், அவரது திருக்காட்சியில் தாம் இயேசுவுடன் பேசியதாகவும் எம்மேரிச் கூறினார். அவர் இறந்த பிறகு ஆத்மாவைப் புனிதப்படுத்தும் இடமான "உத்தரிய ஸ்தலத்தில்" (Purgatory) ஆன்மாக்களை பார்த்ததாகவும் கூறினார். அடர்ந்த கோள வடிவில் மூவொரு இறைவனை தரிசித்ததாகவும் கூறினார்.
எம்மெரிச்சின் கீர்த்தி மென்மேலும் ஓங்கி பரவுகையில், கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு பெற்ற பெரியோர் அநேகர் அவரை வந்து சந்தித்துச் சென்றனர். அவர்களில், "கொலோன் உயர்மறைமாவட்ட" (Archbishop of Cologne) பேராயரான "க்லெமென்ஸ்" (Clemens von Vischering), "ரேடிஸ்பொன்" மறைமாவட்ட" ஆயரான (Bishop of Ratisbon) "ஜோஹன்" (Johann Michael Sailer) "பெர்னார்ட்" (Bernhard Overberg) மற்றும் எழுத்தாளர்கள் "லூயிஸ்" மற்றும் ஃபிரெடெரிச்" (Luise Hensel and Friedrich Stolberg) ஆகியோரும் அடங்குவர். பேராயர் "க்லெமென்ஸ்" பின்னாளில் "ஸ்டோல்பெர்க்" (Stolberg) நகருக்கு எழுதிய கடிதமொன்றில் எம்மெரிச் பற்றி குறிப்பிடுகையில், "எம்மெரிச் கடவுளின் ஒரு விசேடமான சிநேகிதி" என்று குறிப்பிட்டார்.
ஜெர்மன் கவிஞரும் எழுத்தாளருமான "கிலெமென்ஸ் ப்ரெண்டானோ" (Clemens Brentano) கி.பி. 1819ம் ஆண்டு, எம்மெரிச்சை சந்திக்க வந்தபோது, அவருக்கு இரண்டாவது மருத்துவ பரிசோதனைகள் நடந்துகொண்டிருந்தன. எம்மெரிச் உடனடியாக கிலேமென்சை அடையாளம் கண்டுகொண்டார். இறைவனின் கட்டளைகளையும் வெளிப்பாடுகளையும் நிறைவேற்றுவதில் தமது எழுத்துக்கள் மூலம் தமக்கு உதவவே கடவுள் கிலெமென்சை அனுப்பியுள்ளதாக அவர் கூறியதாக பின்னர் அவர் கூறினார். அந்நாளில் எம்மெரிச்சின் முக்கிய ஆதரவாளர்களில் கிலெமேன்சும் ஒருவராவார். அவர், "எம்மெரிச் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணப்பெண்" என்று கூறினார்.
கி.பி. 1819ம் ஆண்டு முதல், 1824ம் ஆண்டில் எம்மெரிச் மரிக்கும்வரை, கிலெமென்ஸ் எழுதிய பல நூல்களில், புதிய ஏற்பாட்டின் காட்சிகள் பல உள்ளிட்ட எம்மெரிச் கண்ட திருக்காட்சிகள் மற்றும் அதிதூய கன்னி மரியாளின் வாழ்க்கை பற்றிய திருக்காட்சிகளைப்பற்றியும் எழுதினார்.
எம்மெரிச் "வெஸ்ட்ஃபாலியன்" (Westphalian) மொழியையே பேசியதால், அவரது பேச்சுக்களை உடனடியாக ஜெர்மனியில் மொழியாக்கம் செய்ய இயலாமல் கிலெமென்ஸ் திணறினார். எம்மெரிச் பேசுவதை குறிப்பெடுத்துக்கொண்டு, பின்னர் தமது வீட்டுக்கு சென்று ஜெர்மனியில் மொழியாக்கம் செய்ய பிரயத்தனம் செய்தார். இதனால், எம்மெரிச் மரித்தபிறக்கும் பல காலம் வரை அவரைப் பற்றிய கிலெமென்ஸின் நூல்கள் வெளிவந்தன.
கி.பி. 1823ம் ஆண்டு மரணமடைந்த எம்மெரிச்சின் உடல் ஊருக்கு வெளியேயிருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், 1975ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், அவரது உடலின் மிச்சங்கள் "டுல்மேன்" நகரிலுள்ள தூய சிலுவையார் (Holy Cross Church in Dülmen) பேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.