புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 April 2020

புனிதர் ஜோசஃப் பெனடிக்ட் கொட்டலேங்கோ April 30

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 30)

✠ புனிதர் ஜோசஃப் பெனடிக்ட் கொட்டலேங்கோ ✠
(St. Joseph Benedict Cottolengo)
ஒப்புரவாளர் மற்றும் நிறுவனர்:
(Confessor, and Founder)

பிறப்பு: மே 3, 1786
ப்ரா, குனியோ மாகாணம், பீட்மாண்ட், சர்தீனியா இராச்சியம்
(Bra, Province of Cuneo, Piedmont, Kingdom of Sardinia)

இறப்பு: ஏப்ரல் 30, 1842 (வயது 55)
சியரி, டுரின் மாகாணம், பீட்மாண்ட், சர்தீனியா இராச்சியம் (தற்போதைய இத்தாலி)
(Chieri, Province of Turin, Piedmont, Kingdom of Sardinia (Now Italy))

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 29, 1917
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம்: மார்ச் 19, 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 30

புனிதர் ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோ, "தெய்வீக உறுதியின் சிறு இல்லம்" (Little House of Divine Providence) எனும் அமைப்பின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோ, கி.பி. 1786ம் ஆண்டு, மே மாதம், 3ம் நாளன்று, அன்றைய சர்தீனியா இராச்சியத்தின் (Kingdom of Sardinia) "ப்ரா" (Bra) நகரில் வாழ்ந்திருந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பன்னிரண்டு குழந்தைகளில் மூத்த குழந்தையாக பிறந்தார். (அவர்களில் ஆறு பேர் குழந்தை பருவத்திலேயே இறந்தனர்). பின்னர் கி.பி. 1802ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2ம் தேதி, அவர் ஒரு பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை (Franciscan Tertiary) உறுப்பினர் ஆனார். கி.பி. 1805ம் ஆண்டு, அவர் "அஸ்தி" (Asti) நகரில் உள்ள செமினரியில் (குரு மட பள்ளியில்) இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது மூடப்பட்டது. மேலும் அவர் தனது படிப்பை வீட்டிலேயே தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொட்டலேங்கோ, கி.பி. 1811ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

"கொர்னேலியானோ டி ஆல்பா" (Corneliano D'Alba) பங்கு ஆலய துணை பாதிரியாராக நியமிக்கப்பட்ட அவர், டுரின் (Turin) நகரில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் கி.பி. 1818ம் ஆண்டு, டுரின் நகரில் உள்ள "கார்பஸ் டொமினி பேராலயத்தின்" (Basilica of Corpus Domini in Turin) தலைமை குருவாக (Canon) ஏற்றுக்கொள்ளப்பட்டார். கொட்டலேங்கோ, தமக்கு கிடைத்த பரிசுகள், நன்கொடைகள், பிரசங்கத்திற்கான கட்டணம், மற்றும் திருப்பலி நடத்துவதற்காக தமக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ஆகியவற்றினை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.

டுரின் நகரம், ஃபிரெஞ்சு ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில், கிராமப்புறங்களிலிருந்து தீவிரமான குடியேற்றத்தின் அழுத்தம் இருந்தது. இது கடுமையான சமூக பிரச்சினைகள் மற்றும் வறுமையை ஏற்படுத்தியது. மோசமான பஞ்சம், மற்றும் வறுமை, பிச்சைக்காரர்கள், கல்வியறிவு இல்லாமை, மற்றும் தொடர்ச்சியான தொற்றுநோய்கள், ஏராளமான சட்டவிரோத குழந்தை பிறப்புகள் மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றால் டுரின் நகர் நிறைந்திருந்தது. "புனித வின்சென்ட் டி பாலின்" (St. Vincent de Paul) வாழ்க்கை வரலாற்றினை படித்து அறிந்த கொட்டலேங்கோ, தனது நாற்பத்தொன்றாவது வயதில், தமது உண்மையான தொழில் தர்மம், கருணை என்பதை புரிந்துகொண்டார்.

இந்த நேரத்தில், "லியோன்ஸ்" (Lyons) நகரிலிருந்து "மிலன்" (Milan) நகருக்கு பயணிக்கும் ஒரு குடும்பத்தில் கொட்டலேங்கோ கலந்து கொண்டார். கர்ப்பிணித் தாய் ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தாலும், அவருக்கு காசநோய் இருந்ததாலும், மாகியோர் மருத்துவமனையில் (Maggiore Hospital) அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் காய்ச்சலால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லவும் முடியவில்லை. மேலும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய எவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க விதிமுறைகள் தடை விதித்தன. மரண தருவாயிலிருந்த அந்த தாய்க்கு கொட்டலேங்கோ இறுதி அருட்சாதனங்களை வழங்கினார். மற்றும் பிறந்த அந்த குழந்தைக்கு, இறப்பதற்கு முன்பு திருமுழுக்கு அள்ளித்தார். மரித்துப்போன அந்த தாயின் மற்ற குழந்தைகளின் அழுகையும் அரற்றலும் நிறைந்த காட்சிகள், கொட்டலேங்கோவை வெகுவாக பாதித்தன. உடனடியாக சென்ற அவர், தனது உடை உட்பட தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தார். வயதான பக்கவாத நோயாளி ஒருவருக்கு இலவச தங்குமிடம் வழங்கினார். கி.பி. 1828ம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ம் தேதி, அவர் தனது புதிய பணியைத் தொடங்கினார். மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ளப்படாத மக்களுக்கு, நீண்ட காலத்திற்கு இந்த வளாகங்கள் விருந்தோம்பல் மையமாக மாறியது. நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்வையிட்ட பணக்கார விதவைப் பெண்ணான "மரியானா நாஸி" (Marianna Nasi) என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு மருத்துவர் "லோரென்சோ கிரானெட்டி" (Doctor Lorenzo Granetti), மருந்தாளர் (Pharmacist) "பால் ராயல் ஆங்லெசியோ" (Paul Royal Anglesio), மற்றும் "கருணையின் மகளிர்" (Ladies of Charity) அமைப்பின் பன்னிரண்டு பெண்கள் ஆகியோர் உதவி செய்தனர்.

கி.பி. 1831ம் ஆண்டில் காலரா நோய்த் தொற்று வெடித்தபோது, தொற்று பயம் காரணமாக முன்னெச்சரிக்கையாக இவரது சிறிய மருத்துவமனை அதிகாரிகளால் மூடப்பட்டது. கொட்டலேங்கோ நகரின் புறநகரில் உள்ள "வால்டோக்கோ" (Valdocco) எனும் இடத்தில் ஒரு வீட்டை வாங்கி, இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் அங்கு இடம் பெயர்ந்தார். இது "தெய்வீக உறுதியின் சிறு இல்லம்" அமைப்பின் தொடக்கமாகும். "காவலியர் ஃபெர்ரெரோ" (Cavalier Ferrero) என்பவர் உள்ளிட்ட பல பயனாளிகளின் தாராள மனப்பான்மை காரணமாக, அவரால் விரைவில் ஒரு அனாதை இல்லத்தை நிறுவ முடிந்தது.

அவர், பல்வேறு துறவு மடங்கள், பள்ளிகள், குருக்களின் சமூகங்கள் (Communities of Priests), சகோதரர்களின் சமூகங்கள் (Communities of Brothers) மற்றும் பொதுநிலை தன்னார்வலர்களின் குழுக்களை (Groups of Lay Volunteers) நிறுவினார். அவரது தொண்டு மரபு, இன்று டுரின் நகரின் மையத்தில், சுவிசேஷ வழியில் பிறரை நேசிப்பதும் சேவை செய்வதும் என்ன என்பதற்கான அடையாளமாக உள்ளது.

இன்றும் கொட்டலேங்கோ அருட்தந்தையர், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், ஏழை எளிய மக்களிடம் கடவுளின் அன்பைத் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்தும் செயல்களில் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். இந்த அமைப்புகள், இன்று உலகம் முழுவதுமுள்ள ஈக்வடார் (Ecuador), இந்தியா (India), இத்தாலி (Italy), கென்யா (Kenya), சுவிட்சர்லாந்து (Switzerland), தான்சானியா (Tanzania), மற்றும் அமெரிக்கா (United States) ஆகிய நாடுகளில் பரவியுள்ளன.

கொட்டலேங்கோ தனது நோயாளிகளுக்கு உதவும்போது டைபாய்டு (Typhoid) நோயால் பாதிக்கப்பட்டு, கி.பி. 1842ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் தேதி, வடமேற்கு இத்தாலியின் (Northwestern Italy) "பீட்மாண்ட்" (Piedmont) பிராந்தியத்திலுள்ள "சியரி" (Chieri) நகரில் மரித்தார்.

புனித ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோவின் பங்கு ஆலயம் (The Parish of Saint Joseph Benedict Cottolengo), "டஸ்கனியின் மத்திய இத்தாலிய பிராந்தியமான" (Central Italian Region of Tuscany), "க்ரோசெட்டோ" (Grosseto) நகரில் அமைந்துள்ளது.

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)

இன்றைய புனிதர் : 
(30-04-2020) 

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)
நாம் வெற்றியாளர்களாக மாற அல்ல, நம்பிக்கைக்குரியவர்களாக வாழவே இறைவன் நம்மைப் படைத்துள்ளார்” (அன்னை தெரசா)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஐந்தாம் பத்திநாதர் எனப்படும் அந்தோனி மைக்கேல் 1504 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 17 ஆம் நாள், இத்தாலியில் உள்ள போஸ்கோ என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே இவர் தன்னுடைய பதினான்கு வயதில் டொமினிக்கன் சபையில் சேர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் குருவாகவும், அதன்பின் வந்த ஆண்டுகளில் ஆயராகவும் கர்தினாலாகவும் 1566 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் நாள் திருத்தந்தையாகவும் மாறினார்.

அந்தோனி மைக்கேல் திருத்தந்தையாக உயர்ந்தபின் ஐந்தாம் பத்திநாதர் என்ற பெயரைத் தாங்கியவராய் திருச்சபைக்கு பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக 1545 லிருந்து 1563 வரை நடைபெற்ற திரிதெந்திய (Council of Trent) சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிகத் துணிச்சலாக நடைமுறைப் படுத்தினார். அது மட்டுமல்லாமல் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினை சபைகளின் கோட்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். இதனால் இவருக்குப் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றையெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல், மிகத் துணிச்சலாக திருச்சபைக்காக உழைத்து வந்தார்.

திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள் நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும் கடுமையாக உழைத்தார். குறிப்பாக இங்கிலாந்து அரசியான முதலாம் எலிசபெத்தை திருச்சபையோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பா கண்டத்தில் இருந்த ஏனைய நாடுகளையும் திருச்சபையோடு இணைப்பதற்கு பாடுபட்டார் அதுவும் தோல்வியிலேதான் முடிந்தது. இப்படி பல்வேறு தோல்விகளை அவர் சந்தித்தாலும் திருச்சபைக்காக எதையும் செய்யத் துணிந்து வந்தார்.

1571 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் நாள் துருக்கியப் படைகள் ஐரோப்பிய நாடுகள்மீது படையெடுத்து வந்தன. இதனை உணர்ந்த திருத்தந்தை அவர்கள் கிறிஸ்தவப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, கிறிஸ்தவ நாடுகளைக் காப்பாற்றினார். திருத்தந்தை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் டொமினிக்கன் சபையிலிருந்து கற்றுக்கொண்டு அனைத்துப் புண்ணியங்களையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். இரவில் நீண்டநேரம் முழந்தாள் படியிட்டு ஜெபித்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார்; ஏழை எளியவருக்கு தான தர்மங்களை நிறைய வழங்கினார்; நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் படுத்தினார்.

இப்படி திருச்சபைக்காக பல்வேறு பணிகளைச் செய்துவந்த திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1572 ஆம் ஆண்டு, மே திங்கள் 1 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தந்தை தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தோல்விகள் என்பவை வெறும் தோல்விகள் அல்ல, அவை வெற்றிக்கான படிக்கட்டுகள்

தூய ஐந்தாம் பத்திநாதருடைய வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்ற நம்முடைய மனதில் எழுகின்ற ஒரே சிந்தனை, வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தோல்விகளை வெறும் தோல்விகளாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

திருத்தந்தை அவர்கள் நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் அவர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் பல தோல்விகளைச் சந்தித்தார். அந்தத் தோல்விகளை எல்லாம் கண்டு மனமுடைந்து போகாமல், தொடர்ந்து இயேசுவுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைத்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் கடைசியில் துருக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சந்திக்கின்ற தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெறுவதுதான் சிறப்பான ஒரு காரியமாகும்.

இந்த இடத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தோல்வியைக் குறித்து சொல்கின்ற கருத்துகளையும் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது பொருத்தமானது “என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்”. தோல்வி என்பது ஒரு சம்பவம்தான், அதை நினைத்து வருந்துவதால் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியவை.

ஆகவே, தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தொடர்ந்து இறைவனுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைப்போம். தோல்விகளைக் கண்டு துவளாமல், அவற்றிலிருந்து பாடம் கற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.