2020-02-29
சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine)
பிறப்பு
06.01.1814
பிரான்ஸ்
இறப்பு
29.02. 1856
Kwang-si, சீனா
முத்திபேறுபட்டம்: 27.05.1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
புனிதர்பட்டம்: 01.10.2000 திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்
இவரின் தந்தை பெயர் நிக்கோலஸ் சேப்டெல்லைன். இவரின் தாயின் பெயர் மதலீன் டோட்மன். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். அகஸ்ட் இவர்களின் கடைசி குழந்தை. பள்ளிப்படிப்பு அவருக்கு சுமையாக இருந்ததால் அவர் வீட்டுவேலை மற்றும் வயல் வேலை செய்ய பணிக்கப்பட்டார். அப்போது இறையழைத்தலை உணர்ந்தார். இந்நிலையில் தனது இரண்டு சகோதரர்களின் அகால மரணம் அவரை பாதித்தது. அதனால் குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிவைத்தார். பிறகு மீண்டும் மீண்டும் இறையழைத்தலை உணர்ந்ததால் பெற்றோரின் ஒப்புதலோடு அக்டோபர் 1 ஆம் தேதி 1834 ஆம் ஆண்டு குருமடத்திற்கு சென்றார். குருமடத்தில் தன்னை விட இரண்டு மடங்கு வயது குறைந்தவர்கள் அவரோடு படித்தார்கள். அதனால் மற்றவர்கள் அப்பா என்றே அவரை அழைத்தனர். 10.06.1843 அன்று தனது 29 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். 1844 முதல் 1851 வரை உதவி பங்குத்தந்தையாக பணியாற்றினார். பிறகு தனது ஆயரால் வெளிநாடுகளில் நற்செய்தி பணியாற்ற பணிக்கப்பட்டார்.
30.04.1852 அன்று பாரீசை விட்டு புறப்பட்டு சீனாவிற்கு சென்றார். செல்லும் வழியில் பல துன்பங்களை அனுபவித்தார். அவரின் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. சிலரால் தாக்கப்பட்டார். இறுதியாக 1854 ஆம் ஆண்டு சீனாவின் Kwang-si என்ற இடத்தில் இருக்கும் துறவற சபையை அடைந்தார். பிறகு 20 நாட்கள் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையைவிட்டு வெளியேறிய பிறகு, நற்செய்தியை பணியை தீவிரமாக ஆற்றினார். நூற்றுக்கணக்கான மக்களை மனமாற்றினார். மீண்டும் 26.02.1856 அன்று அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பலவிதமான வேதனைகளை அனுபவித்தார். பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
செபம்:
எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, சீனாவில் நற்செய்தி பணியாற்ற அகஸ்ட் என்பவரைத் தேர்ந்தெடுத்தீர். அவரும் உமக்காக நற்செய்தி பணியாற்றி மறைசாட்சியாக மரித்தார். அதைப்போலவே எங்களோடும் நீர் பேசும். எங்கள் அழைத்தலை உணரச் செய்யும். நற்செய்தி பணியாற்ற எங்களுக்கும் வாய்ப்பு தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
முத்திபேறு பெற்ற ஃபிளாரன்ஸ் நகர் அண்டோனியோ Antonio
பிறப்பு: 1400, ஃபிளாரன்ஸ், இத்தாலி
இறப்பு: 29.02.1472
முத்திபேறுபட்டம்: 1847 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
வரலாறு: இவர் திருமணமாகி இளம்வயதிலேயே கைம்பெண் ஆனார். இவருக்கு ஓர் குழந்தையும் உண்டு. இவர் பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபை நான்காம் பிரிவில் சேர்ந்து துறவியானார். இவர் தனது வாழ்நாளில் இறுதி 15 ஆண்டுகள் மிகக்கொடிய நோயால் துன்பப்பட்டவர். வேதனையிலும் இறுதிவரை கடவுளின் அன்பை பரப்பியவர்.
பொதுவாக லீப் ஆண்டுகளில் மட்டுமே பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகின்றன. ஆகவே பிப்ரவரி 29 ஆம் நாள் நினைவு கூறப்படும் புனிதர்கள். மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28 ஆம் நாள் நினைவு கூறப்படுகிறார்கள்.