பாஸ்கா - 2ஆம் வாரம்
வியாழன்
முதல் வாசகம்
நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.
அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, ``நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!'' என்றார்.
அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, ``மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர். இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா! ``தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்,'' பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36
அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
மனிதர்களுக்கு கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு கீழ்படிவது மேலானது என்று உரைக்கின்றார்.
சிறிது கூட தயக்கமின்றி சொல்லப்படும் கூற்று.
நன்றாகத் தெரியும் அரசனுக்கு பணிவது தான், உலகப் போக்கிலான உடனடி பலன் என்பது. கடவுள் பற்றில்லாத, அச்சமில்லாத அரசர்கள் இத்தகைய பேச்சுக்களை விட்டு வைக்கமாட்டார்கள் எனப்தனை அறிந்திருந்த போதிலும், உண்மையிலேயே உயிர்ப்பு தந்த தெம்புத் தான் இத்தகைய துணிச்சலான வார்த்தைகளை ஆள்வோரிடம் உரைக்க வைக்கின்றது.
நம்பிக்கை கொள்வோம். கடவுளுக்கு பணிவதே பிரதானமாக கொள்வோம்.