இன்றைய புனிதர் :
(03-03-2020)
தூய குணகுந்தஸ் (மார்ச் 03)
நிகழ்வு
உரோமையின் அரசியாக இருந்த குணகுந்தஸ், ஹெஸ்ஸே என்னும் பகுதியில் இருந்தபோது கடுமையாக நோயுற்றார். மக்களெல்லாம் அவர் இறந்துவிடுவார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குணகுந்தஸோ இறைவனிடத்தில் தளரா நம்பிக்கையுடன் ஜெபித்தார். “இறைவா நீர் மட்டும் எனக்கு உயிர்பிச்சை அளித்தால், நான் கபன்ஜெனின் பகுதியில் ஒரு துறவற மடத்தை கட்டி எழுப்புவேன்” என்று சொல்லி ஜெபித்துவந்தார். அரசியினுடைய ஜெபம் வீண்போகவில்லை. ஆம், ஆண்டவர் அவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்து, பல ஆண்டுகள் வாழ்வதற்கான ஆசீர்வாதத்தைத் வழங்கினார்.
அரசியோ தான் சொன்னதற்கேற்ப கபன்ஜெனினினில் ஒரு துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
வாழ்க்கை வரலாறு
குணகுந்தஸ், 999 ஆம் ஆண்டு லக்சம்பர்க்கில் பிறந்தார், இப்பகுதியானது பிரான்ஸ் மட்டும் ஜெர்மனி இவற்றின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவர் சிறுவயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்தார். வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபின்பு, இவர் உரோமை மன்னர் ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.
குணகுந்தஸ், ஹென்றியை மணந்துகொண்டபோதும் கற்பு நெறியில் மேலோங்கி வளர்ந்து வந்தார். “தனது உடலை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன். ஆதலால், தாம்பத்திய உறவு வேண்டாமே” என்று குணகுந்தஸ், கணவர் ஹென்றியிடம் சொன்னபோது அதனை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் குணகுந்தஸ்மீது அவர் முன்பைவிட மிகுந்த அன்பைக் காட்டி வந்தார். இதனால் இரண்டுபேருமே முன்மாதிரியான தம்பதியராக வாழ்ந்து வந்தார்கள்.
ஒரு சமயம் மக்களில் சிலர் குணகுந்தசை சந்தேகப்பட்டார்கள். அவர் போகிற போக்கு சரியில்லை என்றெல்லாம் அவர்மீது பழி சுமத்தினார்கள். இதைக் கேள்விப்பட்ட குணகுந்தஸ் மிகவும் வருந்தினார். தான் கடவுளுக்குப் பயந்து மிகவும் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போது மக்கள் இப்படி தன்மீது அபாண்டமாகப் பழிபோடுகிறார்களே என்று, எல்லாரும் கூடியிருந்த ஓர் இடத்தில் தீ மூட்டி, ‘நான் கற்பில் சிறந்தவளாக இல்லையென்றால், இந்த நெருப்பு என்னைப் பற்றி எரிக்கட்டும்” என்று சொல்லி, அதில் விழுந்தாள். ஆச்சரியம் என்னவென்றால், நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. இதனைப் பார்த்து மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அரசி குணகுந்தஸ் உண்மையிலே கற்பில் சிறந்தவள் என்று வாயாரப் போற்றிப் புகழ்ந்தார்கள். அரசர் இதைக் கேள்விப்பட்டு இன்னும் அதிகமாய் குணகுந்தசை அன்பு செய்து வந்தார்.
எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் மன்னர் ஹென்றி திடிரென்று இறந்துபோனார். அப்போது குணகுந்தஸ் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. தன் கணவரின் இறப்புக்குப் பிறகு அரசாங்கச் சொத்துகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். இப்படி அவர் எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்த பின்பு முன்பொருமுறை தான் கட்டிக்கொடுத்த ஆசிர்வாதப்பர் துறவற சபையில் துறவியாகச் சேர்ந்து, மிகத் தூய்மையான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
குணகுந்தஸ் அரசி துறவற சபையில் சேர்ந்தபிறகு, தான் அரசியாக இருந்தவள் என்பதைச் சிறிதுகூட எண்ணாமல், மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். மடத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறு சிறு வேலைகளையும் கூட மிகவும் தாச்சியோடு செய்துவந்தார்; நோயாளிகள்மீது தனிப்பட்ட செலுத்தி வந்தார். இப்படி அவர் இறைவனுக்கே தன்னை முழுவதும் அர்ப்பணமாக்கி, தூய வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார். இவர் மேற்கொண்ட கடுமையான ஒறுத்தல் முயற்சிகளால் இவருடைய உடல் பலவீனமானது. இதனால் இவர் 1040 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய உடலானது இவருடைய கணவர் ஹென்றியின் உடலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய தூய வாழ்வினையும் இறப்புக்குப் பின்பாக இவருடைய புதுமைகளையும் பார்த்துவிட்டு திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்ட் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய குணகுந்தஸின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. கற்புநெறியில் மேலோங்கி இருத்தல்
தூய குணகுந்தசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவருடைய தூய மாசற்ற வாழ்க்கைதான் நம் கண்முன்னால் வந்து நிற்கின்றது. மன்னர் ஹென்றியை மணமுடித்துக் கொண்டபோதும் இவர் கற்பு நெறியில் சிறந்து விளங்கினார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு உலகம் சிற்றின்பமே நிலையானது என எண்ணி அதன்பின்னாலே போய்க்கொண்டிருக்கின்றது. இத்தகைய பின்னணியில் ஆண்டவருக்காக தன்னை அர்ப்பணித்து, தூய வாழக்கை வாழ்ந்து வந்த தூய குணகுந்தஸ் நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. ஆம், நாம் தூய உள்ளத்தோடு வாழ்கின்றபோது ஒருநாள் இறைவனை முகமுகமாகத் தரிசிக்கும் பேற்றினைப் பெறுவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆகவே, தூய குணகுந்தசின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று தூய மாசற்ற வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.