புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 May 2020

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

புனிதர் ஏழாம் கிரெகோரி May 25

† இன்றைய புனிதர் †
(மே 25)

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)
157ம் திருத்தந்தை:
(157th Pope)

பிறப்பு: கி.பி. 1015
சொவானா, டுஸ்கனி, தூய ரோமப் பேரரசு
(Sovana, Tuscany, Holy Roman Empire)

இறப்பு: மே 25, 1085
சலேர்னோ, அபுலியா
(Salerno, Duchy of Apulia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: கி.பி. 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)

புனிதர் பட்டம்: மே 24, 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

நினைவுத் திருவிழா: மே 25

"ஹில்டப்ராண்ட்" (Hildebrand of Sovana) எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஏழாம் கிரகோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் 157ம் திருத்தந்தையாக 1073ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாள்முதல் 1085ம் ஆண்டு, தனது மரணம் வரை ஆட்சி புரிந்தவராவார்.

தற்போதைய "மத்திய இத்தாலியின்" (Central Italy), "தென் டுஸ்கனி" (Southern Tuscany) பிராந்தியமான – அன்றைய தூய ரோமப் பேரரசின் “சொவானா” எனுமிடத்தில் பிறந்த ஹில்டப்ராண்ட், கொல்லர் (Blacksmith) ஒருவரின் மகனாவார். சிறு வயதில், ரோம் நகரிலுள்ள புனித மரியாளின் மடாலயத்தில் (Monastery of St. Mary) கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே, “அவன்டைன் மலை” (Aventine Hill) மேலுள்ள மடாலயமொன்றில் இவரது மாமன் ஒருவர் மடாதிபதியாக இருந்தார்.

கத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தூய ரோமப் பேரரசர் நான்காம் ஹென்றி (Holy Roman Emperor Henry IV) மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றி'யை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து இருமுறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்ட்'டை, எதிர்-திருத்தந்தையாக (Antipope Clement III) ஹென்றி நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.

திருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.

திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு, திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி (Pope Gregory XIII), 1584ம் ஆண்டில், முக்திபேறு பட்டமும், 1728ம் ஆண்டில், திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII) புனிதர் பட்டமும் அளித்தனர்.

தூய பீத் (மே 25)

இன்றைய புனிதர் :
(25-05-2020)

தூய பீத் (மே 25)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக் 2:52)

வாழ்க்கை வரலாறு

பீத், இங்கிலாந்து நாட்டில் உள்ள மங்டன் என்னும் இடத்தில் 672 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஏழு வயது நடக்கும்போது தூய பேதுரு மற்றும் தூய பவுல் துறவுமடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இயல்பிலே திறமைசாலியாக விளங்கிய பீத் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார்.

686 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், இவர் இருந்த பகுதியில் பயங்கரக் கொள்ளை ஏற்பட்டது. அதில் ஏராளமான பேர் இறந்துபோனார்கள். இவர் மட்டும் எப்படியோ அதிஸ்டவசமாக பிழைத்துக்கொண்டார். இதனை இறைவனின் அருட்பெரும் செயல் என உணர்ந்த இவர், இறைவனுக்காக தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். அதனால் இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அதன்படி இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பெனடிக்ட் பிஸ்காப் என்பவர் இவரை சிறந்த விதமாய் வழி நடத்தினார். இவ்வாறு பீத் தன்னுடைய 19 வது வயதில் திருத்தொண்டராகவும் அதற்கு அடுத்த ஆண்டில் குருவானவராகவும் உயர்ந்தார்.

பீத் தான் வாழ்ந்த காலத்திலேயே மக்களால் ‘வணக்கத்திற்கு உரியவர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். காரணம் இவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. மட்டுமல்லாமல் இவர் விவிலியத்தில் ஆழமான புலமை பெற்றிருந்தார். அந்தப் புலமை இவரை பல நூல்களை எழுதச் செய்தது. குறிப்பாக இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் விவிலியம் தொடர்பானது என்பது குறிப்பிடத் தக்கது.

735 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இவர் தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். எனவே இவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக” என்று சொல்லி தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். இவருக்கு 1899 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுள் கொடுத்த திறமைகளை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம்

தூய பீத்தின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்ததுதான். அவர் ஒருபோதும் தன்னுடைய விளங்கச் செய்யவில்லை. தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்த திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ஒரு கடுமையான உழைப்பாளி இருந்தார். அவர் எப்போதுமே ஏதாவது ஓர் ஆராய்ச்சியை செய்துகொண்டே இருப்பார். அதுவும் அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார். காரணம் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள். அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் முழ்கி இருக்கும் அந்த சமயம் அந்த இரு பூனைகளும் வெளியே செல்ல நினைத்து கத்தி கூப்பாடு போடும். இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவறவிடும் நிலை ஏற்பட்டது. எனவே அவர் தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து, இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். அதன்பிறகு என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினார்.

இதைக் கேட்ட அவரது வேலையாள், “ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும், போகும். அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றார். இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின. பிறகு அவர் கூறியதை நினைத்து அவரே வருத்தப்பட்டார். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன்.

எல்லாம் என்னால்தான், எல்லாரையும் விட நான் பெரியவன் என்ற ஆணவத்தில் சிலர், சமயங்களில் இப்படி மூக்கு அறுபடுவது உண்டு.

நாமும்கூட பல நேரங்கில், எல்லாமே கடவுள் கொடுத்தது என்பதை உணராமல், எல்லாமே என்னால்தான் நடக்கிறது என்ற மமதையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு மனப்பான்மை நம்மிடத்தில் இருந்து மறைந்து கடவுளுடைய கையில் நான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும்.

ஆகவே, தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாம் நாம், அவரைப் போன்று கடவுள் கொடுத்த திறமையை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.