புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 February 2020

புனித ஒனேசிம் பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

புனித ஒனேசிம்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் (பில1:6)

பிரிகியா பகுதியைச் சேர்ந்தவர் ஒனேசிம் .இவர் கொலோசை நகரில் இருந்த முக்கிய செல்வந்தரான பிலமோன் என்பவரிடம் அடிமைத் தொழில் செய்து வந்தார். பிலமோன் புனித பவுலினால் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவரானவர். ஒருநாள் ஒனேசிம் தமது தலைவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார் .தப்பி ஓடும் அடிமை பிடிபட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உரோமை  சட்டம் ஆகும்.

ஓடிய ஒனேசிம் நேரே தம் தலைவரின் நண்பரான புனித பவுலிடம் சென்றார். சில காலம் அவருடன் இருந்து மனமாறி கிறிஸ்துவராக , புதிய மனிதராக மீண்டும் தம் தலைவரிடமே செல்ல விரும்பினார் .ஆனால் பயம் அவரை ஆட்கொண்டது.

பயத்தை அறிந்த புனித பவுல் , பிலமோனுக்கு ஒரு கடிதம் எழுதினார் .அதில், ஒனேசிமுமை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறும், அடிமையாக இல்லாமல் ஒரு சகோதரராக, கிறிஸ்துவராகக் கருதுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டார் . பிலமோனும் அப்படியே செய்தார்.

சிறையில் இருந்து விடுதலையான புனித பவுலுக்கு சில காலம் ஒனேசிம் உதவி செய்தார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தை திக்கி மற்றும் நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரராகிய ஒனேசிம் இருவரும்தான் கொண்டு சென்றார்கள் (கொலோ 4:7-9)

திருத்தூதர்களுக்கும் உதவியாக இருந்த ஒனேசிம் புனித திமொத்தேயுவுக்குப் பிறகு எபேசு ஆயராக இருந்தார்.
ஒனேசிம் சிறந்த மறையுரையாளராக விளங்கியதாக புனித ஜெரோம் மற்றும் பலர்  குறிப்பிட்டுள்ளார்கள் . நற்செய்திக்காக, உரோமையில் 18 நாட்கள் ஒனேசிம் கொடூரமாக வதைக்கப்பட்டார். இவருடைய கால்களையும், தொடைகளையும் உடைத்தார்கள் .95 ஆம் ஆண்டு கற்களை எறிந்து கொலை செய்தார்கள்.

தங்களுக்காக மட்டுமல்லாது மற்றவர்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படு கிறவர்களே நல்ல நண்பர்கள்.

புனிதர் ஜூலியானா பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

✠ புனிதர் ஜூலியானா ✠
(St. Juliana of Nicomedia)

மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி. 286
“கம்பேனியா”விலுள்ள “குமாயே”
(Cumae in Campania)

இறப்பு: கி.பி. 304
நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ்
(Nicomedia or Naples)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

பாதுகாவல்: நோய்கள்

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 16

புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் "டையோக்லெஷியன்" (Roman Emperor Diocletian) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

லத்தீன் மற்றும் கிரேக்க திருச்சபைகள் இவரது பெயரை தமது புனிதர்களின் பட்டியலில் தூய மறைசாட்சியாக வைத்துள்ளன.

ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க "பேகன்" (Pagan) குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் (Senator) ஆவார். அவரது பெயர், "அஃப்ரிகனஸ்" (Africanus) ஆகும். இவர் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் ஆவார்.

ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான "எலாசியஸ்" (Eleusius) என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது.

ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.

மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர்.

உயர் பதவியில் இருப்பதால் அகங்காரம் கொண்டிருந்த எலாசியஸ் ஜூலியானாவை பலி வாங்கும் நாளுக்காக காத்திருந்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான்.

ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.

காலப்போக்கில், பண பலம் கொண்ட எலாசியஸ், தமது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன் படுத்தி, "பிதினியா" (Bithynia) நாட்டின் 'ரோம ஆளுனராக' பதவி பெற்றான்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், ஜூலியானா தமது முடிவில் ஸ்திரமாக இருந்தார். திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற 'ரோம ஆளுனர்' எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். கைது செய்யப்பட்ட ஜூலியானா, 'ரோம ஆளுனரின்' முன்பு நிறுத்தப்பட்டார். ஜூலியானாவின் கணவனாக நிச்சயம் செய்யப்பட்டவனே ஜூலியானாவை தீர்ப்பிடும் நீதிபதியாக இருந்தான்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப் பட்டார். இரக்கமேயில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலை முடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.

சிறைச்சாலையில், ஒரு சம்மனசின் வேடமிட்டு அவரை அணுகிய பசாசு, சிலை வழிபாட்டுக்கு சம்மதித்து தியாகம் செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதன் சூழ்ச்சியை அறிந்துகொண்ட ஜூலியானா, அதனை அடித்து, அதன் முகத்தில் காரி உமிழ்ந்து விரட்டினார். அதன் பிறகு, அவருக்கு தமது நிலைப்பாட்டில் உறுதியுடன் போராட புதிய சக்தி கிடைத்தது.

அவர், மீண்டும் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டார். அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக எலாசியஸ் அறிவித்தான். மற்றும், ஜூலியானா தமது விருப்பப்படி கிறிஸ்துவையே பூஜிக்கலாம் என்றும் சம்மதித்தான். ஆனால், ஜூலியானா யாதொரு சஞ்சலத்துக்கும் ஆளாகாதிருந்தார்.

இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப் படுத்தியது. அங்கே, நூற்றுக்கணக்கான (ஆண்கள் 500 பேரும், பெண்கள் 130 பேரும்) பழமைவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர். அவர்களனைவரும், ரோம ஆளுனர் எலாசியஸின் கட்டளைப்படி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எலாசியஸ், அவரது முகத்தில் ஒரு பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போட்டான். பிறகு, "இப்போது போய் கண்ணாடியில் உன் அழகிய முகத்தைப் பார்த்து ரசி" என்றான். ஆனால், மென்மையாக புன்னகைத்த ஜூலியானாவோ, "இறுதித் தீர்ப்பின்போது, உயிர்த்தெழும் என் உடலிலுள்ள காயங்கள் யாவும் ஆறிவிடும்; என் ஆன்மாவை உன்னால் காயப்படுத்த முடியாது" என்றார்.

இறுதியில், ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவருடன் சேர்த்து, பார்பரா (Barbara) என்ற ஒரு புனிதரும் துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.