புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

01 March 2020

தூய டேவிட் (மார்ச் 01)

இன்றைய புனிதர் : 
(01-03-2020) 

தூய டேவிட் (மார்ச் 01)
நிகழ்வு

இன்று நாம் நினைவுகூரும் தூய டேவிட், பிரித்தானியாப் பகுதியில் மறைபரப்புப் பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய எதிரிகள் அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்லத் திட்டமிட்டார்கள். இதனைக் குறிப்பால் அறிந்த குத்தூஸ் என்ற புனிதர் டேவிட்டிடம் வந்து, நிகழப்போகிற சதித்திட்டத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதன்பேரில் டேவிட், தனக்கு முன்பாக விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவை சிலுவை அடையாளம் வரைந்து உண்ண, அது அவரை ஒன்றும் செய்யவில்லை.

ஆண்டவரின் அடியாரை யாரும் அணுகமுடியாது, அவருக்கு எவரும் எத்தீங்கும் செய்ய முடியாது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

டேவிட், கேரேசிகா இளவரசர் சாட் என்பவருக்கும் புனித நன்னா என்பவருக்கும் 495 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவருக்குத் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டபோது, திருமுழுக்குக் கொடுக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பட்ட ஒரு பார்வையற்றவர் பார்வைபெற்றார். அந்தளவுக்கு இவர் சிறுவயதிலே இறைவனின் ஆசிர் பெற்றவராக விளங்கி வந்தார். தொடக்கக் கல்வியை செயார்வார்கோன் என்ற இடத்தில் பெற்ற டேவிட், அதன்பிறகு தூய பவுலினுஸ் என்பவரிடம் சென்று கல்வி கற்றார். பவுலினுஸ் என்பவரிடம் ஏறக்குறைய பத்தாண்டுகள் கல்வி கற்றபின், பிரித்தானியாப் பகுதியில் மறைபரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டவுடன், டேவிட் அங்கு சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்.

டேவிட், பிரித்தானியாப் பகுதியில் நற்செய்தியை அறிவித்து வந்தபோது பல இடங்களில் துறவுமடங்களை நிறுவினார். ஒரு சமயம் டேவிட்டும் அவருடைய நண்பர்களும் எருசலேம் சென்றபோது அங்கே பெலேஜியனிசம் என்ற தப்பறைக் கொள்கையானது திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்தார். இந்த பெலேஜியனிசம் ‘ஆதாம் ஏவாள் வழியாக வரக்கூடிய ஜென்மப் பாவத்தை மறுத்துவந்தது. மேலும் திருமுழுக்குப் பெறாமல் இறக்கக்கூடிய குழந்தைகள் எந்தவொரு தடையும் இல்லாமல் விண்ணகத்திற்குச் சென்றுவிடும் எனச் சொல்லிவந்தது. இப்படிப்பட்ட கொள்கை, இறைவனின் மீட்புத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது என்பதால் டேவிட் அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார். அத்தப்பறைக் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். டேவிட்டிடம் இருந்த இத்தகைய திறமையைப் பார்த்துவிட்டு எருசலேமில் ஆயராக இருந்த டுப்ரிக் என்பவர் தன்னுடைய ஆயர் பதவியை டேவிட்டுக்குக் கொடுத்தார். அதுமுதல் டேவிட் மிக வல்லமையோடு தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து வந்தார்.

இறைவனின் ஆசிரை நிறைவாகப் பெற்றுக்கொண்ட டேவிட், ஒருசமயம் இறந்த கைம்பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தார். இதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். டேவிட் எப்போதுமே ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஆலயத்தில் ஜெபித்து வந்தார். அவருடைய இந்த ஜெப வாழ்வைப் பார்த்துவிட்டு மக்கள் எல்லாரும், இவரால் ஏராளமான புதுமைகளை செய்ய முடிகின்றதென்றால், அதற்குக் காரணம் இவருடைய ஜெப வாழ்வே என்று வியந்து பாராட்டினார்கள். டேவிட் தன்னுடைய 147 ஆம் ஆண்டில் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1120 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறைவனின் கைகளில் வல்லமையுள்ள கருவியாய் இருந்து செயல்பட்ட தூய டேவிட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஜெபத்தில் வேரூன்றி இருத்தல்

தூய டேவிட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு ஜெப மனிதராக இருந்திருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர் ஜெபத்தில் வேரூன்றி இருந்தார் அதனால்தான் அவரால் நிறைய புதுமைகளை செய்ய முடிந்தது. நாமும் ஜெபத்தில் வேரூன்றி இருக்கும்போது நம்மாலும் நிறைய அற்புதங்களைச் செய்ய முடியும் என்பது உண்மையாகின்றது.

நற்செய்தி நூல்களைப் படித்துப் பார்க்கும்போது ஆண்டவர் இயேசு கருக்கலில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஜெபித்தார் சென்று பார்க்கின்றோம். அதுபோன்று தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் இயேசு தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்று நற்செய்தி நூல்கள் எடுத்துரைக்கின்றன. இயேசு இறைமகனாக இருந்தும் ஜெபித்தார். அதன்வழியாக வல்லமையைப் பெற்றார். நாமும் நம்பிக்கையோடு ஜெபிக்கின்றபோது இறைவனிடம் நிறைவான ஆசிரைப் பெறுவது உறுதி.

ஆகவே, தூய டேவிட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெபத்திலும் வேரூன்றி இருப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.