† இன்றைய புனிதர் †
(மே 6)
✠ புனிதர் ஃபிரான்காய்ஸ் டி லாவல் ✠
(St. François de Laval)
கியூபெக் ஆயர் மற்றும் மறைப்பணியாளர்:
(Bishop of Québec, and Missionary)
பிறப்பு: ஏப்ரல் 30, 1623
மொண்டிக்னி-சுர்-அவ்ர், பேர்ச், ஃபிரான்ஸ் அரசு
(Montigny-sur-Avre, Perche, Kingdom of France)
இறப்பு: மே 6, 1708 (வயது 85)
கியூபெக், புதிய ஃபிரான்ஸ் வைசிராயல்டி, ஃபிரெஞ்ச் காலனி பேரரசு
(Quebec, Viceroyalty of New France, French colonial empire)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
புனிதர் பட்டம்: ஏப்ரல் 3, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)
முக்கிய திருத்தலம்:
நோட்ரே-டேம் டி கியூபெக் ஆலயம், கியூபெக் நகரம்
(Notre-Dame de Québec Cathedral, Quebec City, Quebec, Canada)
பொதுவாக "ஃபிரான்காய்ஸ் டி லாவல்" (François de Laval) என்று அழைக்கப்படும், "புனிதர் ஃபிரான்சிஸ்-சேவியர் டி மான்ட்மோரென்சி-லாவல்" (Saint Francis-Xavier de Montmorency-Laval), தமது 36 வயதில், திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் (Pope Alexander VII) அவர்களால், "கனடா" (Canada) நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தின் "கியூபெக்" (Quebec) மாகாணத்தின், முதல் ரோமன் கத்தோலிக்க ஆயராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
லாவல், ஃபிரான்ஸ் (France) நாட்டின் மிகப் பழமையான உன்னதமான குடும்பங்களில் ஒன்றான "மோன்ட்மோரென்சி" (Montmorency) குடும்ப உறுப்பினராக இருந்தார். மேலும், அவரது காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகவும் இருந்தார்.
லாவல், கி.பி. 1623ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் நாளன்று, பண்டைய மாகாணமான "பெர்ச்சில்" (Perche) உள்ள "மோன்டிக்னி-சுர்-அவ்ரே" (Montigny-Sur-Avre) நகரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஹியூஜெஸ் டி லாவல்" (Hugues de Laval) ஆகும். அவரது தாயார், "மிச்சேல் டி பெரிகார்ட்" (Michelle de Péricard), "நார்மண்டியில்" (Normandy) உள்ள அரச பரம்பரை அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது உன்னத வம்சாவளியாக இருந்தபோதிலும், அவரது பெற்றோர் செல்வந்தர்களாக கருதப்படவில்லை. லாவலுக்கு மேலும் ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அவரது இளைய சகோதரர் "ஹென்றி" (Henri), "பெனடிக்டைன்" (Benedictine Order) சபையில் இணைந்தார். அவரது சகோதரி "அன்னி சார்லோட்" (Anne Charlotte), :ஆசீர்வதிக்கப்பட்ட அருட்சாதன சகோதரியர்" (Congregation of Sisters of the Blessed Sacrament) சபையில் இணைந்தார்.
அவரது வாழ்நாள் முழுவதும், லாவலின் தாய் தொடர்ந்து பக்திக்கு ஒரு முன்மாதிரியாக பணியாற்றினார். மேலும், அதிர்ஷ்டமற்ற ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்யும்படி அவரை ஊக்குவித்து வந்தார். ஒரு திருச்சபை வாழ்க்கை முறைக்கு விதிக்கப்பட்டதாக பெரும்பாலும் விவரிக்கப்படும் லாவல், ஒரு தெளிவான பார்வை மற்றும் புத்திசாலித்தனமான சிறுவனாக விரைவில் அங்கீகரிக்கப்பட்டார்.
இதன் விளைவாக, அவர் விஷேட பதவிகளை உள்ளடக்கியவர்களின் குழுக்களைக் கொண்ட "பரிசுத்த கன்னி மரியாள் சபையில்" அனுமதிக்கப்பட்டார். இது, இளைஞர்களை ஆன்மீக வாழ்க்கை முறைகளை பின்பற்ற ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த, மேலும் வழக்கமான ஜெபத்தையும் ஆன்மீக நடைமுறைகளையும் ஊக்குவித்த இயேசுசபையினரால் நிறுவப்பட்ட ஒரு சமூகமாகும். எட்டு வயதில், லாவல் "டான்சரை" (Tonsure) (சமயச் சடங்குக்காக தலையை முழுவதுமோ (அ) பகுதியாகவோ மழித்தல்) ஏற்றார். பின்னர் கி.பி. 1631ம் ஆண்டு, "லா ஃப்லெச் கல்லூரியில்" (College of La Flèche) சேர அவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இந்த காலகட்டத்தில்தான், கனடாவில் "ஹூரான்" (Huron) இன மக்கள் மத்தியில் இயேசுசபையினரின் பணிகள் பற்றிய தகவல்களுடன் லாவல் தொடர்பு கொண்டார். இது அவரது பாதுகாவலர், புனிதர் ஃபிரான்சிஸ் சேவியரைப் (St. Francis Xavier) போலவே மிஷனரியாக வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்தது.
கி.பி. 1637ம் ஆண்டு, இவர் "எவ்ரியக்ஸ் பேராலய நியதியாக" (Canon of Cathedral of Évreux) ஆயரால் நியமிக்கப்பட்டார். கி.பி. 1636ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், லாவலின் தந்தை இறந்த பின்னர் இவர் வகித்த இந்த நிலைப்பாடு முக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபித்தது. தந்தையின் மரணம், அவரது குடும்பத்தை ஒரு ஆபத்தான நிதி சூழ்நிலையில் விட்டுச் சென்றது. அந்த பதவியில் இணைக்கப்பட்ட (Prebend) எனப்படும் கிறிஸ்தவக் கோயிலின் உறுப்பினருக்கு அளிக்கப்படும் மானியப் பகுதியிலிருந்து வருவாயைப் பெற இது அவரை அனுமதித்தது. அது இல்லாவிடில், அவர் தனது கல்வியைத் தொடர முடியாமல் போயிருக்கும். தமது பத்தொன்பது வயதில் தனது பண்டைய கிரேக்க இலத்தீன் கலைக்குரிய கல்வியை (Classical education) முடித்தவுடன், "லா ஃப்ளூச்" (La Flèche) நகரிலிருந்து கிளம்பி, பாரிஸில் (Paris) உள்ள "கிளெர்மான்ட்" (College de Clermont) கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியலில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
அவரது இரண்டு மூத்த சகோதரர்களின் மரணம் காரணமாக லாவலின் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இது அவரை குடும்பத்தின் தலைவராக மாற்றியது. இந்த கட்டத்தில், லாவல் தனது தந்தையின் தோட்டத்தை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக தனது ஆன்மீக, திருச்சபை வாழ்க்கையை கைவிடுவதற்கான முடிவை எதிர்கொண்டார். உண்மையில், அவரது தாயார், எவ்ரூக்ஸ் ஆயர், மற்றும் அவரது உறவினர் அனைவரும் அவரை பாரிஸ் நகரை விட்டு வெளியேறி வீடு திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றனர். ஆயினும்கூட, லாவல் தனது குடும்பத்தின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்தார். தனது தாய்க்கு குடும்ப விவகாரங்களை ஒழுங்காக அமைக்க உதவியதுடன், தனது முதன்மையான பொறுப்புக்களை முழுமையாக கைவிட ஏற்பாடு செய்தார். பின்னர் அவரது சகோதரர் ஜீன் லூயிஸுக்கு (Jean-Louis) தமது பொறுப்புக்களை மாற்றித் தந்தார்.
கி.பி. 1647ம் ஆண்டு, மே மாதம், முதல் தேதி, தமது இருபத்துநான்கு வயதில்,லாவல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இதற்குப் பிறகு, எவ்ரெக்ஸின் ஆயர், லாவலை தனது திருச்சபை பாதையை கைவிடுமாறு சமாதானப்படுத்த முயற்சித்ததற்கு வருத்தப்படத் தொடங்கினார். எனவே, கி.பி. 1647ம் ஆண்டு, டிசம்பர் மாதம், அவரை தனது மறைமாவட்டத்தின் தலைமை திருத்தொண்டராக (Archdeacon) நியமிக்க முடிவு செய்தார். 155 பங்குகள் மற்றும் நான்கு சிற்றாலயங்களின் விவகாரங்களை மேற்பார்வையிட லாவலுக்கு இப்பதவி அவசியப்பட்டது. லாவல் இந்த பணியை உணர்ச்சிபூர்வமாகவும், தீவிர ஆர்வத்தோடும் அணுகுவதாகக் கூறப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், பங்குகளில் ஒழுங்கை நிறுவுவதற்கும், ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், நோயுற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கும், பல்வேறு வகையான தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்தார். அவரது இதே நடத்தை பின்னர், அவரது வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட கண்டத்தில் தொடர்ந்தது.
நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், பயணிக்கவும் ஒரு மறைப்பணி மிஷனரியாக மாற வேண்டும் என்று லாவல் கனவு கண்டார். மிஷனரியாக பணியாற்றுவதற்கான சாத்தியம் அவருக்கு வழங்கப்பட்டபோது, அவர் 1654ம் ஆண்டு, தனது பங்கில் இருந்து தமது தலைமை திருத்தொண்டர் பதவியை ராஜினாமா செய்தார்.
லாவல் இப்போது தமது எல்லாப் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இதனால் ஜெபத்தின் மூலம், கடவுள் அவருக்காகக் கொண்டிருக்கும் வடிவமைப்புகளுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். ஃபிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் சீர்திருத்தத்தில் ஒரு தலைவராக இருந்த பொதுநிலையினரான "ஜீன் டி பெர்னியர்ஸ் டி லூவிக்னி" (Jean de Bernières de Louvigny) என்பவரால் இயக்கப்படும் துறவுமடம் (Hermitage) என்று அழைக்கப்படும் ஆன்மீக தியான இல்லங்களில் தங்குவதற்காக அவர் வடமேற்கு ஃபிரான்ஸிலுள்ள "கெய்ன்" (Caen) நகருக்குச் பயணித்தார்.
மூன்று வருடங்கள் அங்கேயே இருந்த லாவல், பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சமயத்தில்தான், மிகவும் தளர்வான ஒழுக்கநெறிகள் கொண்டது என்று கருதப்பட்ட ஒரு மடத்தை சீர்திருத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதே போல் கன்னியாஸ்திரிகளின் இரண்டு மடங்களின் நிர்வாகியாகவும் ஆனார். இந்த திட்டங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு அவருக்கு "பேயக்ஸ் ஆயர்" (Bishop of Bayeux) ஃபிரான்காய்ஸ் டி செர்வியன்" (François de Servien) என்பவரது பாராட்டுக்களைப் பெற்றது. அவர் லாவலை மிகுந்த பக்தியான, விவேகமுள்ள மற்றும் வணிக விஷயங்களில் வழக்கத்திற்கு மாறாக சிறந்த திறமையான, நல்லொழுக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள் நிறைந்தவர் என்று ஆயர் வர்ணித்தார். லாவல் இப்போது ஆத்மீக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் ஆனார். மற்றும் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர தயாராக இருந்தார்.
கனடிய திருச்சபை தந்தை:
புதிய ஃபிரான்ஸ் காலனிக்கான ஆயராக லாவல் பரிந்துரைக்கப்பட்டதன் விளைவாக காலனியின் திருச்சபை நிலை தொடர்பான பதட்டங்களை அதிகரித்தன. புதிய ஃபிரான்ஸ் காலனி குடியேற்ற காலம் முதல் 50 ஆண்டுகள் வரை, ஒரு ஆயர் இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில், ஆன்மீக விஷயங்கள் பெரும்பாலும் காலனியின் ஆன்மீக அதிகாரிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதிகாரம் நினைவுகூரல்களிலிருந்து இயேசுசபை குருக்களுக்கு நகர்ந்தது. கி.பி. 1646ம் ஆண்டில், ரோமில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாக, ரூயன் பேராயர் (Archbishop of Rouen) புதிய ஃபிரான்ஸில் உள்ள திருச்சபையின் உடனடி அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். இந்த அங்கீகாரத்துடன் கூட, பேராயரின் அதிகாரம் காலனிக்கு பயணிக்கும் மதகுருக்களுக்கு ஆசிரியர்களை வழங்குவது வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில், புதிய ஃபிரான்ஸ் காலனிக்கு இன்னும் உடனடி ஆயர்கள் தேவை என்பது ஏற்கனவே தெளிவானது.
ஒரு புதிய ஆயரை நியமிப்பது என்பது, இயேசுசபையினருக்கும், புதிதாய் வந்த சல்பீசியன் (Sulpicians) குருக்களுக்குமிடையே கடினமானதும், ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவும் இருந்து வந்தது. இந்த நேரத்தில் சுயாதீனமாக பணியாற்றுவதில் மிகவும் பழக்கமாக இருந்த இயேசுசபையினர், ஒரு சல்பிசியன் ஆயரிடம் தாம் கட்டுப்படுத்தப்படுவோம் என்று அஞ்சினர். ஒரு சல்பீசியன் ஆயர், தங்களது கட்டுப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவார் என்றும், இறுதியில் திருச்சபையை ஆட்சியாளர்களுக்கு அடிபணியச் செய்வார் என்ற நம்பிக்கை அவர்களின் அசௌகரியமாக அவர்களுக்கு தோன்றியது. சல்பீசியர்கள், தங்களது "கேப்ரியல் துபியர்ஸ் டி லெவி டி கியூலஸ்" (Gabriel Thubières de Levy de Queylus) என்பவரை முன்மொழிய முனைப்பாக இருந்தபோது, இயேசுசபையினர் லாவலுக்கு தங்கள் ஆதரவைத் திருப்பினர். அரசியின் தாயாரான "ஆஸ்திரியாவின் அன்னி" (Anne of Austria) உதவியுடன் அரச அங்கீகாரத்தைப் பெறுவது சிறிய சவாலை அளித்தது.
திருத்தந்தையின் உறுதிப்படுத்துதல் கிடைப்பதில் இருந்த தாமதம், இயேசுசபையினருக்கும் லாவலுக்கும் தடையாக இருந்தது. ஒரு ஆயர் தேவை என்று அவர்கள் இயேசுசபையினருடன் உடன்பட்டனர். இருப்பினும், லாவல் ஆயரானால், இயேசுசபையினருக்கு மீண்டும் காலனியின் மீது ஏகபோக உரிமையை வழங்க முடியும் என்று அவர்கள் அஞ்சினர். இயேசுசபையினருக்கும் ரோம் தலைமைக்கும் இடையிலான சமரசத்தில், லாவல் புதிய ஃபிரான்ஸ் காலனியின் அப்போஸ்தலிக் விகாராக (Apostolic Vicar of New France) நியமிக்கப்பட்டார்.
அப்போஸ்தலிக் விகாராக நியமிக்கப்படுவதோடு, கனடாவில் திருச்சபையை கட்டியெழுப்ப அவருக்கு தேவையான சக்தியை வழங்குவதற்காகவும், "பார்ட்டிபஸ்" (Partibus) நகர ஆயராக அங்கீகரிக்கப்பட்ட லாவல், கி.பி. 1658ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, கியூபெக்கின் விகார் அப்போஸ்தலிக் (Vicar Apostolic of Quebec) ஆக, பாரிஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் அருட்பொழிவு செய்யப்பட்டார். அரச விசுவாச சத்திய பிரமாணம் செய்த லா, "லா ரோச்" (La Rochelle) நகரிலிருந்து புதிய ஃபிரான்ஸ் காலனிக்கு கி.பி. 1659ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் தேதி, பயணப்பட்டார். அதே ஆண்டின் ஜூன் மாதம், 16ம் நாளன்று, அவர் கியூபெக்கிற்கு வந்தார். வந்தவுடனேயே லாவல் தனது பணிகளைத் தொடங்கினார். அவரது கப்பல் வந்த அதே நாளில், அவர் ஒரு இளம் ஹூரோன் வாசிக்கு திருமுழுக்கு அளித்தார். இறக்கும் தருவாயில் இருந்த மனிதன் ஒருவருக்கு தனது கடைசி அருட்சாதனங்களை வழங்கினார்.
பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்ட லாவல், கைவினைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், நடைமுறைக் கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டினார். "செயிண்ட்-ஜோச்சிம்" (Saint-Joachim) நகரில் கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிறுவினார்.
பிற்பகுதியில் ஆண்டுகள்:
நியூ ஃபிரான்ஸ் காலனியில் அவர் வந்ததிலிருந்து, காலனியில் குருக்களை பயிற்றுவிப்பதற்கு மேல், ஒரு சிறிய அமைப்பை நிறுவவும் ஒழுங்கமைக்கவும் லாவல் வலியுறுத்தி வந்தார். 1678ம் ஆண்டில், காலனியில் நிரந்தர அமைப்புகள் அமைக்கப்படும் என்று கூறி அரசரிடமிருந்து ஒரு அரசாணையைப் பெற்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1681ம் ஆண்டில், திருச்சபையின் நிலைப்பாட்டை நிரந்தரமாக உறுதிப்படுத்தும் முயற்சியில் லாவல் திருச்சபைகளின் எல்லைகளை வரைந்தார். ஒவ்வொரு பங்கினையும் அடிக்கடி பார்வையிட்ட லாவல், அவரது உடல்நிலை குறைந்து வருவதையும், இனி அகாடியா (Acadia) முதல், மிச்சிகன் ஏரி (Lake Michigan) வரை விரிவாக்கம் பெற்ற தனது பெரிய மறைமாவட்டத்தை இயக்க முடியாது என்பதையும் உணர்ந்தார். இதன் விளைவாக, 1688ம் ஆண்டு, ஜீன்-பாப்டிஸ்ட் டி லா குரோயிக்ஸ் டி செவ்ரியர்ஸ் டி செயிண்ட்-வள்ளியர் (Jean-Baptiste de La Croix de Chevrières de Saint-Vallier) என்பவருக்கு தனது ஆயர் பொறுப்புகளை வழங்கினார்.
லாவல் தனது கடைசி நாட்கள் வரை காலனியின் உயர் ஆன்மீக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்தார். அவர் தம்மிடமுள்ள இருப்பு மற்றும் தர்மமாக கிடைத்த பரிசுகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவினார். உடல்நலம் குறைந்து கொண்டிருந்த போதிலும், அவர் ஒரு திருப்பலியையோ, அல்லது ஒரு நாள் உண்ணாவிரதத்தையோ தவறவிட்டதில்லை. கி.பி. 1707ம் ஆண்டு வாக்கில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இறுதியில் கி.பி. 1708ம் ஆண்டு, மே மாதம், 6ம் தேதியன்று, மரித்தார்.