இன்றைய புனிதர் :
(28-05-2020)
தூய ஜெர்மானுஸ் (மே 28)
“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5: 7)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் தூய ஜெர்மானுஸ் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆட்டன் என்னும் இடத்தில் 496 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளரும்போதே ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கி வந்தார்.
இவர் வளர்ந்து இளைஞனாகியபோது குருவாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் துறவுமடத்தில் சேர்ந்து தன்னுடைய முப்பத்தி நான்காம் வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். குருவாக மாறிய பின் இவர் சிம்போரியன்ஸ் என்ற துறவுமடத்தில் தங்கி தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இயல்பிலே இரக்க குணம் கொண்ட ஜெர்மானுஸ் ஏழை எளியோருக்கு வாரி வாரி வழங்கினார். தன்னிடம் கேட்பவருக்கு முகம் கோணாமல் உதவி செய்து வந்தார். சில சமயங்களில் இவருடைய சபையில் இருந்த துறவிகள், எங்கே ஜெர்மானுஸ் துறவுமடத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவாரோ என்றுகூட பயந்தார்கள். அந்தளவுக்கு இவர் தாரள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் பாரிசில் இருந்த ஆயர் யூசேரியுஸ் இறந்துவிட, இவர் ஆயராக பதவி உயரும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆயராக உயர்ந்த ஜெர்மானுஸ் மிகச் சிறப்பான முறையில் ஆன்மீகப் பணிகளையும் மக்கள் பணியையும் ஆற்றிவந்தார்.
ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டு அரசர் கில்டபர்ட் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும், அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி, கைநழுவிவிட்டு போய்விட்டனர். விஷயம் அறிந்த ஜெர்மானுஸ் அரசர் முன்பாகச் சென்று, முழந்தாள்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இவ்வாறு ஜெபிக்கத் தொடங்கிய சில மணிநேரத்திலே அவர் உடல்நலம் தேறி பிழைத்துக்கொண்டார். இதனால் மகிழ்ந்து போன ஜெர்மானுசை தன்னுடைய ஆலோசகராக வைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் அரசர் ஜெர்மானுசுக்கு வேண்டிய மட்டும் உதவி செய்து வந்தார்.
ஜெர்மானுஸ் பிரான்சில் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் பொது சங்கங்களில் கலந்துகொண்டு, திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு மிகவே உழைத்தார். அதோடு திருவழிபாட்டில் இருந்த தேவையற்ற சடங்குமுறைகளை எல்லாம் அகற்றி ஒரு வழிக்குக் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளின் ஏந்தலாய், திருச்சபையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு வாழ்ந்து வந்த ஜெர்மானுஸ் 576 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. நன்மை செய்யும் வாழ்க்கை வாழ்தல்
தூய ஜெர்மானுசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. அவர் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளியவருக்கு நன்மை செய்வதில் மிகவும் கருத்தாய் இருந்தார். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம் நன்மை செய்வதில் கருத்தாய் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திருத்தூதர் பணிகள் நூல் 10:38 ல் வாசிக்கின்றோம், “கடவுள் நாசரேத்து இயேசுவோடு இருந்ததால் அவர் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்தது எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்” என்று. ஆம், இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். அவர் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்துகொண்டே செல்வதுதான் சிறப்பாக ஒரு காரியமாகம்.
ஒரு சமயம் பிரான்சில் ஆயராக இருந்த மாசிலோன் (Massilon) என்பவர் இறைமக்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்: “என்னுடைய மறையுரையைக் கேட்டுவிட்டு, என்ன ஒரு அருமையான மறையுரை, இவர் எவ்வளவு சிறப்பாக போதிக்கின்றார் என்று சொல்வதை விடவும் மறையுரையைக் கேட்ட பின்பு ஏதாவது நல்லது செய்வேன் என்று சொல்வதே சிறப்பானது, அதுவே நான் விரும்புவது”.
ஆம், மறையுரை நன்றாக இருக்கின்றது, குருவானவர் நன்றாக மறையுரை ஆற்றுகிறார் என்று சொல்வதை விடவும் மறையுரையில் சொல்லப்பட்ட கருத்துகளின் வாழ்வேன் என்று சொல்வதே சிறப்பானது.
ஆகவே, தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
இன்றைய புனிதர்2020-05-28புனித கெர்மானூஸ் (St.Germanus)ஆயர் (Bishop)
பிறப்பு 496 அவுடன்(Autun), பிரான்சு | | இறப்பு 28 மே 576
|
தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார். தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது. இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார். அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார். அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.
இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.
இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.
செபம்:ஏழைகளின் நண்பனே எம் இயேசுவே! செப, தவ முயற்சியினால் புனித கெர்மானூஸ், ஏழை மக்களுக்கு உதவினார். ஆனால் பல சமயங்களில் நாங்கள் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி செய்ய மனம் இல்லாமல் இருந்திருக்கின்றோம். இப்புனிதரின் வழியாக நாங்கள் எங்களின் தவற்றை உணர உதவியிருக்கின்றீர். உமது உதவியினால் ஏழைமக்களை நாங்கள் நண்பர்களாக ஏற்று, உதவி செய்து, வாழ உமதருளை தந்தருளும்.
|
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
காண்டர்பரி பேராயர் லான்பிரான்சு Lanfranc von Canterburyபிறப்பு: | 1005, பவியா Pavia, இத்தாலி | இறப்பு: | 28 மே 1089, காண்டர்பரி, இங்கிலாந்து |
ரூத்ஹார்டு Ruthhardபிறப்பு: | 11 ஆம் நூற்றாண்டு, பவேரியா | இறப்பு: | 1150, அவ் Au, பவேரியா |
|
† இன்றைய புனிதர் †
(மே 28)
✠ பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் ✠
(St. Germain of Paris)
பாரிஸ் மறைமாவட்ட ஆயர்/ ஏழைகளின் தந்தை:
(Bishop of Paris/ Father of the Poor)
பிறப்பு: கி.பி. 496
அவுடன், ஃபிரான்ஸ்
(Autun, France)
இறப்பு: மே 28, 576
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
புனிதர் பட்டம்: கி.பி. 754
திருத்தந்தை இரண்டாம் ஸ்டீஃபன்
(Pope Stephen II)
நினைவுத் திருநாள்: மே 28
புனிதர் ஜெர்மாய்ன், பாரிஸ் மறை மாவட்ட ஆயரும் (Bishop of Paris) "ஏழைகளின் தந்தை" (Father of the Poor) என அறியப்படுபவரும் ஆவார்.
ஃபிரான்ஸ் நாட்டின் "அவுடன்" (Autun) என்ற இடத்தினருகே வசதியுள்ள "கல்லோ-ரோமன்" (Gallo-Roman) இன பெற்றோருக்குப் பிறந்த ஜெர்மாய்ன், "பர்கண்டியிலுள்ள" "அவல்லான்" (Avallon in Burgundy) என்ற இடத்தில் கல்வி கற்றார்.
தமது 35 வயதில் புனிதர் "அக்ரிப்பினா" (Saint Agrippina of Autun) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், அருகாமையிலுள்ள "புனிதர் சிம்போரியன்" (Abbey of St. Symphorian) துறவு மடத்தின் மடாதிபதியானார்.
கி.பி. 555ம் ஆண்டு, பாரிஸ் நகரின் ஆயர் "சிபெலியஸ்" (Sibelius, the Bishop of Paris) இறந்துவிடவே, அரசர் "முதலாம் சில்டேபர்ட்" (Childebert I) ஜெர்மாய்னை ஆயராக தேர்ந்தெடுத்து அருட்பொழிவு செய்வித்தார்.
ஆயர் ஜெர்மாய்ன் அவர்களின் ஆலோசனைகளாலும், செல்வாக்கினாலும் அரச குடும்பமே ஒரு சிறப்பான சீர்திருத்த வாழ்க்கை வாழ்ந்தது. அரசவையில் பணியாற்றியபோதும், எளிமையையும், துறவு வாழ்வையும் ஒருபோதும் எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினாலும், அருமையான, எளிமையான மறையுரையாலும் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரது மறையுரையைக் கேட்கவே மக்கள் கூடி வந்து, காத்திருந்தனர்.
566ம் ஆண்டு, "டூர்ஸ்" நகரில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டில் (Second Council of Tours) பங்குபெற்றார். கி.பி. 557ம் ஆண்டு முதல் கி.பி. 573ம் ஆண்டு வரை பாரிஸ் நகரில் நடந்த மூன்றாம் மற்றும் நான்காம் மாநாடுகளிலும் (Third and Fourth Councils of Paris) கலந்துகொண்டார். "கௌல்" (Gaul) மாநிலத்தில் வழக்கத்திலிருந்த பாகனிய பழக்கங்களை முறித்துக் கொள்ளும்படி அரசனை அவர் தூண்டினார். பெரும்பாலான கிறிஸ்தவ திருவிழாக்களுடன் பாகன் கொண்டாட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தடைசெய்யப்பட்டது.
ஆயர் ஜெர்மாய்ன் கி.பி. 576ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மரித்தார்.