இன்றைய புனிதர் :
(17-05-2020)
தூய பாஸ்கல் பைலோன் (மே 17)
“தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” (மத் 11:25)
வாழ்க்கை வரலாறு
பாஸ்கல் பைலோன் 1540 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள, டோரேஹர்மோசா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் மார்டின் மற்றும் எலிசபெத் என்பவர் ஆவர். பைலோனின் குடும்பம் சாதாரண ஒரு விவசாயக் குடும்பம். ஆனால் பக்தியில் சிறந்த குடும்பம் எனவே பைலோனும் பக்தியில் சிறந்து விளங்கிவந்தார்.
பைலோன் 7 வயது முதல் 24 வயது ஆடுமேயத்து வந்தார். அப்படி அவர் ஆடு மேய்க்கச் செல்லும்போது புத்தங்களையும் கையில் எடுத்துக்கொண்டு செல்வார். போகிற வழியில் இருக்கும் படித்தவர்களிடம் அந்தப் புத்தகங்களைக் கொடுத்து, அதை வாசித்துக் காட்டச் சொல்லி, அதன்மூலம் தன்னுடைய வாசிக்கும் பழக்கத்தையும் அறிவையும் பெருக்கிக் கொண்டார். பைலோனுக்கு 24 வயது நடக்கும் இறைவனின் சிறப்பான அழைப்பினை உணர்ந்தார். எனவே அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து சகோதரராக வாழத் தொடங்கினார்.
இவர் பிரான்சிஸ்கன் சபையில் சகோதராக இருந்த நாட்களில் எல்லாம் நற்கருணை ஆண்டவரிடத்திலும் அன்னை மரியாவிடமும் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். குறிப்பாக இவர் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக இரவு நேரங்களில் மணிக்கணக்காக முழந்தாள் படியிட்டு ஜெபித்து வந்தார். இது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.
1570 ஆம் ஆண்டு இவர் பிரான்சில் உள்ள ஹியூகோனாட் என்னும் பகுதிச் சென்று நற்செய்தி அறிவிக்கச் சென்றார். அப்பகுதியில் கால்வினியன் சபையைச் சார்ந்தோர் அதிகமாக இருந்தார்கள். கால்வினியன் சபையைச் சார்ந்தவர்களோ நற்கருணையில் இயேசு இருக்கின்றார் என்று ஏற்றுக்கொள்வது கிடையாது. பைலோனோ நற்கருணையில் ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று எடுத்துச் சொன்னபோது, அவர்கள் பைலோனைக் கொலைசெய்வதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் பைலோனோ அதிர்டவசமாக அவர்களிடமிருந்து தப்பித்து வேறோர் இடத்திற்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். இதற்கு மத்தியில் பைலோன் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்துவந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 1592 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
பைலோன் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள்: நம்முடைய ஆன்மாவை அழிவிலிருந்து காத்துக்கொள்ள மூன்று வகையான இதயங்களை நாம் கொண்டிருக்கவேண்டும். ஒன்று தந்தைக் கடவுளிடம் இரஞ்சி நிற்கக்கூடிய மகனுடைய இதயம். இரண்டு அருகில் இருப்பவர்கள் மீது அன்பு கொள்ளக்கூடிய தாயின் இதயம். மூன்று நம்மையே நாம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கக்கூடிய நீதிபதியின் இதயம். இந்த மூன்று இதயங்களையும் ஒரு மனிதன் கொண்டிருக்கின்றபோது, அவன் தன்னுடைய ஆன்மாவை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக்கொள்வான்”.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பாஸ்கல் பைலோனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன படத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி
தூய பைலோனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய மனதில் தோன்றுகின்ற சிந்தனை எல்லாம், அவர் நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவுகடந்த பக்திகொண்டு வாழ்ந்ததுதான். தூய பைலோனைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நற்கருணையை கிறிஸ்தவர்களுடைய வாழ்வின் ஊற்றும் உச்சமும்” என்று சொல்கின்றது. இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? அதற்கு உரிய முக்கியத்துவத்தை நம்முடைய வாழ்வில் கொடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த இடத்தில் சீனாவில் பேராயராக பணியாற்றி 21 ஆண்டுகளாக சிறையிலிருந்து சித்ரவதையை அனுபவித்த பேராயர் டோமினிக் டாங் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகின்றது. சிறையில் அவர் மிகக் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில் இரண்டு மணிநேரம், தான் விரும்பியதை செய்ய அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் வேறு எதையும் கேட்கவில்லை, திருப்பலி நிறைவேற்றி, நற்கருணை ஆண்டவரை உட்கொள்ள வேண்டும் என்றே கேட்டார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். பேராயர் டோமினிக் டாங் நற்கருணை ஆண்டவரிடத்தில் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைக்கின்றது.
ஆகவே, தூய பைலோனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.