இன்றைய புனிதர் :
(04-04-2020)
தூய இசிதோர் (ஏப்ரல் 04)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2: 52)
வாழ்க்கை வரலாறு
இசிதோர், 560 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்தில் இவரோடு பிறந்த சகோதரர்கள் லியாண்டர், புல்ஜென்சியஸ் மற்றும் சகோதரி ப்ளோரென்டினா என யாவருமே பிற்காலத்தில் புனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.
இசிதோர் தன்னுடைய மூத்த சகோதரர் லியாண்டர் தந்த உற்சாகத்தினால் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார். இவருடைய எழுத்தாற்றலால் உருவான புத்தகங்கள் அதிகம். “History of the Goths, A history of the world, A Dictionary, Encyclopaedia” போன்றவை எல்லாம் இவருடைய எழுத்தாற்றலுக்கு மிகப்பெரிய சான்றுகள். இப்புத்தகங்கள் எல்லாம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.
600 ஆம் ஆண்டு, செவில்லேவில் ஆயராக இருந்த இசிதோரின் மூத்த சகோதர் இறந்துவிடவே, அந்தப் பொறுப்பு இசிதோருக்குக் கொடுக்கப்பட்டது. இசிதோர் ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். இசிதோர் ஏழை எளிய மக்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய ஆயர் இல்லத்தை ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டி எழுப்பினார். மட்டுமல்லாமல் ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்த்து, தங்களுடைய குறைகளை தன்னிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று கூறி, அதன்படியே செய்தார்.
இசிதோர், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று அரும்பாடு பட்டார். அதோடு கூட ஒவ்வொரு பங்காலயத்திற்குப் பக்கத்திலும் குருமடம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குருமடத்தில் சேர்ந்து இளைஞர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வந்தார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, தங்களுடைய குழந்தைகளை குருமடங்களுக்கு அனுப்பி வைத்து ஆன்மீகக் கல்வியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள்.
இப்படி இடையறாது மக்களுக்கும் இறைவனுக்கும் பணி செய்து வந்ததால், இசிதோரின் உடல் நலம் குன்றியது. அதனால் அவர் 636 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறப்பதற்கு சிறு நேரத்திற்கு முன்பாக இறைமக்களிடம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொண்டு, அதன்பிறகே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1598 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் 1722 ஆம் ஆண்டு இறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. ஏழைகளுக்கு உதவி செய்தல்
தூய இசிதோரின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அதன்மூலம் அவர் அவர்களுக்குச் செய்த உதவியும் தான் நமது நினைவுக்கு வருகின்றது. இவருடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகளிடத்தில் அன்பும் அவர்களுக்கு உதவியும் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மிகச் சிறியோராகிய ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று (மத் 25: 40). ஆம், ஏழைகளுக்குச் செய்கின்ற உதவி இறைவனுக்கே சென்று சேருகின்றது. அது நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது என்பது உண்மை.
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவ். அவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று ஒருநாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட அவர் வீல்சேரில் முடங்கிப் போனார். அப்போது பத்திரிக்கையாளர் சிலர் அவருடைய மனைவி டானாலியிடம், “உங்கள் கணவருடைய புனர்வாழ்வு முறை எப்படிப் போகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எல்லாருக்கும் நிறைய உதவி செய்கின்றோம்” என்றார். சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு கிறிஸ்டோபர் ரீவ் அவர்களிடம், “எப்போதெல்லாம் எதையோ இழந்த தோல்வி வருகிறதோ அப்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு உதவுவோம். நமக்கு நாமே உதவிக் கொள்ள நல்ல வழி மற்றவருக்கு உதவுவதும் அதனால் வரும் மகிழ்ச்சியும் தான்” என்று கூறினார்.இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிகவும் வியந்துபோனார்.
ஆம், நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏழைகளுக்கு உதவி செய்வது. தூய இசிதோரும் ஏழைகளுக்கு அப்படித்தான் உதவி செய்தார்.
ஆகவே, தூய இசிதோரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.