புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 April 2013

பாஸ்கா - 3ஆம் வாரம்


திங்கள்



முதல் வாசகம்

ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.

23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். பல்லவி

26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.

அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ``ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, ``நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, ``எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பாஸ்கா - 3ஆம் வாரம் ஞாயிறு


பாஸ்கா - 3ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு



முதல் வாசகம்

 இவற்றுக்கு நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27b-32. 40b-41

அந்நாள்களில் தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, ``நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!'' என்றார்.

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, ``மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர்.

இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10-11ய,12b (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைத்தூக்கிவிட்டீர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி



இரண்டாம் வாசகம்

 கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14

யோவான் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: ``கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது'' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், ``அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன'' என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், `ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக் குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள், ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள்.

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார்.

ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார்.

சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆடுகளை மேய்'' என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார். `உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ``ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார்.

இயேசு அவரிடம், ``என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், ``என்னைப் பின்தொடர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



அல்லது

குறுகிய வாசகம்



இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார்.

அவர்கள் ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந் திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Apr 14 SUN: THIRD SUNDAY OF EASTER

Acts 5: 27-32. 40b-41/ Ps 30: 2. 4. 5-6. 11-12. 13 (2a)/ Rv 5: 11-14/ Jn 21: 1-19



‘உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோன்.’

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’.

அதிகாலை நேரம் அழகிய கடற்கரை ஓரம் நெருப்பு மூட்டி அப்பத்தையும் மீனையும் சுட்டு உணவருந்த வாருங்கள் என்று இயேசு தம் சீடரை அழைப்பது ‘வாங்க சாப்பிட வாருங்க’ என்று தாய்க் கூறிய பாசத்தோடு அழைப்பதற்கு ஒப்பாகும். இந்த அலாதி அன்பில் நனைந்த சீடர்கள் சிறிதும் அச்சமின்றி இயேசுவுக்காக உயிர் கொடுக்கவும் துணிந்தனர், சாட்சிகளாய் மரித்தனர். அன்றாடம் அவர் உடலை உண்டு, குருதியைப் பருகும் நாம் நம் சாட்சிய வாழ்வை அலசிப் பார்த்து விசுவாசத்தில் உறுதியாய் நிலைப்போம்.



முன்னுரை:

            பாஸ்கா காலத்தின் 3ஆம் வாரம் இது.

‘உணவருந்த வாருங்கள்’, என்ற அழைப்பை தன்னுடைய சீடர்களுக்கு கொடுக்கின்றார். களைத்தவரை ஊக்குவிக்க, தானே முன்நின்று உணவருந்த அழைக்கின்றார். பிடித்த சில மீன்களையும் கொண்டு வரச் சொல்லி உணவு கொடுக்கின்றார்.

திருவிருந்து வாருங்கள் என்ற அழைப்பை ஏற்று, பலியிலே பங்கேற்க வந்துள்ளோம். நம்மிடையே உள்ளவைகளையும் எடுத்துச் சென்று, பகிர்ந்து உண்ண அழைக்கப்பட்டுள்ளோம்.

அம்மையப்பனாக உள்ள இறைவனின் கருணையை புசித்துப் பார்த்து, நாமும் பசிப்போக்கும் தாய்மை உள்ளம் கொண்டவர்களாவோம். வரம் வேண்டுவோம்.



மன்றாட்டு:

            திருச்சபை, தன்னுடைய அமைப்பு ரீதியிலான போக்கை மாற்றி, இயேசுவின் தாய்மைப் பண்பினை தனதாக்கி, உணவு கொடுத்து, உயிர் கொடுத்து வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாட்டு மக்களின் வறுமையை பயன்படுத்தி, முதலாளிகள் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ளாமல், பகிர்ந்து கொடுத்து வாழும் மனதினை தந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விலைவாசி ஏற்றத்தின் பாதிப்பினை உணர்ந்து ஆள்வோர், தங்களது பொருளாதார கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள அறிவை, ஞானத்தை தந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

முயற்சிக்காமல், உழைக்காமல் உண்ணுகின்ற நிலையை மாற்றி உழைத்து, கடினப்பட்டு உழைத்து உண்ண, நல்மனம் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதிய தமிழ் புத்தாண்டில், தமிழர்கள் ஒன்றுபட்டு, தன்மானத்தோடும், தன்சக தமிழனின் நல்வாழ்வில் அக்கரையும் கொண்டு, தனிமனித துதி, சின்ன, வெள்ளை திரைகளுக்கு அடிமைப்பட்டு போகாமல் வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.