இன்றைய புனிதர் :
(14-04-2020)
தூய லிட்வினா (ஏப்ரல் 14)
“கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேது 4: 13)
வாழ்க்கை வரலாறு
லிட்வினா, 1380 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்தார். இவர் சிறு வயது முதலே அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். இவரிடமிருந்த பக்தியைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.
1396 ஆம் ஆண்டு லிட்வினாவின் வாழ்வில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து அவரை படுத்த படுக்கையாக்கியது. இது நடந்த சில நாட்களிலே அவருடைய முகம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டன. அந்தப் புண்கள் எல்லாம் அவருக்குத் தீராத வலியைத் தந்தது. இத்தகைய தருணங்களில் அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது தான் இவருடைய ஆன்ம ஆலோசகர் தந்தை ஜான் பாட் என்பவர் அவரிடம், இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கச் சொன்னார்.
லிட்வினா, இயேசுவின் பாடுகளை தியானிக்கத் தொடங்கியதிலிருந்து அவருடைய உடல் வேதனைகள் எல்லாம் தணிந்தன. அது மட்டுமல்லாமல், அவர் ஒருவிதமான பரவச நிலையை உணர்ந்தார். இதனால் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கத் தொடங்கி, இயேசுவுக்கு உகந்தவராக வாழத் தொடங்கினார். லிட்வினா அவ்போது காட்சிகள் கண்டார். அந்தக் காட்சிகளில் ஆண்டவர் இயேசு அவரோடு உறவாடினார், பல காரியங்களை அவருக்கு வெளிப்படுத்தினார்.
லிட்வினா, தனது கடைசிப் பத்தொன்பது ஆண்டுகளில் அவ்வளவாக உணவு உட்கொள்ளவில்லை, அதிக நேரம் ஓய்வெடுக்கவும் எப்போதும் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்தே தியானித்துக் கொண்டிருக்கவும் செய்தார். இதனால் அவர் இயேசு தன்னோடு எப்போதும் இருக்கின்றார் என்பதை உணர்ந்தார். நற்கருணை மட்டுமே உட்கொண்டு வந்தார். வேறு எந்த உணவையும் அவர் உட்கொள்ளவில்லை. நற்கருணைதான் அவருக்கு ஆன்மீக உணவாக மட்டுமல்ல, வாழ்வளிக்கும் உணவாக இருந்து வந்தது. இப்படி தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளைப் பொறுத்துக்கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகளைப் பற்றியே தியானித்துக் கொண்டிருந்த லிட்வினா 1433 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1890 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய லிட்வினாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. வலிகளைப் பொறுத்துக்கொண்டால், வாழ்வு வசந்தமாகும்
தூய லிட்வினாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு, அதனை வாழ்விற்கான சுருதியாக மாற்றிக்கொண்டது தான் நம்முடைய வியப்புக்குரியதாக இருக்கின்றது. தூய லிட்வினாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நம்முடைய வாழ்வில் நமக்கு ஏற்படும் வழிகளை, துன்பங்களைப் பொறுத்துக்கொள்கின்றோமா? இல்லை அவற்றைக் கண்டு முணுமுணுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நம்முடைய வாழ்வில் நமக்கு ஏற்படும் வலிகளைக் கண்டு நாம் கடவுளை சபிப்பது மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் தூய லிட்வினாவை நம்முடைய முன்னுதாரணமாகக் கொண்டு வலிகளைப் பொறுமையோடு தாங்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.
உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர். அவர் வரைந்த ஓவியங்கள் காலம் கடந்து பேசப்பட்டு வருகின்றன. அவர் ரூமேட்டிஸம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். அப்படியிருந்தும் அந்த நோய் தந்த வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவருடைய நண்பர், “ஒனாயரே! வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் ஓவியம் வரைவது அவசியமா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவரிடம், “வலி நீடிப்பது சில மணி நேரங்கள்தான். ஆனால் வரைவதன் இன்பமோ பல நாட்கள் நீடுகள். அதைவிடவும் வரைகின்ற ஓவியமோ காலம் கடந்தும் நிற்கும். அதனால் இப்படி ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கின்றேன்” என்றார்.
ஆமாம், வலிகளைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு தொடர்ந்து உழைப்பவரே, வாழ்வில் வசந்தத்தைக் காண்பார்.
ஆகவே, தூய லிட்வினாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, நம்முடைய வாழ்வில் வருகின்ற வலிகளைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.