புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 April 2020

தூய மாற்கு (ஏப்ரல் 25)

இன்றைய புனிதர் : 
(25-04-2020) 

தூய மாற்கு (ஏப்ரல் 25)
நிகழ்வு

மாற்கு அலெக்ஸாண்ட்ரியா நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். அவர் அந்நகருக்குள் நுழையும்போது அவருடைய காலணிகளில் ஒன்று அறுந்துபோய்விட்டது. எனவே, அவர் அருகே இருந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று தன்னுடைய காலணியைத் தைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். செருப்பு தைக்கும் தொழிலாளி மாற்குவின் காலணியைத் தைக்கும்போது தவறுதலாக அவர் பயன்படுத்திய ஊசி அவருடைய இடது கையில் பட இரத்தம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தது. அப்போது அவர் ‘கடவுள் ஒருவரே’ என்று சத்தமாகக் கத்தினார். உடனே மாற்கு அருகே கிடந்த மணலைக் குழப்பி சேறு உண்டாக்கி, அதனை எடுத்து அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் காயம்பட்ட கையில் வைத்தார். அவருடைய கையிலிருந்து வழிந்த இரத்தம் முற்றிலுமாக நின்றுபோனது, அவருக்கு இருந்த வலியும் காணாமல் போனது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன அம்மனிதர் மாற்குவிடம், “நீர் யார்?” என்று கேட்டார். அதற்கு மாற்கு, “நான் ஆண்டவர் இயேசுவின் ஊழியர், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காக இங்கே வந்தவர்” என எடுத்துரைத்தார்.

மாற்குவின் வார்த்தைகளால் தொடப்பட்ட செருப்பும் தைக்கும் தொழிலாளி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். அவர் பெயர் அணியானுஸ் என்பதாகும். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பம் முழுவதும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியது. இதனால் அவர்கள் அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். இதற்கிடையில் இச்செய்தி எப்படியோ நகரத்தவர் காதுகளை எட்ட அவர்கள் மாற்குவை கொல்லத் தீர்மானித்தார்கள். இதனால் மாற்கு அணியானுசை அலெக்ஸாண்ட்ரிய நகரின் ஆயராக திருப்பொழிவு செய்துவிட்டு வேறொரு நகருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

மாற்கு எருசலேமில் வாழ்ந்த மரியா (திப 12: 12-16) என்பவருடைய மகன். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். சிறையில் இருந்த பேதுரு அற்புதமாக தப்பித்து வெளியே வந்தபோது இவருடைய இல்லத்தில்தான் அடைக்கலம் புகுந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பர்னபாஸ் என்பவர் ஆவார். விவிலியத்தில் இவர் ஒருசில இடங்களில் ஜான் என்றும் அழைக்கப்படுகின்றார். ஜான் என்பது இவருடைய யூதப் பெயர். மாற்கு என்பது இவருடைய உரோமைப் பெயர்.

மாற்கு கி.பி. 46 ஆம் ஆண்டு பவுல் மேற்கொண்ட அந்தியோக்கு நகர் நோக்கி முதலாவது திருத்தூது பயணத்தில் உடன் சென்றார். ஆனால் பெர்கே என்ற நகரில் பவுலுக்கும் மாற்குவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாற்கு தனியாகப் பிரிந்துபோனார். கி.பி. 60 ஆம் ஆண்டு பவுல் உரோமை நகருக்கு வந்தபோது, மாற்கு மீண்டுமாக அவரோடு சேர்ந்துகொண்டார். பவுல் இவரைக் குறித்து குறிப்பிடும் போது “என்னுடைய பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்” (2 திமோ 4:11) என்று குறிப்பிடுகின்றார். மாற்கு பேதுருவின் சீடராகவும், செயலராகவும், விரிவுரையாளராகவும் இருந்து செயல்பட்டு இருக்கிறார். அதனால்தான் பேதுரு இவரை, “மாற்கு என்னுடைய அன்பிற்குரிய மகன்” என்று குறிப்பிடுகின்றார் (1 பேதுரு 5:13). பேதுருவிடமிருந்துதான் மாற்கு கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டார்.

மாற்கு, இரண்டாம் நற்செய்தி எனப்படும் ‘மாற்கு நற்செய்தியை’ எழுதியிருக்கிறார். இச்செய்தியை அவர் உரோமையில் இருந்த காலகட்டங்களில் உரோமைக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதினார். இது எழுதப்பட்ட காலம் கி.பி. 65 ஆகும். இந்நற்செய்தி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன. முதலாவது இந்நற்செய்தி நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் இதில் வருகின்ற நிகழ்வுகள் தத்தூரூபமாக, கண்முன்னே நடப்பது போன்று எழுதப்பட்டிருக்கும். மாற்கு அத்தகைய ஒரு சிறப்பாற்றலைப் பெற்றிருந்தார். இரண்டாவதாக மாற்கு, ஆண்டவர் இயேசுவை ஒரு துன்புறும் ஊழியராக, இறைமகனாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது வேறு எந்த ஒரு நற்செய்தி நூலுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். மூன்றாக மாற்கு திருமுழுக்குக் யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ சுட்டிக்காட்டுகின்றார். அதனால்தான் மாற்கு நற்செய்தியாளருக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்கு அலெக்ஸ்சாண்ட்ரியா, எகிப்து போன்று இடங்களில் நற்செய்தியை அறிவித்தார். இவர் அலெக்ஸ்சாண்ட்ரியா நகரில் நற்செய்தி அறிவிக்கும்போது கயவர்கள் சிலர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள். அடுத்த நாள் இவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி தெருவெங்கும் இழுத்துச் சென்றார்கள். அவர் அப்படி இழுத்துச் செல்லப்படும் போதே உயிர் துறந்தார். அவர் தன்னுடைய உயிரைத் துறந்த நாள் கிபி 68 ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியாகும். பின்னர் மாற்குவின் பணியாளர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று, வெனிஸ் நகரில் அடக்கம் செய்தார்கள். அவருடைய கல்லறை வெனிஸ் நகரில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

நற்செய்தியாளர் தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

மாற்கு நற்செய்தியாளர் ஒரு மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்பு பணியாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் முதலில் அவர் பவுலோடு சேர்ந்து நற்செய்தி அறிவித்தார். அதன்பிறகு தூய பேதுருவோடு நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தார். இறுதியாக இவர் அலெக்ஸ்சாண்ட்ரிய நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் இயேசு கூறியதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுவார், “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15). ஆகவே, ஆண்டவர் இயேசு சொன்ன கட்டளையை, மாற்கு நற்செய்தியாளர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ முயல்வோம்.

ஐரோப்பாக் கண்டத்தில் ருட்டெல் நோரிஸ் (Ruddell Norris) என்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற ஆர்வம்தான். இருந்தாலும் அவரிடத்தில் எல்லாரிடத்திலும் எப்படிச் சென்று பேசுவது, அறிவிப்பது என்ற கூச்ச சுபாவம் இருந்தது. அதனால் அவர் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். அதாவது விவிலியத்தின் சில பகுதிகளையும், அதன் விளக்க உரைகளையும் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து, அதனை மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய மருத்தவமனைகள், வழிபாட்டு மையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் வைத்துவிட்டுச் சென்றார். இதனை எடுத்து படித்தவர்கள் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அதிகமாக அறிந்துகொண்டார்கள்.

ஒருநாள் இவர் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டுத் போகும்போது பின்னாலிருந்து, “யாரோ ஒரு புண்ணியவாளன் செய்யக்கூடிய இந்த நல்ல காரியத்தினால் நான் கிறிஸ்துவைப் பற்றிய அதிகமாக அறிந்துகொண்டேன்” என்றது. இதைக் கேட்ட ருட்டெல் நோரிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தான் செய்யக்கூடிய இந்த சிறிய நற்செயலால் ஒருசிலராவது கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்கிறார்களே என்று அவர் தன்னுடைய மனதிற்குள் பெருமிதம் கொண்டார்.

கடல் கடந்து சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் இருக்கும் இடத்தில், நம்மால் முடிந்த அளவு நற்செய்தி அறிவிக்கலாம். அதற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். நற்செய்தியாகவே வாழ்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித எம்மா (-1038). ஏப்ரல் 19

ஏப்ரல் 19

புனித எம்மா (-1038)
இவர் பதினொன்றாம் நூற்றாண்டில், தற்போதைய பரேமன் என்ற இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.

இளம்வயதில் கடுஞ்சினம் கொள்ளக்கூடிய வராக இருந்தார் இவர்.

இவர் லியூட்ஜர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இறைவன் ஓர் ஆண்குழந்தையைத் தந்தார்.

இப்படி வாழ்க்கை நகர்கையில், இரஷ்யாவிற்குச் சென்ற இவருடைய கணவர் இறந்து போனார். இது இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் முன்கோபியாக இருந்த இவர், அமைதியின் வடிவாய் மாறினார்; தன்னிடம் இருந்ததை ஏழைகளுக்கும் பல கோயில்களுக்கும் வாரி வாரி வழங்கத் தொடங்கினார். 

இறுதியாக இவருடைய மகனை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டு, நிம்மதியாக இறையடி சேர்ந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, இவரது உடல் முழுவதும் சிதைந்து போயிருக்க, கொடுத்துக் கொடுத்துச் சிவந்த இவரது கைகள் மட்டும் அழியாமல் இருந்தன.

சிந்தனை:

கொடுப்பதில் இன்பம், பெறுவதில் இல்லை.

பிறருக்குக் கொடுத்து வாழும்போது, கொடுத்ததைவிட மிகுதியாக நாம் பெறுகிறோம்.

சினம் எழுகிறபோது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.

- மரிய அந்தோனிராஜ்