இன்றைய புனிதர் :
(27-02-2020)
வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)
நிகழ்வு
பிரான்சிஸ் பொசன்ட்ரி (தூய கபிரியேலின் இயற்பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்தே வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். ஒரு சமயம் தனியாய் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை மரியா அவரிடத்தில் பேசினார், “பிரான்சிஸ்! நீ உலக வாழ்க்கையின்மீது பற்றுக் கொள்ளாமல், உண்மையான இறைவனில் பற்றுகொண்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்”. அன்னை மரியா அவரிடத்தில் இவ்வாறு சொல்லிவிட்டு மறைந்துபோனார். பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு அப்போது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. உடனே அவர் தன்னுடைய பெற்றோரிடம் சென்று, அன்னை மரியா தன்னிடத்தில் சொன்னதையும் துறவியாகத் தான் மாற இருப்பதையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் அவருடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பிரான்சிஸ் பொசன்ட்ரி தன்னுடைய பிடியில் மிக உறுதியாக இருந்ததால், அவரை அவருடைய விருப்பம் போல் துறவு வாழ்க்கை வாழ விட்டுவிட்டனர். பிரான்சிஸ் பொசன்ட்ரி, தனது விருப்பம் போல் திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து பின்னாளில் பெரிய புனிதரானார்.
வாழ்க்கை வரலாறு
பிரான்சிஸ் பொசன்ட்ரி, 1838 ஆம் ஆண்டு, சாந்தே, ஆக்னஸ் என்ற தம்பதியருக்கு 11 வது மகனாகப் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல் பிரான்சிஸ் பொசன்ட்ரி, சிறுவயதிலேயே பக்தியில், அதிலும் குறிப்பாக வியாகுல அன்னையிடம் அளவு கடந்த பக்திகொண்டு விளங்கினார். இப்படி அவர் வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு ஜெபிக்கின்றபோதுதான், அன்னை மரியா அவருக்குத் தோன்றி, அவரை இறைப்பணி செய்ய அழைத்தார். உடனே அவர் தன் சொந்த பந்தங்கள், சொத்து சுகங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு, திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து உன்னதத் துறவியாக விளங்கி வந்தார்.
திருப்பாடுகளின் சபையின் சேர்ந்த பின்பும்கூட அவர் வியாகுல அன்னையிடம் கொண்டிருந்த அன்பில் மாறவில்லை, அன்னை மரியாவிற்கு பாடல் இயற்றுவதும் அவர் புகழை எங்கும் பரப்புவதுமாய் இருந்தார். பிரான்சிஸ் பொசன்ட்ரி சபையில் சேர்ந்தபிறகு வியாகுல அன்னையின் மீது கொண்ட அன்பினால், அவர்மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் தனது பெயரை வியாகுல அன்னையின் கபிரியேல் என்று மாற்றிக்கொண்டார். பிரான்சிஸ் பொசன்ட்ரி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், “அன்னை மரியாவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்கு, அன்னை ஏராளமான நன்மைகள் செய்வார்” என்பதாகும்.
பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு 24 வயது ஆகும்போது காச நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். இவருடைய புண்ணிய, எடுத்துகாட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு இவருக்கு 1920 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. அன்னை மரியாவிடம் பக்தி
வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர் அன்னை மரியாவிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார், அது அவருக்கு நிறைய நன்மைகளைப் பெற்றுத்தந்தது. நாமும் அன்னை மரியாவின் துணையை நாடி அவர் வழியில் நடக்கும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.
ஓர் ஊரில் இசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இசைக் கச்சரியை நிகழ்த்துவதற்காக பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, ஆர்மோனியம் வாசிக்ககூடியவர், இசைக் கச்சேரியைத் தொகுத்து வழங்கும் இசைமேதையிடம் சென்று, “ஐயா! திடிரென்று ஆர்மோனியத்தில் இருக்கின்ற E flat கட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கின்றது” என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர் – இசைமேதை, “E flat கட்டையில் பாடல் வராதவாறு நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் கவலைப்படாமல், இங்கே பாடப்படப்படும் பாடல்களுக்கு ஆர்மோனியத்தை வாசியுங்கள்” என்றார்.
இசைக் கச்சேரி தொடங்கியது. அந்தக் கச்சேரி முழுவதும் ஒரு பாடல் கூட E flat கட்டையில் வராதவாறு இசைமேதையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அவர் சிறப்பாக இசைக் கச்சேரியை வழங்கினார். இதைப் பார்த்து ஆர்மோனியம் வாசிப்பவர் மிரண்டு போனார். எப்படி இவரால் இந்த இக்கட்டான சூழ்நிலையை இவ்வளவு அற்புதமாக மாற்ற முடிந்தது என்று.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இசைமேதையை போன்று, கடவுளுக்கு நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தெரியும். எப்படி அந்த ஆர்மோனியம் வாசித்தவர், இசைமேதையை தன்னுடைய துணைக்கு அழைத்தாரோ அதுபோன்று நாம் நம்பிக்கையோடு அவரை, அன்னை மரியாவைத் துணைக்கு அழைத்தால், அவருடைய உதவியை வேண்டினால் நம்முடைய துன்பங்கள் இன்பமாகவும், சோதனைகள் சாதனைகளாக மாறும் என்பது உண்மை.
ஆகவே, வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று அன்னை மரியாவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை அன்னை மரியா வழியாகப் பெற்று மகிழ்வோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.