பாஸ்கா - 2ஆம் வாரம்
சனி
முதல் வாசகம்
நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7
அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, ``நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' என்று கூறினர்.
திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது.
சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லது: அல்லேலூயா.
1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.