இன்றைய புனிதர் :
(28-02-2020)
தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28)
நிகழ்வு
திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக்காலத்தில், அவருக்குக் கீழ் தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்தவர் ஹிலாரியஸ். ஒருசமயம் எபேசு நகரில் முறைகேடாகக் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தில் சிங்கராயரின் பதிலாளாக ஹிலாரியஸ் கலந்துகொண்டார். அதில் ஹிலாரியஸ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த அந்தக் கருத்து பலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் ஹிலாரியசைப் பிடிக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை அறிந்த ஹிலாரியஸ் அவர்களின் கைகளிலிருந்து தப்பியோடி, எபேசு நகருக்கு வெளியே அமைந்திருந்த தூய யோவானின் கல்லறைப் பகுதியில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பினார். இவ்வாறு அவர் தாம் உயிர் பிழைத்ததற்கு புனித யோவானின் அருளே காரணம் என்றுணர்ந்தது தூய யோவானுக்குத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கும் பொருட்டு பின்னாளில் சிறுகோவிலைக் கட்டியெழுப்பினார். .
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் ஹிலாரியஸ் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சார்தீனியாவில் பிறந்தார். திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக் காலத்தில் ஹிலாரியஸ் அவருக்கு தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்துவந்தார். 449 ஆம் ஆண்டு இரண்டாம் எபேசு பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. அப்போது ஹிலாரியஸும், புடேயோலி ஆயரான ஜூலியசும் திருத்தந்தை சிங்கராயரின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர். அப்பொதுச்சங்கம் காண்ஸ்டாண்டிநோபிள் பேராயரான “ஃபிளேவியனைக் கண்டித்தது. அதனை ஹிலாரியஸ் வன்மையாக எதிர்த்தார்.
ஹிலாரியஸுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் சிங்கராயர் திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். அவருக்குப் பின் திருத்தந்தையாக உயர்ந்த ஹிலாரியசும் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார். ஹிலாரியஸ் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராக ஆங்காங்கே எழுந்த தப்பறைக் கொள்கைகளைக் கண்டித்தார். உரோமைத் திருப்பீடத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார். இத்தாலியில் ஆரியபதம் என்று அழைக்கப்பட்ட ஒரு தப்பறைக் கொள்கை பரவாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். ஆரியபதமோ "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் அல்ல" அவர் என்றும், "கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளுள் ஒரு முதன்மையான படைப்பு” என்று கூறி வந்தது. இதனை அவர் கடுமையாக எதிர்த்தார். மட்டுமல்லாமல், அவர் உரோமின் புதிய பேரரசனாயிருந்த அந்தேமியுஸ் என்பவரை அணுகி, அவர் ஆரியபதத்திற்கு உரோமில் இடம் கொடுத்தல் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ஸ்பெயின், கால் போன்ற போன்ற முக்கிய நாடுகளில் திருச்சபைச் செயல்பாடுகள் குறித்து வழிமுறைகள் நல்கினார். அங்கு நடந்த திருச்சபை ஆட்சிமுறையில் ஹிலாரியஸ் பல முறை தலையிட்டு தம் அதிகாரத்தை நிலைநாட்டினார். ஹிலாரியஸ் 465ம் ஆண்டில் ரோம் நகரின் புனித மரியா பெருங்கோவிலில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஓர் ஆயர் தமக்குப் பின் யார் ஆயர் ஆவார் என்று யாரையும் குறித்துக் கூறுதல் முறைகேடானது என்று அறிவித்ததார். இவ்வாறு அவர் திருச்சபையில் கண்ணியத்தையும் ஒழுங்குமுறையையும் நிறுவினார். இதோடு கூட திருத்தந்தை ஹிலாரியஸ் உரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். தூய யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கு அர்ப்பணித்தார். அக்கோவில்தான் முன்னர் நாம் சொன்ன கோவிலாகும். :
455 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாண்டல் படையெடுப்பின் போது உரோமைக் கோவில்கள் பலவற்றிலிருந்து பொன்னும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அக்கோவில்கள் மீண்டும் தலைதூக்கி எழும் வண்ணம் ஹிலாரியஸ் பல நன்கொடைகளை வழங்கினார். மேலும், புனித லாரன்ஸ் பெருங்கோவிலை அடுத்து ஒரு துறவற இல்லத்தை நிறுவினார். இப்படி பல்வேறு பணிகளை பாங்குடனே செய்துவந்த திருத்தந்தை ஹிலாரியஸ் 468 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 28ம் நாள் இறையடி சேர்ந்தார். அவர் அழகுபடுத்திய புனித லாரன்ஸ் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஹிலாரியசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணிசெய்தல்
தூய ஹிலாரியசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்து வந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் வழியில் நடக்கும் அதே மன உறுதியுடன், அஞ்சா நெஞ்சத்துடன் ஆண்டவரின் பணியைச் செய்கின்றோமா என்று சிந்துத்துப் பார்க்கவேண்டும். எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து கடவுள், “நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும், உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்றார். எரேமியாவும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அஞ்சா நெஞ்சத்தோடு பணி செய்தார். அதனால் கடவுளும் அவரோடு இருந்து அவரை வழிநடத்துவார்.
ஆகவே, தூய ஹிலாரியசைப் போன்று, இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.