புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 May 2020

கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா ✠
(St. Julia of Corsica)
கன்னியர்/ மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: ஜூலை 25
கர்தாஜ், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Carthage, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 5ம் நூற்றாண்டு (439)
கோர்ஸிகா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Corsica, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: ஃபெப்ரவரி 14

நினைவுத் திருவிழா: மே 23

பாதுகாவல்:
கோர்ஸிகா (Corsica), லிவோர்னோ (Livorno), 
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)
கைகள் மற்றும் கால்களின் நோய்க்குறிகள் (Pathologies of the hands and the feet)

புனிதர் “கோர்சிகாவின் ஜூலியா” (Saint Julia of Corsica) என்றும், புனிதர் “கார்தாஜ்’ன் ஜூலியா” (Saint Julia of Carthage) என்றும், புனிதர் நோன்ஸா’வின் ஜூலியா (Saint Julia of Nonza) என்றும் அறியப்படும் புனிதர் ஜூலியா, கன்னியரும், மறைசாட்சியும் ஆவார். இவரும் புனிதர் “டெவோட்டா’வும் (Saint Devota) கோர்ஸிகா’வின் (Corsica) பாதுகாவலர்களாக திருச்சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரோமானிய ஆட்சியின் கீழே “கோர்சிகா” கிறிஸ்தவ மறையை தழுவியதன் முன்னர் (Pre-Christian Corsica under Roman rule) நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாக சரித்திரம் இயம்புகின்றது.

“விக்டர் விட்டேன்சிஸ்” (Victor Vitensis) எனும் ஒரு ஆபிரிக்க ஆயர் (Bishop of Africa), ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆபிரிக்க பிராந்திய நாடான “வண்டல்ஸ்” (Vandals) நாட்டின் அரசர்கள் “ஜீஸெரிக்” (Geiserici) மற்றும் “ஹனுரிக்” (Hunirici) ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் பற்றிய சரித்திர பதிவுகளை எழுதினார்.

கி,பி, 429ம் ஆண்டு, அரசன் “ஜீஸெரிக்” (Geiseric) சுமார் 80,000 பழங்குடியினருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆபிரிக்கா நோக்கி படையெடுத்தான். கி.பி. சுமார் 439ம் ஆண்டு, “கார்தாஜ்” (Carthage) நாட்டை கைப்பற்றினான். அதன் பின்னர் அவன் அங்குள்ள கிறிஸ்தவ மக்களை “ஆரியனிஸ” (Arianism) மதத்திற்கு மாற்ற எடுத்துக்கொண்ட கொடுங்கோல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அப்போதிருந்த கிறிஸ்தவ ஆயர்கள் எவராலும் மறக்கவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாததாகும்.

ஜூலியா, ஒரு “கார்தாஜ்” (Carthaginian girl) பெண்ணாவார். அவர் “யூசேபியஸ்” (Eusebius) என்பவனால் அவரது நகரிலிருந்து பிடித்து கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரை அடிமையாக விற்றான். இதுபோலவே கீழ்படியாத கிறிஸ்தவர்கள் பலரை அவர்கள் அகற்றினார்கள். “யூசேபியஸ்” (Eusebius) ஒரு பாலஸ்தீனிய நாட்டின் சிரிய (Citizen of Syria in Palestine) பிரஜை ஆவான். “கேப் கோர்ஸ்” (Cap Corse) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் போதையின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். அவர்களின் பாவச் செயல்களுக்காக ஜூலியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கப்பலிலுள்ள ஒரு பெண், பாகனிய கடவுளர்களை பூஜிக்க மறுப்பதாகவும், ஏளனம் செய்வதாகவும் “ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) என்பவனிடம் கூறினர். ஃபெலிக்ஸ், அப்பெண்ணை நமது வழிக்கு கொண்டுவாருங்கள்; அல்லது அவளை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று யூசேபியஸிடம் சொன்னான். யூசேபியஸோ, நான் “எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான்.

“ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) நயமாகவும் பயமுறுத்தியும் முயன்று பார்த்தான். ஆனால், ஜூலியா கிறிஸ்துவின் விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். ஆகவே, சிறிதும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு ஜூலியா மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

பெர்த் நகர் புனிதர் வில்லியம் May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ பெர்த் நகர் புனிதர் வில்லியம் ✠✠
(St. William of Rochester)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி 12ம் நூற்றாண்டு
பெர்த், ஸ்காட்லாந்து
(Perth, Scotland)

இறப்பு: கி.பி 1201
ரோச்செஸ்டர், இங்கிலாந்து
(Rochester, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1256
திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்
(Pope Alexander IV)

நினைவுத் திருநாள்: மே 23

பாதுகாவல்: தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்

ரோச்செஸ்டர் நகர் வில்லியம் (Saint William of Rochester) என்றும் அழைக்கப்படும் பெர்த் நகர் புனிதர் வில்லியம் (Saint William of Perth), இங்கிலாந்தில் மறைசாட்சியாக மறைந்த ஒரு ஸ்காட்டிஷ் துறவி ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் ஆவார்.

அக்காலத்தில், ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெர்த் (Perth) நகரில் பிறந்த இவர், இளமையில், ஓரளவு முரட்டுத்தனமாக இருந்தார். ஆனால், வளர வளர, அவர் கடவுளின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். வர்த்தக ரீதியாக ஒரு ரொட்டி தயாரிக்கும் (Baker) தொழில் செய்து வந்த இவர், (சில ஆதாரங்கள் அவர் ஒரு மீனவர் என்று கூறுகிறார்கள்), தாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பத்தாவது ரொட்டியையும் ஏழைகளுக்காக ஒதுக்குவது அவருக்குப் பழக்கமாக இருந்தது.

வில்லியம் தினம்தோறும் காலை திருப்பலி காண ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு நாள், வெளிச்சம் கூட சரியாக விடிகாலை வேளை, தேவாலயத்தின் வாசலில் ஒரு கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டு, அதனை தத்தெடுத்தார்.  குழந்தைக்கு டேவிட் எனும் பெயர் சூட்டிய அவர், தமது தொழிலான ரொட்டி தயாரிக்கும் பணியையும், வர்த்தகத்தை கற்பித்தார். சில காலத்தின் பின்னர், அவர் புனித திருத்தலங்களைப் பார்வையிட திட்டமிட்டார். மேலும், புனிதப்படுத்தப்பட்ட பணப்பையையும் (உண்டியல் பணம்), தமது வளர்ப்புப் பிள்ளையான டேவிட்டையும், ஊழியர்களையும்  அழைத்துக்கொண்டு, திருயாத்திரை புறப்பட்டார்.

அவர்கள் ரோச்செஸ்டர் (Rochester) நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் கேன்டர்பரி (Canterbury) நகருக்கு எண்ணினர். அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக, டேவிட் வேண்டுமென்றே தனது வரர்ப்புத் தந்தையை வேண்டுமென்றே ஒரு குறுக்கு வழியில் தவறாக வழிநடத்தினான். வழியில், அவர்கள் வழிச்செலவுக்கும், காணிக்கைகளுக்குமாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுதையும் கொள்ளையடித்தான். தமது வளர்ப்புத் தந்தையான வில்லியமை தலையில் அடித்து கீழே தரையில் வீழ்த்திய அவன், அவரது தொண்டையை அறுத்து அவரை கொலை செய்தான்.

அவரது உடல், மனநோயாளி பெண்மணி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்மணி, "ஹனிசக்கிள்" (Honeysuckle) என்றழைக்கப்படும் மலர்களாலான ஒரு மலர்மாலை பின்னி, அதனை வில்லியமின் உடலின் தலையருகே வைத்தாள். (இந்த "ஹனிசக்கிள்" வகை மலர்கள், வட அமெரிக்கா (North America) மற்றும் யூரேசியா  (Eurasia) நாடுகளில் காணப்படுகிறது.) ஒரு மலர்மாலையை தனது தலையிலும் சூடிக்கொண்டாள். அக்கணமே, அவளை பிடித்திருந்த மனநோய் அவளை விட்டகன்றது.

நடந்த சம்பவங்களை கேட்டறிந்த ரோச்செஸ்டர் நகர (Monks of Rochester) துறவிகள், வில்லியமின் உடலை ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கேயே அடக்கம் செய்தனர். அவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்ற காலத்தில் மரித்ததாலும், மனநோயாளி பெண்மணி குணமான காரணத்தினாலும், அவர் மறைசாட்சியாக கௌரவிக்கப்பட்டார். மனநோயாளி பெண்மணி குணமான அதிசயத்தின் விளைவாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பரிந்துரையில் செய்யப்பட்ட மற்ற அற்புதங்களின் விளைவாகவும், அவர் மக்களால் ஒரு புனிதர் என்று வணங்கப்பட்டார்.

ரோச்செஸ்டர் (Rochester) நகரில் இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் (The shrine of St William of Perth), இவரது பெயரால் நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளியும் (St William of Perth Primary School) உள்ளன.

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)

இன்றைய புனிதர் :
(23-05-2020)

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)
“ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” (மத் 25: 36 -37)

வாழ்க்கை வரலாறு

ஜான் பாப்டிஸ்ட், 1698 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வல்டாஜியோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிக சாதாரண குடும்பம். ஆதலால் இவருடைய படிப்புச் செலவை இவருடைய குடும்பத்தாரால் பார்க்க முடியாமல் போய், நல்லுள்ளம் கொண்ட ஒருவர்தான் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவருக்குக் 13 வயது நடக்கும்போது இயேசு சபையினர் நடத்தி வந்த கல்லூரியில் சேர்ந்து படித்தார். அதன்பின்னர் சாமிநாதர் சபையில் சேர்ந்து 1721 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். குறிப்பாக மருத்துவ மனைகளில் இருந்த நோயாளிகளைச் சந்தித்து அவர்களைத் தேற்றினார்; கைவிடப்பட்டோரையும் அனாதைகளையும் மிகச் சிறப்பான முறையில் பராமரித்து வந்தார். அவர்களுக்காகப் புதிதாக ஒரு மருத்துவ மனையையும் கட்டித் தந்து உதவினார். இதனால் இவர் எல்லாருடைய நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.

ஜான் பாப்டிஸ்டுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்தது. அது அவருடைய உடல் நலத்தை நிறையவே பாதித்தது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் ஏழை எளிய மக்கள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை நல்ல விதமாய் பராமரித்து வந்தார்.

சில காலத்திற்குப் பின் இவர் சிவித்தா காஸ்தலேனே என்னும் இடத்திற்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்த ஆயர் இவரைக் குறித்து கேள்விப்பட்டு இவரை மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை செய்வதற்கென்று முழுநேரப் பணியாளராக நியமித்தார். அந்தப் பணியையும் இவர் சிறந்த விதத்திலே செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நோய் முற்றியது. இதனால் இவர் 1764 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி இறையடி சேர்ந்தார். இவருக்கு 1881 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சமூகத்தின் மீதான அக்கறை

தூய ஜான் பாப்டிஸ்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் அடுத்தவர்மீதும் இந்த சமூகத்தின் மீதும் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரைப் போன்று நாம் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம், என்னுடைய குடும்பம், என்னுடைய உறவுகள் என்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்ட மக்களாக வாழ்ந்து காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யாரைப் பற்றியும் அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே வாழ்ந்து வந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுடைய தந்தை அவனிடம் பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான மகன் தந்தைக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தான். எனவே அவன் ஒரு காலிக்குவளையை எடுத்து தந்தையின் முன்பாகக் காட்டி, அதில் பாலை நிரப்பினான். “இந்தக் குவளை நான். இதிலுள்ள பால் என் வாழ்க்கை” என்றான். உடனே அவனுடைய தந்தை சிறிது சக்கரையை அதில் கலந்தார்.

பின்னர் அவர் அவனிடத்தில் சொன்னார், “சமூக அக்கறை என்னும் சக்கரையை இல்லாமல் உன் கசக்கும்”. இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்ட அவன் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான்.

ஆம், அடுத்தவர் மீதான அக்கறையும் இந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நமக்கு இல்லையென்றால் நமது வாழ்வு கசக்கத்தான் செய்யும்.

ஆகவே, தூய ஜான் பாப்டிஸ்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மீதான அக்கறை கொண்டு வாழ்வோம், நம்மிடத்தில் இருக்கும் சுயநலப் போக்கைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.