புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 February 2020

தூய போலிக்கார்ப். 23 பிப்ரவரி

23 பிப்ரவரி 2020, ஞாயிறு

இன்றைய புனிதர்

தூய போலிக்கார்ப்
போலிகார்ப் வாழ்ந்த காலத்தில் தப்பறைக் கொள்கைகள் அதிகமாகப் பரவியிருந்தன. அவற்றையெல்லாம் நம் புனிதர் மிகவும் துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிகொண்டார். ஒருசமயம் மார்சியோன் என்பவன் தப்பறைக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டு வந்தான். ஒருநாள் அவன் போலிக்கார்ப் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்தான். அவர் அவன் செய்வதையெல்லாம் மிகப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் அவன் அவரிடத்தில், “நான் யாரென்று தெரிகிறதா?” என்று மிகவும் ஆணவத்தோடு கேட்டான். அதற்கு போலிகார்ப், “நீ சாத்தானின் மூத்த மகன், உனக்கு அழிவு மிக அண்மையிலேயே உள்ளது” என்றார். இதைக் கேட்ட மார்சியோன் தலை தெறிக்க ஓடினான். அதன்பிறகு அவன் தப்பறைக் கொள்கைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு, மனம் திருந்திய மனிதனாக வாழ்ந்து வந்தான்.

வாழ்க்கை வரலாறு

போலிக்கார்ப் கி.பி.69 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நற்செய்தியாளரான தூய யோவானின் சீடர். அவராலேயே 96 ஆம் ஆண்டு ஸ்மிர்னா என்ற நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயராக உயர்ந்த பிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இறைமக்களுக்கு மறைக்கல்வியைப் போதித்து, அவர்களை இறைநம்பிக்கையில் நாளும் வளர்த்தார். இவரிடமிருந்து மறைகல்வி கற்று புனிதர்களாக உயர்ந்தவர்கள்தான் தூய எறரனியுஸ் மற்றும் பப்பியாஸ் என்பவர்கள்.

போலிகார்ப் வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. அத்தகைய தருணத்தில் இவர் மக்கள் அனைவரையும் விசுவாசகத்தில் உறுதிபடுத்தினார். ஒருசிலர் இவரைக் கேட்டுக்கொண்டதால் சில காலத்திற்கு இவர் மறைவாக இருந்தார். அப்போது இவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் இவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. எதற்கு இப்படி தலையணை தீப்பற்றி எரிகிறது என்று யோசித்துப் பார்த்த அவர், தான் தீயில் போட்டு எரிக்கப்படப் போகிறோம் என்பதை அறிந்துகொண்டார். அன்றிலிருந்து அவர், தான் அடைய இருக்கும் மறைசாட்சிப் பட்டத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இவர் இருக்கும் இடத்தை ஒற்றன் ஒருவன் காட்டிக்கொடுக்க, படைவீரர்கள் இவரை சூழ்ந்துகொண்டார்கள். ஆனாலும் இவர் தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கு விருந்தொன்று தயாரித்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த அந்தப் படைவீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். இருந்தாலும் அரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் இவரைக் கைதுசெய்து, அரசன் முன்பாக நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்த அரசன் போலிக்கார்ப்பிடம் “நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, சீசருக்கு வணக்கம் செலுத்து, உன்னை நான் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்” என்றார். அதற்கு இவர், எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆண்டவராகிய இயேசு ஒருதீமையும் செய்யவில்லை. அப்படிப்பட்ட இறைவனனை நான் எப்படி மறுதலிப்பது?” என்றார். இதைக் கேட்ட அரசன் சினமுற்று அவரை தீப் பிழம்புக்குள் தூக்கிப்போட்டான். ஆனால் தீயின் நாவுகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் அந்தத் தீயின் நடுவே இறைவனைப் பாடிப் புகழ்ந்துகொண்டிருந்தார். பின்னர் அரசர் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். பின்னர் போலிகார்பின் சீடர்கள் வந்து, அவருடைய எலும்புகளை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். அவர் மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் துறந்த ஆண்டு கி.பி. 155. போலிகார்பின் மறைசாட்சிய வாழ்வு குறித்து, அவருடைய இறப்புக்குப் பிறகு, அவருடைய சீடர்களால் எழுதப்பட்ட Acts Of Policarp” என்ற புத்தகத்திலிருந்து நாம் இவற்றையெல்லாம் வாசிக்கின்றோம்.

மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz பெப்ரவரி 23

இன்றைய புனிதர்
2020-02-23
மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz
பிறப்பு
10 ஆம் நூற்றாண்டு,
நீடர்சாக்சன், ஜெர்மனி
இறப்பு
23 பிப்ரவரி 1011,
மைன்ஸ் Mainz, ஜெர்மனி

இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இளம் பருவத்தைப் பற்றி குறிப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. 970 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஓட்டோ என்பவர் இவரை மைசன் Meißen நகருக்கு ஆயராகத் தேர்ந்தெடுத்தார். அதன்பிறகு ஆயர் அரசரின் ஆலோசகராகவும் இருந்தார். பிறகு 975 ஆம் ஆண்டு மைன்ஸ் நகரின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் ஜெர்மனி ஆயர் என்றழைத்த திருத்தந்தை 5 ஆம் கிரகோர் வில்லிஜிஸை உரோமிற்கு மாற்றினார்.

வில்லிஜிஸ் உரோமையில் 1002 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஹென்றிக்கு அரசராக முடிசூட்டும் பட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். அதன்பிறகு அரசர் ஜெர்மனியிலுள்ள பாம்பெர்க்கிற்கு தன் இருப்பிடத்தை மாற்ற தேவையான உதவிகளை வில்லிஜிஸ் செய்துக் கொடுத்தார். பின்னர் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அரசரிடம் பெரிதும் பரிந்து பேசினார். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 30 ஏழைகள் தேவையான அளவு உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்து உதவினார். இவர் ஏழைகளின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

இவர் இறந்தபிறகு, மைன்சில் உள்ள புனித ஸ்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. செயின் ஸ்டீபன் ஆலயமானது வில்லிஜிஸ் அவர்கள்தான் ஆயராக இருக்கும் எழுப்பினார் என்று கூறப்படுகின்றது.


செபம்:
சில அப்பங்களையும், மீன்களை கொண்டு, பலரின் பசியை போக்கிய எம் தந்தையே! இன்று உணவில்லாமல் வாடும் ஒவ்வொரு மனிதர்களையும் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளையும் நீர் நினைவுகூரும். உமது அற்புதத்தாலும், அதிசயத்தாலும் ஏழைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வயிராற உண்ண நீர்தாமே உதவிபுரிந்திட வேண்டுமென்று தந்தையே உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. ஆயர் மறைசாட்சி பொலிக்கார்ப்பு Polykarp
பிறப்பு : கிபி.70
இறப்பு : 23 பிப்ரவரி 155(?) , இஸ்மார் Izmar, துருக்கி


2. காப்பன்பெர்க் நகர் ஒட்டோ Otto von Cappenberg
பிறப்பு : 1100
இறப்பு : 23 பிப்ரவரி 1171 காப்பன்பெர்க் Cappenberg, ஜெர்மனி