புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 April 2020

புனிதர் அடால்பர்ட். April 23

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 23)

✠ புனிதர் அடால்பர்ட் ✠
(St. Adalbert of Prague)
ஆயர் மற்றும் மறைசாட்சி:
(Bishop and Martyr)

பிறப்பு: 956
லிபைஸ் நாட் ஸிட்லினோ, பொஹேமியா, ஸ்செச்சியா
(Libice nad Cidlinou, Bohemia, Czechia)

இறப்பு: ஏப்ரல் 23, 997
ட்ரூசோ, ப்ருஷியா
(Truso, Prussia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: 999
திருத்தந்தை இரண்டாம் சில்வஸ்ட்டர்
(Pope Sylvester II)

முக்கிய திருத்தலம்: 
க்நீஸ்னோ, ப்ராக்
(Gniezno, Prague)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 23

பாதுகாவல்:
போலந்து, பொஹேமியா, எஸ்டேர்கோம் உயர்மறைமாவட்டம்
(Poland, Bohemia, Archdiocese of Esztergom)

"வோஜ்டெக்" (Vojtěch) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் அடால்பர்ட், பொஹேமியா'வின் மறை பணியாளரும், "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague), "ஹங்கேரிய" (Hungarians), "போல்ஸ்" (Poles) மற்றும் "ப்ருஷியன்" (Prussians) மக்களின் மறைபோதகரும் ஆவார். இவர், "பால்டிக் ப்ருஷியன்" (Baltic Prussians) இன மக்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றும் முயற்சியில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

தற்போது, "செக் குடியரசு” (Czech Republic), “போலந்து” (Poland), “ஹங்கேரி” (Hungary) மற்றும் “ஜெர்மனி” (Germany) ஆகிய நாடுகளால் பெரிதும் போற்றப்படும் புனிதரான அடால்பர்ட், அக்காலத்தில் கிறிஸ்துவின் நற்செய்திகளின் எதிர்ப்பு ஒருபோதும் இவரை சோர்வடையச் செய்யவில்லை.

பொஹெமியாவின் (Bohemia) பிரபுத்துவ குடும்பமொன்றில் பிறந்த இவருடைய தந்தையார் “ஸ்லாவ்னிக்” (Slavník) ஆவார். இவரது தாயார் “ஸ்ட்ரேசிஸ்லாவா” (Střezislava) ஆவார். சிறு வயதிலேயே பெரும் நோயோன்றினால் பாதிக்கப்பட்டு பிழைத்த இவரை கடவுளின் சேவையில் அர்ப்பணித்திட இவரது பெற்றோர் தீர்மானித்திருந்தனர்.

சிறந்த கல்விமானான இவர், தமது ஆரம்ப கல்வியை "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) எனும் புனிதரிடம் கற்றார். தமது “உறுதிப்பூசுதல்” (Confirmation) திருவருட்சாதனம் பெரும் நிகழ்வின்போது, தமது ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆசிரியரது பெயரையே தமது ஆன்மீக பெயராக ஏற்றார். 

981ம் ஆண்டு, இவரது ஆசிரியரான "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) மரித்ததும், இவர் பொஹேமியா திரும்பினார். பிறகு, "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague) “டயட்மார்” (Dietmar of Prague) என்பவர், இவரை கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு செய்வித்தார். 982ம் ஆண்டு, ஆயர் “டயட்மார்” (Dietmar of Prague) மரித்துப் போகவே, தமது 27 வயதிலேயே ப்ராக் (Prague) மறைமாவட்டத்தின் ஆயராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது நற்பணிகளை எதிர்த்தவர்களின் வற்புறுத்தலால் எட்டு வருடங்களின் பின்னர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

காலப்போக்கில், ப்ராக் மக்கள் அவரை தங்களது ஆயராக திரும்பி வர வேண்டினார்கள். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆலயத்தின் பரிசுத்தம் கெடும் வகையில், விபச்சார குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து மான பங்கம் செய்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

ஹங்கேரியில் சிறிது காலம் மறைபோதனை செய்த பின்னர், "பால்டிக்" கடற்கரையோரம் (Baltic Sea) வசித்த மக்களுக்கு நற்செய்தி போதிக்க சென்றார். அவரும் அவருடன் சென்ற இரு நண்பர்களும் "பாகனீய குருக்களால்" (Pagan Priests) மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.

தூய ஜார்ஜியார் (ஏப்ரல் 23)

இன்றைய புனிதர் : 
(23-04-2020) 

தூய ஜார்ஜியார் (ஏப்ரல் 23)
நிகழ்வு

ஜார்ஜியார் வாழ்ந்த நான்காம் நூற்றாண்டில் லிபியா என்ற நகரில் மனிதர்களை ஒவ்வொருநாளும் நரபலி கொடுக்கும் மந்திரவாதி ஒருவன் இருந்தான். ஒருநாள் ஜார்ஜியார் அந்நகர் வழியாகச் சென்றபோது மந்திரவாதி அந்நாட்டு இளவரசியைப் பிடித்து வைத்துக்கொண்டு, அவளை நரபலி கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஜார்ஜியார் அவனோடு போர்தொடுத்து அவனை வீழ்த்தினார். பின்னர் அவர் இளவரசியை அவளுடைய தோளில் போட்டிருந்த துணியால் மந்திரவாதியைக் கட்டி வழியெங்கும் இழுத்துவரச் சொல்லி அவனை தண்டிக்கச் சொன்னார். அதன்படியே இளவரசி செய்தாள். இறுதியில் அந்த கொடிய மந்திரவாதி வரும் வழியிலே இறந்துபோனான். பின்னர் ஜார்ஜியார் அந்த இளவரசியிடம், “கடவுள் உன்னை அற்புதமாகக் காப்பாற்றி இருக்கின்றார். ஆகையால் அவரைப் பற்றிய மெய்மறையை உன்னுடைய நாடு முழுவதும் பரப்பு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

ஜார்ஜியார் இஸ்ரயேலைச் சேர்ந்த கேரேன்தியேசு மற்றும் பாலிகிரோனி என்பவருடைய மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பெற்றோரை இளம் வயதிலேயே இழந்தார். இதனால் பெற்றோர் இல்லாமல் பெரிதும் கஷ்டப்பட்டார். இளைஞனாக மாறிய பிறகு அப்போது உரோமை நகரில் அரசனாக இருத்த தியோகிளேசியன் என்பவனுடைய படையில் படைவீரராகச் சேர்ந்தார். இவருடைய நற்பண்புகளையும் திறமையையும் பார்த்த அரசன் சிறிய படைப்பிரிவிற்கு தலைவனாக ஏற்படுத்தினார். அதன்பின்னர் இவரை பாதுகாப்புப் படையின் தலைவராக உயர்ந்தார். இவ்வாறு ஒவ்வொருநாளும் ஜார்ஜியார் அரசன் தனக்குக் கொடுத்த பொறுப்புகளை கண்ணும் கருத்துமாகச் செய்து, நாளும் நாளும் உயர்ந்துகொண்டிருந்தார்.

ஒருமுறை அரசன் தான் வணங்கி வந்த தெய்வத்தை எல்லாரும் வணங்க வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தான். அப்படி வணங்காதவர்களை கொன்றுபோடுவதாகவும் எச்சரித்தான். ஆனால் நிறைய கிறிஸ்தவர்கள் அரசன் சொன்னதற்கு அடிபணியாது, கிறிஸ்து ஒருவரையே வணங்கி வந்தார்கள். இதைக் கண்டு சினம்கொண்ட அரசன் தன்னுடைய கடவுளை வணங்காத மக்களை ஒன்றாக இழுத்துவந்து அவர்களை வதைக்கச் சொன்னான். அந்தப் பொறுப்பை அரசன் ஜார்ஜியாரிடம் ஒப்படைத்தான். ஆனால் ஜார்ஜியாரோ, “நான் யாரையும் வதைக்கமாட்டேன். நானும் ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவருக்கும் வணக்கம் செலுத்தமாட்டேன்” என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் அரசன் இன்னும் சினமுற்றான். தன்னிடம் பணிசெய்யும் ஒருவன் தன்னுடைய கட்டளைக்குப் பணிந்து வாழாமல் இருப்பதா? என்று அவன் மிகவும் சினமுற்றான். ஆனாலும் ஜார்ஜியாரைப் போன்று ஒரு வீரனை அவர் இழக்க விரும்பவில்லை. அதனால் அவரை எப்படியாவது சூழ்ச்சியால் மயக்கி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அரசன் நினைத்தான்.

ஒருநாள் அரசன் ஜார்ஜியாரை அழைத்து, “உனக்கு வேண்டிய மட்டும் நிலபுலன்கள், சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் தருகிறேன். ஆனால் நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு என்னுடைய தெய்வத்தை வணங்கவேண்டும்” என்று சொன்னான். அதற்கு ஜார்ஜியார், “நான் எக்காரணத்தைக் கொண்டும் ஆண்டவர் இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன்” என்று மிக உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் அரசனுக்குக் கோபம். இருந்தாலும் அவன் அதனை வெளியே காட்டி கொள்ளாமல், அவரை எப்படி சூழ்ச்சியால் ஒழிக்கலாம் என திட்டம் தீட்டினான். அதற்கு அவன் ஒரு மந்திரவாதியை அழைத்து, ஜார்ஜியாரை சூழ்ச்சியால் கொன்றுபோட சொன்னான். மந்திரவாதியும் அரசனுடைய கட்டளைக்குப் பணிந்து, ஜார்ஜியார் குடிக்கும் பாலில் விஷம் கலக்கிக்கொடுத்தான். ஆனால் ஜார்ஜியார் அந்த பாலின் மீது சிலுவை அடையாளம் வரைந்து, அதனைக் குடிக்க அது ஒன்றுமே செய்யவில்லை. இப்படியாக அரசன் வைக்கும் சூழ்சிகள் அனைத்தையும் ஜார்ஜியார் இறைவல்லமையால் வெற்றிக்கொண்டார்.

ஒருமுறை ஜார்ஜியாரைக் கொல்ல நினைத்த அத்தனேசியா என்ற மந்திரவாதியும் அந்நாட்டு அரசியும் ஜார்ஜியாரை அழைத்து, அவருக்கு முன்பாக ஒரு பிணத்தை கொண்டு வைத்து, “இந்த பிணத்தை உயிர் பெற்றெழச் செய்தால் நாங்கள் அனைவரும் நீ வணங்கும் கடவுள்மீது நம்பிக்கை கொள்வோம்” என்றார்கள். அதன்படி ஜார்ஜியார் தனக்கு முன்பாகக் கொண்டுவந்து வைக்கப்பட்ட பிணத்தின் மீது கைகளை வைத்து ஜெபித்தார். அவர் இறைவனிடம் ஜெபித்த சில மணித்துளிகளிலேயே இறந்த மனிதர் உயிர்பெற்று எழுந்தார். இதைக் கண்டு மந்திரவாதி, அரசி என அனைவருமே ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். மக்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள. இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகியது. எல்லாவற்றையும் பார்த்து கடுஞ்சினம் அரசன் அரசி மந்திரவாதி, ஜார்ஜியார் என மூவரையும் 303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் வாளுக்கு இரையாக்கினான். 449 ஆம் ஆண்டு திருத்தந்தை கலேசியஸ் இவரைப் புனிதராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜார்ஜியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்தல்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்” (லூக் 12:8) தூய ஜார்ஜியார் ஆண்டவர் இயேசுவை எல்லாருக்கும் முன்பாக, அதுவும் தன்னை கொல்ல நினைத்த கொடிய அரசனுக்கும் முன்பாக ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார். அவரிடமிருந்து விசுவாசம், கிறிஸ்துவுக்காக எதையும் செய்யக்கூடிய துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோது கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோம். அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோம். ஆனால் துன்பம், அச்சுறுத்தல் என்று ஏதாவது வந்தால் பின்வாங்குகின்றோம். ஆனால் தூய ஜார்ஜியார் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் கிறிஸ்துவை துணிவோடு அறிக்கையிட்டதற்கு முன்னோடி. அவருடைய விழாவைக் கொண்டாடும் நாமும் கிறிஸ்துவை நம்முடைய வாழ்வால், வார்த்தையால் எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.