இன்றைய புனிதர் :
(28-03-2020)
தூய மூன்றாம் சிக்ஸ்துஸ் (மார்ச் 28)
“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள்” (மத் 5: 9)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூருகின்ற சிக்ஸ்துஸ் 300 ஆம் ஆண்டு, உரோமையில் பிறந்தார். இவர் தூய அகுஸ்தினாருக்கு நெருங்கிய நண்பர். இவர் துறவறத்தார், இறைமக்கள் என அனைவருடைய நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அதனால், திருத்தந்தை முதலாம் செலஸ்டினுடைய மறைவுக்குப் பின்னர் அனைவரும் இவரையே திருத்தந்தையாக உயர்த்தினார்கள்.
திருத்தந்தை சிக்ஸ்துஸ் இயல்பாகவே அமைதியான சுபாவம் உடையவர். ஆனால் திடகாத்திரமான மனதுடையவர். இவருடைய காலத்தில் இரண்டு தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தன. ஒன்று நொஸ்தோரியனிசம், இன்னொரு பெலேஜியனிசம். நொஸ்தோரியனிசம் இயேசு இரண்டு ஆட்கள் என்று சொல்லிவந்தது. அதனால் அது மரியா இறைவனின் தாய் கிடையாது என்று சொல்லி வந்தது. பெலேஜியனிசமோ ஆதிப் பெற்றோர் செய்த பாவத்தின் வழியாக அவருடைய வழிமரபினராகிய நமக்கு ஜென்மப் பாவம் வருவதில்லை என்று சொல்லி வந்தது. இந்த இரண்டு தப்பறைக் கொள்கைகளையும் திருத்தந்தை அவர்கள் மிகவும் பொறுமையாகத்தான் எதிர்த்தார். அதனால் பலர் கேலி செய்தார்கள்; அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத ஆசாமி என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அத்தகைய தருணங்களில் கூட இவர் பொறுமையாகவும் அமைதியாகவும்தான் பிரச்னையை எதிர்கொண்டார்.
இவருடைய பொறுமையான, அமைதியான நடைமுறைக்கு பலன் கிடைத்தது. 433 ஆம் ஆண்டு உரோமையில் கூட்டப்பட்ட சங்கத்தில் நொஸ்தோரியனிச தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த, அலெக்ஸ்சாந்திரிய நகர சிரில் அதற்கு மன்னிப்புக் கேட்டு, திருச்சபையோடு இணைந்தார். அது மட்டுமல்லாமல் அலெக்ஸ்சாந்திரிய நகர் சிரிலுக்கும் அந்தியோக்கு நகர ஜானுக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. இதனையும் திருத்தந்தை அவர்கள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டுவந்தார். இதனால் அனைவரும் திருத்தந்தை சிக்ஸ்துஸ் அவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். தப்பறைக் கொள்கைகளுக்கு முடிவு கட்டிய பின், திருத்தந்தை லிபோரியஸ் ஆலயத்தையும் லாத்தரன் பேராலயத்தை புதுபிக்கத் தொடங்கினார். இதற்கு ஏராளமான பொருளுதவிகளை மன்னர் மூன்றாம் வாலண்டைன் செய்தார். இப்படி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறைப்பணியை மிகச் செவ்வனே செய்த திருத்தந்தை சிக்ஸ்துஸ் 440 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் நாள், இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய மூன்றாம் சிக்ஸ்துசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. அமைதியை ஏற்படுத்துபவர்களாவோம்
தூய சிக்ஸ்துசின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த அமைதியை, சமரசத்தை ஏற்படுத்துகின்ற பண்புதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. பலரால் அது முடியவே முடியாத காரியமாகும். ஏனென்றால், ஆமை புகுத்த வீடு உருப்படாததுபோல், சிலர் புகுந்து வீடும், நட்பும் உருப்படாமலே போய்விடும். இத்தகைய சூழ்நிலையில்தான் சிக்ஸ்துஸ் நம்முடைய கவனத்துக்கு உள்ளாகின்றார். தூய சிக்ஸ்துசைப் போன்று நாம் குழப்பமான, அமைதியற்ற சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்த முயல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஓர் ஊரில் அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என ஒரு நடுத்தரக் குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவனும், மனைவியும் அமைதியானவர்கள். ஆனால் அவர்களின் இரு குழந்தைகளும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் முரட்டு குணம் உள்ளவர்களாக மாறி வந்தார்கள். பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களது குணத்தை மாற்ற முடியவில்லை.
அந்தச் சமயத்தில் அவர்கள் ஊருக்கு ஒரு மகான் வந்தார். ஒருநாள் இந்தத் தந்தை அந்த மகானைப் போய்ப் பார்த்தார். தன் குழந்தைகளைப் பற்றி சொன்னார். பொறுமையாகக் கேட்ட மகான், “கடுகு கம்பு” என்ற ஒரு மந்திரத்தை அவருக்குக் கற்றுத் தந்தார். அவரும் நல்லது நடக்கும் என்ற ஒரு சிந்தனையோடு வீடு திரும்பினார். குழந்தைகள் சண்டைபோட ஆரம்பித்தவுடன் அவர் அந்த மந்திரத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். எப்படி என்றால், பிள்ளைகளுக்குள் சண்டை தொடங்கியவுடன், அவர் சிறிதளவு கடுகையும், சிறிதளவு கம்புதானியத்தையும் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தன் பிள்ளைகளைக் கூப்பிட்டார். அவர்கள் இருவரிடமும் கடுகு கம்பு இரண்டையும் கலவையைக் கொடுத்து, “குழந்தைகளே!, இதில் உள்ள கடுகையும் கம்பையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு வாருங்கள்! உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்று அன்பாக சொன்னார்.
அவ்வளவுதான், பிள்ளைகள், சண்டை போடுவதை மறந்து அப்பா சொன்ன வேலையைச் செய்ய ஆரம்பித்தனர். அடிக்கடி இப்படிச் செய்ததில் அவர்களுக்கு அதுவே பிடித்தமான விளையாட்டானது. பின்னர் சண்டைபோடும் குணமே மாறி ஒருவர் ஒருவர் மீது அன்புகாட்டத் தொடங்கி விட்டார்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் அமைதியை ஏற்படுத்த அவர்களுடைய தந்தை மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்த முயல்வதே சிறப்பான ஒரு காரியமாகும்.
ஆகவே, தூய சிக்ஸ்துசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று அமைதியை ஏற்படுத்தும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.