† இது எப்படி? †
† தூய ஆவியார் பெருவிழா †
(மே 31, 2020)
† திருத்தூதர் பணிகள் 2:1-11 †
† 1 கொரிந்தியர் 12:3-7, 12-13 †
† யோவான் 20:19-23 †
வெளியில் வர வகையறியாத சீடர்களை வெளியில் கொண்டு வந்து நிறுத்தியதும், அவர்களின் நாவுகளின் கட்டுக்களை அவிழ்த்து அவர்களைப் பேச வைத்ததும் தூய ஆவியாரே.
அவரின் திருநாளை, பெந்தெகோஸ்தே பெருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
சீடர்கள் வெளியில் வந்ததையும், அவர்கள் பேசுவதையும் தத்தம் மொழிகளில் கேட்கின்ற அனைவரும், 'இது எப்படி?' எனக் கேட்கின்றனர், வியக்கின்றனர்.
தூய ஆவியாரைப் பற்றி சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு மூன்று விவிலியப் பகுதிகள் நினைவிற்கு வருவதுண்டு:
ஒன்று, திப 19:2. பவுல் தன்னுடைய தூதுரைப் பயணத்தில் எபேசு வருகின்றார். அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்கின்றார். அங்கிருந்தவர்கள், 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' எனப் பதில் தருகிறார்கள்.
இன்று, தூய ஆவியைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம்மையே கேட்டால், அல்லது நம் வாழ்வை சற்றே கூர்ந்து கவனித்தால், தூய ஆவி என்னும் ஒன்று நம்மில் இல்லாததுபோல நாம் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறுதிப்பூசுதலின் போது கிறிஸ்தவர்களாகிய நம் அனைவர்மேலும், குருத்துவ அருள்பொழிவின் போது நம் அருள்பணியாளர்கள்மேலும் இறங்கி வந்த ஆவியார் என்ன ஆனார்?
இரண்டு, திபா 51:11. பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் தாவீது பாடியதாகச் சொல்லப்படுகின்ற திருப்பாடல் 51இல், தாவீது ஆண்டவரிடம், 'உம் முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்! உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்!' என மன்றாடுகின்றார். தாவீது ஏன் இப்படி மன்றாட வேண்டும்? ஏனெனில், சவுல் கீழ்ப்படியாமையால் பாவம் செய்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலைவிட்டு நீங்கியது' (காண். 1 சாமு 16:14) அவருக்குத் தெரியும். ஆண்டவரின் ஆவி நீங்கியதால் சவுல் பொறாமையாலும், தீய எண்ணங்களாலும், வன்மத்தாலும், பிளவுண்ட மனத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறார்.
இன்று, ஆண்டவரின் ஆவி நம்மிடம் இருக்கிறதா? அல்லது நீங்கிவிட்டதா? ஒருவேளை நம்மிடமிருந்து அவர் நீங்கிவிட, சிம்சோன் போல நாம் அதை அறியாமல் இருக்கிறோமோ? (காண். நீத 16:20)
மூன்று, திபா 23:5. சில நாள்களுக்கு முன் இத்திருப்பாடல் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது, இத்திருப்பாடலில் நம் கத்தோலிக்க திருஅவையில் உள்ள ஏழு அருளடையாளங்களும் இருப்பதைக் காண முடிந்தது. அந்த வகையில், ஆவியாரைப் பற்றிய ஒரு வாக்கியமாக நான் கருதுவது: 'என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' இதன் சூழல் என்னவென்றால், எதிரிகளின்முன் விருந்து. இந்த 'விருந்தை' நாம் நற்கருணை என எடுத்துக்கொள்ளலாம். நம் எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் பசியும், வறுமையும், வீடின்மையும், ஆடையின்மையும், அல்லது சில நேரங்களில் நம் அழிவை. இப்படி எதிர்பார்க்கும் எதிரியின் முன் ஆண்டவர் நமக்கு விருந்தை ஏற்பாடு செய்கிறார் என்றால், அந்த எதிரியின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடுபொடியாக்குகின்றார் என்றே பொருள். கடவுள் அத்தோடு நிறுத்தவில்லை. நம் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார். 'தலையில் நறுமணத் தைலம் பூசுதல்' என்பது திருப்பொழிவின் அடையாளம். அந்த நிகழ்வில் ஆண்டவர் தன் ஆவியை திருப்பொழிவு செய்யப்படுபவருக்கு அருள்கிறார். இதன் விளைவு, 'பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' அதாவது, 'குறையொன்றும் இல்லை' என்ற நிலை உருவாகிறது.
இன்று, நம்மிடம் குறைவு மனம் இருந்தால் ஆண்டவரின் ஆவி நம்மிடம் இல்லை என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இந்த மூன்று இறைவார்த்தைப் பகுதிகளின் பின்புலத்தில், இன்றைய வாசகங்களைப் பார்க்கும்போது, தூய ஆவியாரின் வருகை, முன்பிருந்த நிலையை மாற்றி, 'இது எப்படி!' என்று காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:1-11) பெந்தெகோஸ்தே நிகழ்வு பற்றிச் சொல்கிறது. நிகழ்வில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று, காற்று. இரண்டு, நாக்கு. இவ்விரண்டு வார்த்தைகளுமே இரட்டைப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, காற்று. இந்த நிகழ்வில் பெருங்காற்று வீசுகிறது. அதே வேளையில், ஆவியார் என்னும் காற்று சீடர்களுக்குள் நுழைகிறது. இரண்டு, நாக்கு. பிளவுண்ட நெருப்பு நாக்குகள் இறங்கி வருகின்றன. சீடர்கள் வௌ;வேறு நாவுகளில் (மொழிகளில்) பேசுகின்றனர். ஆக, முன்பில்லாத ஒரு நிலை இப்போது வருகிறது. அடைத்து வைக்கப்பட்ட கதவுகள் காற்றினால் திறக்கப்படுகின்றன. கட்டப்பட்ட நாவுகள் பேச ஆரம்பிக்கின்றன.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13), புனித பவுல், கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், ஆவியாரையும் அவர் அருளும் வரங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையாளர்கள் தாங்கள் நம்பிக்கை நிலைக்குள் வந்தவுடன் ஆவியாரின் அருள்பொழிவையும், வரங்களையும் பெறுகின்றனர். ஆக, அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை, பிரிவினை வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்.
நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-23) நம்மில் சில ஐயங்களை எழுப்புகின்றது.
ஒன்று, இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்று நடக்கிறது. அதாவது, 'வாரத்தின் முதல் நாள். மாலை வேளை.' ஆனால், வாரத்தின் முதல் நாள், மாலை வேளையில், லூக்காவின் பதிவின்படி (காண். லூக் 24), இயேசு எம்மாவு நகரில் இருக்கிறார். இயேசு எங்கேதான் இருந்தார்? யோவான் சொல்வது போல எருசலேமிலா? அல்லது லூக்கா சொல்வது போல எம்மாவு நகரிலா? அல்லது இரு இடங்களிலுமா?
இரண்டு, இந்த நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின் உயிர்ப்பு நாளில் சீடர்களுக்கு வழங்கப்படுகிறார். ஆனால், லூக்காவின் பதிவின்படி பெந்தெகோஸ்தே நாளில்தான் ஆவியார் இறங்கி வருகின்றார்.
மூன்று, இந்த நிகழ்வில் தோமா இல்லை. அப்படி என்றால், தோமாவின் மேல் தூய ஆவி அருளப்படவில்லையா? அல்லது மன்னிப்பு வழங்கும், நிறுத்தும் அதிகாரம் தோமாவுக்கு வழங்கப்படவில்லையா?
நான்கு, இந்த நிகழ்வில் இயேசு தன் சீடர்களின்மேல் ஆவியை ஊதினார் என்றால், அவர்கள் மீண்டும் எட்டு நாள்களுக்குப் பின்பும் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்தது ஏன்? இயேசு ஊதிய ஆவி அவர்களுக்கு ஊட்டமும் ஊக்கமும் தரவில்லையா?
இந்த ஐயங்கள் ஒரு பக்கம் எழ, மற்றொரு பக்கம், இயேசு இங்கே பாவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் பதிவுகளில் பாவம் பற்றிய குறிப்பு இல்லை, மாறாக, பணி பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா.' யோவான் நற்செய்தியின் பின்புலத்தை இங்கே புரிந்துகொள்வோம். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'நம்பிக்கையின்மை.' ஆக, பாவம் நீக்குதல் என்பது நம்பிக்கையின்மை நீக்குதல் என எடுத்துக்கொள்ளலாம். இங்கே, சீடர்கள் தாங்களே நம்பிக்கையின்மையில்தான் இருக்கிறார்கள். ஆக, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதன் மேல் தன் ஆவியை ஊதியதுபோல, இன்று இயேசு தன் சீடர்கள்மேல் ஆவியை ஊதுகின்றார். அவர்கள் இனி இன்றுமுதல் தங்கள் இயல்பு விடுத்து இயேசுவின் இயல்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், சீடர்களின் பயம் மறைந்து, துணிவு பிறக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், பிரிவினை மறைந்து, ஒருமைப்பாடு பிறக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையின்மை மறைந்து, நம்பிக்கை பிறக்கிறது.
முந்தைய நிலை இப்போது இல்லை.
'இது எப்படி?' - தூய ஆவியாரால்!
இன்று நான் என் வாழ்வைப் பார்த்து, 'இது எப்படி?' என்று என்னால் கேட்க முடியுமா? அல்லது 'ஐயோ! மறுபடியும் இப்படியா?' என்று புலம்பும், பரிதவிக்கும் நிலையில் நான் இருக்கின்றேனா?
இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 104), பாடலாசிரியர், 'ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்!' எனப் பாடுகின்றார்.
என் முகம் ஆண்டவரின் ஆவியாரால் புதுப்பிக்கப்படுகிறதா?
சீடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடம் இருந்ததுபோல, என்னுள் இருக்கும் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, வெட்கம், குற்றவுணர்வு, பலிகடா மனநிலை, சோர்வு, பின்வாங்குதல், இறுமாப்பு, பிரிவினை எண்ணம் ஆகியவை மறைகின்றனவா?
என் வாழ்க்கை இறைவனை நோக்கித் திரும்பியுள்ளதா?
என்னால் எல்லாரையும் மன்னிக்கவும் அன்பு செய்யவும் முடிகிறதா?
என் வாழ்வின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரும், தலைவரும் நான் என்ற எண்ணம் என்னில் வருகிறதா?
என் அருள்பொழிவு நிலையை நான் அன்றாடம் உணர்கிறேனா?
என் வாழ்வின் கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றிகூறுகிறேனா?
கண்ணியத்தோடு என் கடப்பாடு இருக்கிறதா?
இப்படியாக,
முன்பிருந்த நிலை என்னில் மாறினால், என்னைச் சுற்றியிருக்கும் நிலையும் மாறும்.
இந்த நேரத்தில் நான், 'இது எப்படி?' என்று எருசலேம் நகரத்தார் போலக் கேட்க முடியும்.
இப்படிக் கேட்டலில்தான் நான் எந்த வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.
தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும் செபங்களும்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)