புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 May 2020

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் May 30

† இன்றைய புனிதர் †
(மே 30)

✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠
(St. Joan of Arc)
தூய கன்னியர்; மறைசாட்சி:
(Holy Virgin and Martyr) 

பிறப்பு: ஜனவரி 6, 1412
டோம்ரேமி, ஃபிரான்ஸ் அரசு
(Domrémy, Kingdom of France) 

இறப்பு: மே 30, 1431 (வயது 19)
ரோவன், நோர்மண்டி
(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
(Rouen, Normandy - Then under English rule) 

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 18, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X) 

புனிதர் பட்டம்: மே 16, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV) 

நினைவுத் திருவிழா: மே 30 

பாதுகாவல்:
ஃபிரான்ஸ்; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; “ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெண் இராணுப் படையினர்” (Women's Army Corps); “ஐக்கிய அமெரிக்க கடற்படை ரிசர்வ் (மகளிர் ரிசர்வ்) அல்லது, “இரண்டாம் உலகப் போரின்போது தானாகவே முன்வந்து சேவையாற்றிய பெண்கள் படை” (Women Accepted for Volunteer Emergency Service in the World War II)

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் (St. Joan of Arc), கி.பி. 1412ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “டாம்ரேமி” (Domrémy) என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் ஃபிரான்ஸ் நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

“ஓர்லியன்ஸ் பணிப்பெண்” (The Maid of Orléans) எனும் செல்லப்பெயர் அல்லது புனைப் பெயர் (Nickname) கொண்ட இவரது தந்தை “ஜாக்குஸ் டி ஆர்க்” (Jacques d'Arc) ஆவார். இவரது தாயார் “இஸபெல்லா ரோமி” (Isabelle Romée) ஆவார். இவர்களுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில், ஜோன் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி. எனவே ஜோன் தனது குழந்தை பருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜோன் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே ஜோன் ஆழ்ந்த இறை சிந்தனையுடையவராகவே இருந்தார்.

"இறைதூதர் மிக்கேல்" (Archangel Michael), "புனிதர் மார்கரெட்" (Saint Margaret) மற்றும் "புனிதர் கேதரின்" (Saint Catherine of Alexandria) ஆகியோர் தமக்குக் காட்சி தந்ததாகவும், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஃபிரான்ஸ் நாட்டினை மீட்க நூறு வருட கால போரிடும் முடியிழந்த ஃபிரெஞ்ச் மன்னன் ஏழாம் சார்ளசுக்கு (The uncrowned King Charles VII) உதவுமாறு தமக்கு உத்தரவிட்டதாகவும் ஜோன் கூறினார். 

அந்நியரை “ஓர்லியன்ஸ்” (Orléans) பிராந்தியத்தை விட்டு விரட்டுவதற்காகவே கடவுள் தம்மைப் படைத்திருப்பதாக இவர் நம்பினார். மீட்புப் போரின் முதல் கட்டமாக ஓர்லியன்ஸ் (Orléans) முற்றுகைக்கு செல்லுமாறு ஏழாம் சார்ள்ஸ் உத்தரவிட்டார். ஜோன் ஃபிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற ஃபிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் ஃபிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே ஃபிரான்சின் ஏழாம் சார்ளஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. 

ஆயினும் பர்கண்டியர்களால் (Burgundian) கி.பி. 1430ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாளன்று, போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இவர், ஃபிரான்சின் எதிரிகளான ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் "பேயுவைஸ்" ஆங்கில சார்பு ஆயரான "பியேர் கெளசொன்" (pro-English Bishop of Beauvais Pierre Cauchon) துணையோடு இவரை சூனியக்காரி எனவும், தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19ம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை மூன்றாம் கலிக்ஸ்டஸால் (Pope Callixtus III) இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் கத்தோலிக்க மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, கி.பி. 1909ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்களால், “நோட்ரே டேம் டி பாரிஸ்” (Notre Dame de Paris) ஆலயத்தில் அருளாளர் பட்டமும், 1920ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களால் ரோம் நகரின் “தூய பேதுரு பேராலயத்தில்” (St. Peter's Basilica) புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருநாள் மே மாதம் 30ம் நாள் ஆகும்.

இன்றைய புனிதர்

2020-05-30

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )

பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலி (Patron of France)


பிறப்பு
6 ஜனவரி 1412
டோம்ரேமி(Domremy), பிரான்சு

இறப்பு
1431
ரூவன்(Rouen), பிரான்சு

புனிதர்பட்டம்: 16 மே 1920 திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்


இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர். பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர். பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார். 1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார். அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார். செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர். அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார். பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


செபம்:

வழிநடத்துபவரே எம் இறைவா! எதிரிகளால் எம் நாட்டு மக்கள் தாக்கப்படும்போது, வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்கின் துணைகொண்டு, எம் மக்களை நாங்கள் காத்தருள, நீர் துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


குரு, சபைநிறுவுநர் லெயோனார்ட் முரியால்டோ Leonhard Murialdo

பிறப்பு:26 அக்டோபர் 1828, தூரின் Turin, இத்தாலி
இறப்பு:30 மே 1900, தூரின், இத்தாலி
புனிதர்பட்டம்:1970, திருத்தந்தை 6 ஆம் பவுல்


இன்றைய புனிதர் :
(30-05-2020)

ஜோன் ஆப் ஆர்க் (மே 30)

ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனித தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும் உதிக்கப்போவதில்லை – வின்ஸ்டென்ட் சர்ச்சில்

வாழ்க்கை வரலாறு

15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இங்கிலாந்து& பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. இங்கிலாந்து, பிரான்ஸின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ், அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.


இத்தகைய சூழலில் பிரான்ஸ் தேசத்தில், ‘தோம்ரிமி’ என்ற சிறிய கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான் நம் புனிதை ஜோன். இவள், தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பற்றி, தன் தந்தையின் மூலம் அறிந்திருந்தாள். எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் தோன்றியது. நாளடைவில் இந்த விருப்பம், தீவிரமானது. ‘தாய் நாட்டை காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என்ற பொருளில் காட்சிகளும், குரல்களும் அடிக்கடி தனக்குள் தோன்றுவதாக சொல்லத் தொடங்கினாள். அது மட்டுமில்லை, இந்த உயரிய குறிக்கோளுக்காகவே இறைவன் தன்னைப் படைத்திருப்பதாகவும் அவள் நம்பத் தொடங்கினாள்.


இதை, தன் தாய் தந்தையரிடமும், கிராமத்துப் பெரியவர்களிடமும் அவள் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்தனர். ‘இது, வெறும் கற்பனை!’ என்றவர்கள், திரு மணம் செய்து, பிள்ளைகள் பெற்றுக் கொண்டு வாழும் வழியைப் பார்க்குமாறு அவளுக்கு அறிவுரை கூறினர். ‘இது கற்பனை அல்ல; கடவுளின் ஆணை!’ என்று உறுதியாக நின்ற அவளை மெதுவாக நம்பத் தொடங்கினர் சிலர். அவர்களது உதவியுடன் பிரான்ஸ் அரசன் ஏழாவது சார்லஸை சந்தித்தாள் ஜோன். தான், இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து பிரான்ஸை மீட்க வந்திருப்பதாக அரசனிடம் பணிவுடன் தெரிவித்தாள். மேலும், தென் பிரான்ஸில் இருந்த ‘ஆர்லேன்ஸ்’ என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன் தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள். பெரும் தயக்கத்துக்குப் பின் அவளது கோரிக்கையை ஏற்றான் அரசன்.


போர்க் கவசம் அணிந்து, ஒரு கையில் உருவிய கத்தி, மறு கையில் ‘இயேசு மரி’ என்று பொறிக்கப்பட்ட வெண் கொடியுடன் குதிரையின் மீது அமர்ந்து, ஐந்தாயிரம் பிரெஞ்சுப் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். இது நடந்தது 1429 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்போது அவளது வயது 18. இளம் பெண் ஒருவளது தலைமையில் ஆர்லேன்ஸ் நகரை நெருங்கிய பிரெஞ்சுப் படையைப் பார்த்து முதலில் சிரித்தனர் ஆங்கிலேயப் படையினர். ஆனால், சுதந்திர வேட்கை மிகுந்த ஜோனின் உணர்ச்சியூட்டும் தலைமையின் கீழ் வீரப் போர் புரிந்த பிரெஞ்சுப் படையினரின் தாக்குதலில், நகரின் கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழத் தொடங்கின. மிக முக்கியமான கடைசி கோட்டையைக் கைப்பற்றும் போரில் காயம் அடைந்து, மருத்துவ சிகிச்சைக்காக ஜோன் போரிலிருந்து விலக நேர்ந்தது. இதைக் கண்டு மனம் தளர்ந்த பிரெஞ்சு வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

பிரெஞ்சு வீரர்கள் மனம் தளர்வதை விரும்பாத ஜோன், மீண்டும் போரில் குதித்தாள். கடும் போருக்குப் பின் கடைசி கோட்டையையும் வென்று, ஆர்லேன்ஸ் நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச் செயலைப் பார்த்து, ‘இவள் சாதாரண மானிடப் பெண் இல்லை. தெய்வீக சக்தி மிக்கவள்’ என்று பிரான்ஸ் மட்டுமல்லாமல், எதிரி நாடான இங்கிலாந்தும் நம்பத் தொடங்கியது. ‘ஆர்லேன்ஸை மீட்ட நங்கை’ என்று சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றாள் ஜோன்.


ஜோனின் வாழ்க்கை இத்துடன் முடியவில்லை. மேலும் பல போர்களில் கலந்து கொண்டு, பிரான்ஸ் தேசத்துக்கு வெற்றி மேல் வெற்றியைத் தேடிக் கொடுத்தாள். அவளது வீரம், ஆங்கிலேயர்களை பிரான்ஸின் வடக்கு மூலைக்கே விரட்டி அடித்தது. பிரான்ஸின் அரசனாக ஏழாவது சார்லஸ் முடி சூட்டிக் கொண்டதுடன், அதன் மாட்சிமை நிலை நாட்டப்பட்டது. ஆனால், விரைவிலேயே வஞ்சகத்தால் பிடிபட்டு, ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள் ஜோன். அவர்கள் அவளுக்கு மரண தண்டனை விதித்தனர். 30.05.1431 அன்று ஊரின் நடுவே கழுமரத்தில் கட்டப்பட்டு, சுற்றிலும் மரக் கட்டைகளை அடுக்கி, தீ வைத்து எரிக்கப்பட்டு ஜோன் கொல்லப்பட்டாள். இவ்வாறு அசாதாரண வீரத்துடன் வாழ்ந்து, இறுதியில் பெரும் துணிச்சலுடன் மரணத்தைத் தழுவிய அவள், இந்த பூமியில் வாழ்ந்தது மொத்தம் 19 ஆண்டுகளே.

இவருக்கு 1920 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆபத்தில் – அனைத்து வேளையிலும் - ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரிப்போம்

ஜோன் ஆஃப் ஆர்க் ஒரு வீர நங்கையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பக்தியான ஒரு பெண்மணியாகவும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக அவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி கொண்டு இருந்தார்.

இங்கிலாந்து நாட்டுக்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டுப் படைக்குத் தலைமைதாங்கிய ஜோன் தன்னுடைய கையில் இயேசு, மரியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கொடியைத் தாங்கிச் சென்றார். அதுவே ஜோனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான போரில் வெற்றியைத் தேடித் தந்தது. தூய ஜோனைப் போன்று இயேசுவின் பெயருக்கு – மரியாவின் பெயருக்கு – இருக்கும் வல்லமையை நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு தருவார்” என்று (யோவா 16:23). இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலும் உண்மை. தூய ஜோன் இயேசுவின் பெயரை நம்பி உச்சரித்தார். அதனால் வெற்றிகள் பல கண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவின் பெயரை நம்பிக்கையுடன் உச்சரிக்கும் போது ஆசிரைப் பெறுவோம் என்பது உறுதி.
ஆகவே ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று வீரத்தோடு செயல்படுவோம், ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் உண்மையான நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (30-05-2020)

Saint Joan of Arc

One of five children born to Jacques d'Arc and Isabelle Romee. Shepherdess. Mystic. From age 13 she received visions from Saint Margaret of Antioch, Saint Catherine of Alexandria, and Michael the Archangel.

In the early 15th century, England, in alliance with Burgundy, controlled most of what is modern France. In May 1428 Joan's visions told her to find the true king of France and help him reclaim his throne. She resisted for more than three years, but finally went to Charles VII in Chinon and told him of her visions. Carrying a banner that read "Jesus, Mary", she led troops from one battle to another. She was severely wounded, but her victories from 23 February 1429 to 23 May 1430 brought Charles VII to the throne. Captured by the Burgundians during the defence of Compiegne, she was sold to the English for 10 thousand francs. She was put on trial by an ecclesiastical court conducted by Cauchon, Bishop of Beauvais, a supporter of England, and was excuted as a heretic. In 1456 her case was re-tried, and Joan was acquitted (23 years too late).

"About Jesus Christ and the Church, I simply know they're just one thing, and we shouldn't complicate the matter." - Saint Joan of Arc, as recorded at her trial. 

Born :
6 January 1412 at Greux-Domremy, Lorraine, France.

Died :
burned alive on 30 May 1431 at Rouen, France.

Canonized :
16 May 1920 by Pope Benedict XV.

Patronage :
captives, prisoners
• martyrs
• opposition of Church authorities
• people ridiculed for their piety
• rape victims
• soldiers
• France
• WACs (Women's Army Corps)
• WAVES (Women Appointed for Voluntary Emergency Service)

---JDH---Jesus the Divine Healer---