புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 May 2020

கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ ✠
(St. Ivo of Kermartin)
ஏழைகளுக்காக பரிந்து பேசுபவர்:
(Advocate of the Poor)

பிறப்பு: அக்டோபர் 17, 1253
கேர்மார்ட்டின், டச்சி பிரிட்டனி
(Kermartin, Duchy of Brittany)

இறப்பு: மே 19, 1303 (வயது 49)
லான்னேக், டச்சி பிரிட்டனி
(Louannec, Duchy of Brittany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: ஜூன் 1347
திருத்தந்தை ஆறாவது கிளெமென்ட்
(Pope Clement VI)

நினைவுத் திருநாள்: மே 19

பாதுகாவல்:
பிரிட்டனி, வக்கீல்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள்
(Brittany, Lawyers, Abandoned Children)

புனிதர் கேர்மார்ட்டின் நகர இவோ, ஏழை மக்களுக்காக பரிந்து பேசும் ஒரு கத்தோலிக்க குரு ஆவார்.

கி.பி. 1253ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, பிறந்த இவரது தந்தையான "ஹெலோரி" (Helori), "கெர்மார்ட்டின்" (Kermartin) நகர பிரபு ஆவார். இவரது தாயாரின் பெயர் "அஸோ டு கென்கிஸ்" (Azo du Kenquis) ஆகும். பதினான்கு வயதில் "பாரிஸ் பல்கலைகழகத்தில்" (University of Paris) கல்வி கற்க அனுப்பப்பட்ட இவர், அங்கே சிவில் சட்டம் கற்று பட்டதாரியானார். பிற மாணவர்கள் கல்வி காலத்தை கொண்டாட்டங்களில் கழிக்க, இவோ கல்வியிலும், செப வாழ்விலும் முனைப்பாக இருந்தார். நேரம் வாய்க்கும்போதெல்லாம் நோயாளிகளைப் பார்க்க சென்றார். புலால் மற்றும் திராட்சை இரசம் போன்ற மது வகைகளையும் தவிர்த்தார். இறையியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறைகளையும் கற்றார்.

கி.பி. 1284ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1285ம் ஆண்டு "ட்ரெட்ரெஸ்" (Tredrez) எனும் பங்கில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிய இவோ, அங்கிருந்து "லௌன்னேக்" (Louannec) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

"லௌன்னேக்" (Louannec) பங்கிலேயே தாம் இறக்கும்வரை ஏழைகளின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை இலவசமாக செய்தும் உதவி செய்தார். கைவிடப்பட்டவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார்.

டூர்ஸ் நகர விதவைப் பெண் (The Widow of Tours):
பாரிஸ் (Paris) நகரின் தென்மேற்கே, 111 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “ஒர்லியான்ஸ்” (Orléans) நகரின் அருகேயுள்ள “டூர்ஸ்” (Tours) நகரில், ஆயர் தமது நீதிமன்றத்தை நடத்திவந்தார். வழக்கறிஞரான ஈவோ, நீதிமன்றத்திற்கு வருகை தரும்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட விதவைப் பெண்ணுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள், நிலச்சுவான்தாரான அந்த விதவைப் பெண் கண் கலங்கி அழுவதைக் கண்டார். விசாரித்தபோது, அடுத்த நாளே தாம் ஏமாற்றப்பட்ட ஒரு பயண வணிகரின் வழக்குக்கு பதில் சொல்வதற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவள் கூறினாள். தமது பயணத்தின்போது, இவ்விதவைப் பெண்ணுடன் தங்கிச் செல்லும் “டோ” மற்றும் “ரோ” (Doe and Roe) ஆகிய இரண்டு வணிகர்கள் தந்திரமாக அவளை ஏமாற்றி, அவளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் அவள்மீது வழக்கு தொடுத்திருந்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய ஈவோ, மறுநாள் தமது சாதுர்யமான வாதத்தால் விதவையை ஏமாற்றிய வணிகர்களின் தந்திரத்தை வெளிக் கொணர்ந்தார்.

இவ்வாறு இவ்விளம் வழக்கறிஞர், விதவைப் பெண் ஏமாற்றப்படாமல் காப்பாற்றினார். விதவைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் வாதங்களும், அவரது புகழ் மேலும் பரவ வழிவகுத்தது.

புனிதர் தியோஃபிலஸ் May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ புனிதர் தியோஃபிலஸ் ✠
(St. Theophilus of Corte)
குரு, நிறுவனர்:
(Priest and Founder)

பிறப்பு: அக்டோபர் 30, 1676
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

இறப்பு: ஜூன் 17, 1740 (வயது 63)
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜனவரி 19, 1896
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருவிழா: மே 19

புனிதர் தியோஃபிலஸ், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், ஃபிரான்சிஸ்கன் (Order of Friars Minor) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட (Professed member) உறுப்பினருமாவார்.

மறையுரைகளாற்றுவதிலும், மறை போதனையிலும் பிரசித்தி பெற்ற இவர், வட இத்தாலிய நகரங்களிலும், தாம் பிறந்த “கோர்சிகா தீவு” (Corsica island) முழுவதும் ஃபிரான்சிஸ்கன் (Franciscans) இல்லங்களை நிறுவும் முயற்சிகளில் சீர்திருத்தவாதியாக செயல்பட்டார்.

தமது மகிழ்ச்சியான நடவடிக்கைகளுக்காக அறியப்பட்ட இவர், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராயுமிருந்தார். அதே நேரத்தில் தனிமை, அமைதியான, மற்றும் அவரது படாடோபமற்ற அர்ப்பணிப்புக்காகவும் அவர் அறியப்பட்டார்.

“பியாஜியோ அர்ரிகி” (Biagio Arrighi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1676ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 30ம் தேதியன்று, கோர்சிகா தீவுகளில் (Corsica island) பிறந்தார். கோர்சிகா தீவின் பிரபுக்களில் ஒருவரான “ஜியோவன்னி அன்டோனியோ” (Giovanni Antonio) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர், “மடலினா” (Maddalena) ஆகும்.

ஃபிரான்சிஸ்கன் துறவியரிடம் கல்வி கற்ற இவர், கி.பி. 1693ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 21ம் நாளன்று அச்சபையிலேயே இணைந்து, தியோஃபிலஸ் எனும் ஆன்மீக பெயரை ஏற்றுக்கொண்டார்.

தனிமையையும் அமைதியையும் மிகவும் நேசித்த அவர், அதையே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான மென்மையான முறையாக கண்டார். தன்னுடைய சக ஃபிரான்சிஸ்கன் துறவியரிடமும் கடவுளுடைய நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான வழிமுறையாக இதனையே வலியுறுத்தினார்.

ரோம் நகரில் தமது இறையியல் படிப்புகளை தனித்தன்மையுடன் நிறைவு செய்த அவர், நேபிள்ஸ் (Naples) நகரிலும் தனது இறையியல் படிப்பைத் தொடங்கினார். கி.பி. 1694ம் ஆண்டு, “சலேர்னோ” (Salerno) நகரில் தமது உறுதிமொழிகளை ஏற்ற தியோபிலஸ், கி.பி. 1700ம் ஆண்டு, நவம்பர் மாதம், 30ம் நாளன்று, இத்தாலியின் நேப்பிள்ஸ் (Naples) நகரிலுள்ள “தூய மரியா லா நோவா” பள்ளியில் (Convent of Santa Maria La Nova) குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்றதும், “சுபியாகோ” (Subiaco) நகரின் அருகேயுள்ள “சிவிடெல்லா” (Civitella) எனுமிடத்திலுள்ள ஒரு புராதன பள்ளியை சீரமைப்பதற்கான அனுமதியை தமது தலைமை துறவியரிடம் கெஞ்சி பெற்றார். இத்தாலியின் டுஸ்கான் பிராந்தியம் (Tuscan Region) மற்றும் கோர்சிகா (Corscia) தீவுகளில் “ஸுவானி” (Zuani) மற்றும் “ஃபியூசெச்சியோ” (Fucecchio) ஆகிய இடங்களில், தமது சபைக்கான இல்லங்களை நிறுவினார்.

அவர் எப்போதும் சற்று நோயாக இருந்தபோதிலும், கடவுளுடைய மக்களின் தேவைகளுக்காக நோயாளிகளுக்காகவும், கல்லறைகளிலும் தாராளமானவராக விளங்கினார். உழைத்துக் களைத்துப்போன தியோபிலஸ், கி.பி. 1740ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் தேதியன்று, தமது 63 வயதில் மரித்தார். கி.பி. 1896ம் ஆண்டு முக்திபேறு பெற்ற தியோபிலஸ், கி.பி. 1930ம் ஆண்டு, புனிதர் பட்டம் பெற்றார்.

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)

இன்றைய புனிதர் :
(19-05-2020)

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும், உங்களுள் முதன்மையானவராக இருக்கின்றவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத் 20: 26-27)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய செலஸ்டின், 1215 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள அப்ருஸி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பீட்டர் டி மோரோன்.  இவர் குடும்பத்தில் இருந்த பன்னிரெண்டு குழந்தைகளுள் பதினோறாவது குழந்தை.

இவர் சிறுவனாக இருக்கும்போது இவருடைய தாயார் இவரையும் மற்ற எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகக் கூட்டி, “உங்களுள் யார் புனிதராகப் போகிறார்?” என்று கேட்டும்போது இவரே, “நான் புனிதராகப் போகிறேன்” என்று பதில் சொல்வார். அந்தளவுக்கு பீட்டர் எனப்பட்ட செலஸ்டின் சிறுவயது முதலே புனிதராக மாறவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தார்.

செலஸ்டினுக்கு இருபதாவது வயது நடக்கும்போது துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, 31 வயதில் குருவாக மாறினார். ஆசிர்வாதப்பர் சபையில் இருக்கும்போது இவர் தாழ்ச்சிக்கும் தூய்மையான வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்த சமயத்தில் அப்போது திருத்தந்தையாக இருந்த நான்காம் நிக்கோலாஸ் என்பவர் இறந்துபோனார். எனவே திருத்தந்தைப் பதவியானது காலியாக இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குக் காலியாக இருந்தது. இதை அறிந்த செலஸ்டின், திருத்தந்தைப் பதவியானது இப்படி காலியாக இருப்பது நல்லதல்ல என்று திருச்சபையில் முக்கியப் பொறுப்பில் இருந்த கர்தினால்களிடமும் இன்னும் ஒருசிலரிடமும் எடுத்துச் சொன்னார்.

உடனே அவர்கள் யாரை திருத்தந்தையாக நியமிக்கலாம் என்று கலந்துரையாடினார்கள். இறுதியில் பீட்டர் எனப்பட்ட செலஸ்டினையே திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் திருதந்தையாக இருப்பதற்கு தகுதியற்றவன் என்று சொன்னபோதும்கூட அவர்கள் அவரைத் திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இதனால் அவர் ஐந்தாம் செலஸ்டின் என்ற பெயரில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று திருச்சபையை சிறந்தவிதமாய் வழிநடத்திச் சென்றார்.

திருத்தந்தையாகப் பொறுப்பெற்றே வெறும் ஐந்து மாதங்களில் அவர், தான் திருத்தந்தையாக இருப்பதற்கு தகுதியில்லாதவன் என உணர்ந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முன்பிருந்த ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து கடைசிவரைக்கும் ஒரு தூய்மையான துறவியாக வாழ்ந்து வந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஐந்தாம் செலஸ்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தாழ்ச்சி

தூய ஐந்தாம் செலஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். அவர் எப்போதும் தான் திருத்தந்தையாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்ற தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்துவந்தார். அதனால் அவர் புனிதராக உயர்ந்தார். அவரைப் போன்று நாம் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.
அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான்.

அவனோ துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?” என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி “மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார்.  அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

ஆம், உயர் பதவியில் இருப்பவனல்ல, உண்மையான பணிவோடு இருப்பவனே உண்மையான அரசன். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ஐந்தாம் செலஸ்டினைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனிதர் ஃபெலிக்ஸ் May 18

† இன்றைய புனிதர் †
(மே 18)

✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠
(St. Felix of Cantalice)
கப்புச்சின் துறவி:
(Capuchin Friar)

பிறப்பு: மே 18, 1515
கேன்டலிஸ், இத்தாலி
(Cantalice, Italy)

இறப்பு: மே 18, 1587
ரோம், இத்தாலி
(Rome, Italy)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : அக்டோபர் 1, 1625
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: கி.பி. 1712
திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட்
(Pope Clement XI)

நினைவுத் திருவிழா: மே 18

சித்தரிக்கப்படும் வகை: 
கப்புச்சின் திருவுடையில் 
குழந்தை இயேசுவை கரங்களில் தாங்கி

பாதுகாவல்: 
ஸ்பெல்லோ நகர் (Spello)

புனிதர் ஃபெலிக்ஸ், மத்திய இத்தாலி நாட்டின் “லாஸியோ” (Lazio) பிராந்தியத்தின், "கேன்டலிஸ்" (Cantalice) என்ற நகரில் கி.பி. 1515ம் ஆண்டு, ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். "ஸன்ட்டி" மற்றும் "ஸன்ட்டா பொர்ரி" (Santi and Santa Porri) ஆகிய பெற்றோரின் நான்கு ஆண் மகவுகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்.

வறுமையின் காரணமாக “சிட்டாடுகேல்” (Cittàducale) நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தமது பத்து வயதிலிருந்தே கால்நடைகளை மேய்ப்பவராகவும் பண்ணைப் பணியாளாகவும் வேலை செய்தார். தமது பணி நேரத்தின்போது செபிக்க கற்றுக்கொண்ட ஃபெலிக்ஸ், அங்கு வரும் கப்புச்சின் சபை துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 28 வயது வரை அதே கால்நடைகளை மேய்க்கும் மற்றும் பண்ணைப்பணிகளைச் செய்துவந்தார்.

கி.பி. 1543ம் ஆண்டு, இலையுதிர் காலம் முடிவடையும் சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த கப்புச்சின் துறவு இல்லத்தில் "பொதுநிலை சகோதரராக" (Lay Brother) இணைந்தார். எழுத படிக்க தெரியாத ஃபெலிக்ஸ், செபங்களை மனப்பாடம் செய்துகொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக வாழ்ந்தார். 1547ம் ஆண்டு, ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட ஃபெலிக்ஸ், தமது வாழ்வின் மீதமுள்ள சுமார் நாற்பது வருட காலத்தை அங்கேயே கப்புச்சின் துரவியரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக யாசகம் செய்து கழித்தார். யாசகத்திற்காக செல்லும் இவர் காலணிகள் அணிவதில்லை. மாறாக, தமது தோள்களில் ஒரு பெரிய சாக்குப் பையை சுமது செல்வார்.

இந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள், இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஓவ்வொரு நாளும் காத்துக்கிடந்தனர். இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படிப்பறிவு இல்லாத ஃபெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக திகழ்ந்தார். பலவிதமான மக்களின் பிரச்சனைகளுக்கு சாதுரியமான முடிவை அள்ளித்தந்து ரோம் நகர தெருக்களின் ஞானி எனப் போற்றப்பட்டார். 

ஒளிவு மறைவின்றி பேசும் வழக்கமுள்ள சகோதரர் ஃபெலிக்ஸ், புனிதர் சார்லஸ் போரோமியோ (Charles Borromeo), புனிதர் பிலிப் நேரி (St. Philip Neri) மற்றும் சில கர்தினால்களின் அறிமுகமானதுடன் நண்பராகவும் ஆனார்.

புனிதர் பதுவை அந்தோணியாரைப் போல, இவரும் குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்துவதைப் போன்று ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை இவருக்கு காட்சியளித்த இறை அன்னை அதிதூய கன்னி மரியாள் இவரது கைகளில் குழந்தை இயேசுவை தந்தார் என்பர்.

சகோதரர் ஃபெலிக்ஸ் கி.பி. 1587ம் ஆண்டு, தமது 72 வயதான பிறந்த தினத்தன்றே தமது இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார். 

ஃபிரான்சிஸ்கன் சபையின் ஒரு கிளையாக கி.பி. 1528ம் ஆண்டு, அங்கீகரிக்கப்பட்ட கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712ம் ஆண்டு, சகோதரர் ஃபெலிக்ஸ் உயர்த்தப்பட்டார்.