திருப்பலி முன்னுரை
திருப்பலியில் பங்கேற்கும்போதெல்லாம் நம்மை அன்புடன் வாழ்த்தும் அன்னையாம் திருச்சபை திருமகன் இயேசுவின் அருளும்; தந்தையாம் இறைவனின் அன்பும்; தூய ஆவியின் நட்புறவும் நாம்பெற வாழ்த்தி வரவேற்கிறது.
இயேசுக் கிறீஸ்துவின் மேல்; வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். நாம் பெற்றுள்ள தூயஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்னும் ஆசீர்வாத வாக்குத்தங்களை இன்றைய வார்த்தைகள் வழியாக இறைவன் உறுதிப்படுத்துகின்றார். இத்தினத்தைக் கொண்டாடும் நாமனைவரும் நம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி இறைவனை மகிமைப்படுத்தும் சக்தியை இறைவனிடம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
தொடக்கத்தில் புவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
நீதிமொழிகள் 8;22-31
இறைவனின் ஞானம் கூறுவது ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். 23 தொடக்கத்தில் புவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். 24 கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. 25 மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். 26 அவர் ப+வுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். 27 வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். 28 உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். 29 அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, ப+வுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, 30 நான் அவர் அருகில் அவருடைய சிற்பி இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். 31 அவரது ப+வுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
திருப்பாடல்கள் 8;3-8
3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,பல்லவி
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?பல்லவி
5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.பல்லவி
6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி
7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.
நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இரண்டாம் வாசகம் - 5;1-5
சகோதர சகோதரிகளே நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2 நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. 3 அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4 மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5 அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:12-15
அக்காலத்தில் யேசு தம் சீடர்களுக்கு கூறியது "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
“முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்”
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
அன்பே உருவான இறைவா,
திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
எங்களை முடிவில்லாத வகையில் அன்பு செய்யும் இயேசுவே,
உம்மைப் போற்றுகிறோம். நீர் தருகின்ற தூய ஆவி என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அந்த ஆவியால் நாங்கள் நிரப்பப்பட்டு, உம்மை மாட்சிப்படுத்தும் அருளை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வளிப்பவராம் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான தந்தையே இறைவா!
உம்முடைய மக்களாகிய நாங்களும்: உமது ஆவியால் இயக்கப்பட்டு, உமது கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து உம் சீடர்களாக வாழ அருள்தர வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புத் தந்தையே இறைவா!
எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை
''இயேசு சீடர்களை நோக்கி, ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்' என்றார்'' (யோவான் 16:12)
யோவான் நற்செய்தியில் இயேசு தம்மை ''உண்மை'' என அறிமுகப்படுத்துகிறார். இயேசுவைப் பற்றிய உண்மையை நமக்குத் தூய ஆவி வெளிப்படுத்துவதோடு, அந்த உண்மையை நம் வாழ்வில் இணைத்துப் பொருள் புரிந்திட அதே தூய ஆவி நமக்கு வழிகாட்டவும் செய்வார். இங்கே இயேசு தம்மை ''வழி'' என்று கூறியதையும் நாம் நினைவுகூரலாம். ஆக, ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவைப் போல நம்மிடையே இருந்து செயலாற்றுகிறார் எனலாம். எனினும் தூய ஆவி இயேசுவின் இடத்தில், இயேசுவுக்குப் பதிலாக நம்மிடையே உள்ளார் என நாம் முடிவுகட்டுதல் சரியல்ல. தூய ஆவியின் செயல் இயேசுவைப் பற்றிய உண்மையை நாம் அறிந்துகொள்ள துணையாக வரும். இயேசுவின் உடனிருப்பு நம் வாழ்வில் துலங்கிட தூய ஆவி துணையாவார். கடவுளைச் சென்றடைகின்ற வழியை இயேசு நமக்குக் காட்டியதுபோல, தூய ஆவி இயேசு பற்றிய ''உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவார்''.
கடவுளின் அன்பை நமக்கு இயேசு வெறும் சொல்லால் வெளிப்படுத்தவில்லை. இயேசுவின் வாழ்வும், சாவும், உயிர்த்தெழுதலும் கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அந்த வெளிப்பாடு தொடர்ந்து நம் வாழ்விலும் உலக வரலாற்றிலும் நிகழ்ந்திட தூய ஆவி துணையாக நிற்கிறார். எனவே, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாமும் ஆழமாக அறிந்திட, அந்த அறிவின் அடிப்படையில் நடந்திட நமக்கு வழிகாட்டியாக தூய ஆவி இருக்கிறார். எனவே, தூய ஆவியின் செயல்பாட்டை நாம் வரலாற்றில் காணலாம்; திருச்சபையின் வாழ்வில் காணலாம்; நம்பிக்கை கொண்டோர், நல் மனது கொண்டோர் அனைவரின் அனுபவத்திலும் காணலாம். தூய ஆவியின் செயல்பாட்டைக் கண்டுகொள்வதும், அவர் காட்டுகின்ற வழியில் நடப்பதும் நம் பொறுப்பு.
மன்றாட்டு:
இறைவா, உண்மையின் ஊற்று நீர் ஒருவரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.