பிப்ரவரி -07
புனித ஜூலியானா ஃபால்கோனியேரி
உடல் நோய் உள்ளவர்களுக்குப் பாதுகாவலர்
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள் (1 கொரி. 11:26)
வானதூதர் மங்கள வார்த்தையை உரைத்ததன் நினைவாக பிளாரன்ஸ் நகரில் ஆலயம், எழுப்பிய சியாரிசிமோ மற்றும் ரிகுர்டாடா ஃபால்கோனியேரி தம்பதியினருக்கு அவர்களின் முதுமைக் காலத்தில் 1270-ஆம் ஆண்டு இந்த மகள் பிறந்தார் .இவர்களது குடும்பம் பிளாரன்ஸ் நகரின் மதிப்பு மிக்க குடும்பமாகும்.
மகிழ்வுடன் தம் சிறுவயதைக் கழித்த ஜூலியானா தன்னுடைய இளவயதில் தந்தையை இழந்தார் .இருப்பினும், மற்ற யுவதிகளைப் போல உலக நாட்டங்களில் ஈடுபாடு கொள்ளாமல் இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். திருமணத்திற்குத் தாய் ஏற்பாடு செய்தபோதும் மறுத்தார் .15 வயது நடைபெற்றபோது அருள்சகோதரியாகி பணியாற்ற விருப்பம் கொண்டார் .தமது மகளை விட்டுப் பிரிய மனமில்லாத தாய் இதனை விரும்பவில்லை.
தாய்க்குக் கீழ்ப்படிதலுடன் இருந்த ஜூலியானா தமது பெரியப்பாவிடம் தன் அழைத்தலைக் கூறினார். தூய மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு பேரில் ஒருவரான புனித அலெக்சிஸ் தனது தம்பி மகனின் ஏக்கத்தைப் போக்க அவள் தாயிடம் பேசினார். பேசி தூய மரியின் ஊழியர் சபையின் மூன்றாம் சபை போல வீட்டிலேயே துறவியாக இருப்பது என்று முடிவுக்கு வந்தார்கள் .அதன் படி துறவிக்கு உரிய உடை அணிந்து வீட்டிலேயே இறைவனின் அன்புப் பிள்ளையாக ஜூலியானா வாழ்ந்தார். தாயும் மகளும் ஒருவருக்கொருவர் ஆன்ம வழிகாட்டிகளாகவும் நல்ல தோழிகளாகவும் வாழ்ந்து மகிழ்ந்தார்கள்.
திடீரென்று 1304 ஆம் ஆண்டு தாய் இறந்ததும் தனது உற்ற தோழியைப் பிரிந்த துயரை ஜூலியானா அனுபவித்தார் .கவலை மறைய வேறொரு வீட்டில் குடியேறினார் .தூய மரியின் ஊழியர் சபையின் பணி நோக்கத்தை தமது வாழ்வில் செயல்படுத்தி, இறைவனின் அன்பைப் பிறருக்கு தமது வாழ்வால் வாழ்ந்து காட்டிய ஜூலியானா மீது பலர் நேசம் கொண்டனர். தங்களை இவருடன் இணைத்துக் கொண்டனர். அவர்களுடன் இணைந்து தூய மரியின் ஊழியர் சபை பெண்கள் பிரிவை, மூன்றாம் சபையாக ஆரம்பித்தார்.
சபையின் முக்கிய நோக்கங்களாக,"இரக்கச் செயல்பாடுகள், தாராளமாக உதவுதல் , செப வாழ்வு, நற்செய்தியின்படி வாழ்தல்" என்பதாக வடிவமைத்தார். எழைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஏழைகளிலும் ஏழைகளின் மீது அன்பு காட்டினார் .வசதியுள்ளவர்களுக்கு மட்டும் மற்றவர்கள் காட்டிய நெயத்தை இவர்களுக்கும் வெளிப்படுத்தினார். இதனால் பலர் இவருடன் சேர்ந்தார்கள் .35 ஆண்டுகளாக ஜூலியானா வைத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து மகிழ்ந்தார்கள்.
தொடர்ந்து பணி, ஒறுத்தல் முயற்சிகளால் ஜூலியானா உடல்நலமுற்றார் .சாப்பிட முடியாதபடி, நற்கருணை பெற முடியாதபடி மிகவும் பாதிக்கப்பட்டார். இயேசுவின் திருவுடலைப் பெற முடியாதமைக்யாக வருந்தினார் .தான் இறக்கப் போகும் நேரம் வந்தவுடன் திருப்பலி நிறைவேற்ற வந்த குருவிடம் நற்கருணையை தமது நெஞ்சின் மேல் வைக்கச் சொன்னார். குருவும் இசைந்தார். வைத்தவுடன் அற்புதமாக நற்கருணை மறைந்தது.
மிகுந்த சிலுவையிணை அனுபவித்த பிறகு, 1341 ஜூன் 12 அன்று தமது 71 ஆம் வயதில் ஜூலியானா இறைவனடி சேர்ந்தார். இறந்த பிறகு இவரின் நெஞ்சின் மீது நற்கருணையில் உள்ள சிலுவை அடையாளம் பதிந்திருந்ததை அருள் சகோதரிகள் பார்த்து ஆண்டவரைப் புகழ்ந்தார்கள். திருத்தந்தை 11 ஆம் இன்னொசென்ட் 1678, ஜூலை 26 அன்று அருளாளராக அறிவித்தார். திருத்தந்தை 12-ஆம் கிளமென்ட் 1737 ஜுன் 16 அன்று புனித நிலைக்கு உயர்த்தினார் .இவர் நற்கருணைப் புனிதர் என அழைக்கப்படுகிறார்
நற்கருணை ஆண்டவரின் நல்லாசி பெற்று நலிந்தோருக்கு உதவுகிறவர்கள் நாளெல்லாம் இறையருள் பெறுகிறார்கள்.