† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 8)
✠ புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா ✠
(St. Josephine Margaret Bakhita)
சூடானில் பிறந்த முன்னாள் அடிமைப்பெண்/ கனோஸ்ஸியன் சபை அருட்சகோதரி:
(Sudanese-born Former Slave/ Canossian Religious Sister)
பிறப்பு: கி.பி. 1869
ஒல்கொஸ்ஸா, டர்ஃபுர், சூடான்
(Olgossa, Darfur, Sudan)
இறப்பு: ஃபெப்ரவரி 8, 1947
ஸ்ச்சியோ, வெனேடோ, இத்தாலி குடியரசு
(Schio, Veneto, Republic of Italy)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திப்பேறு பட்டம்: மே 17, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
புனிதர் பட்டம்: அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 8
பாதுகாவல்:
சூடான்
(Sudan)
புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா, சூடான் நாட்டில் பிறந்த ஒரு முன்னாள் அடிமைப்பெண்ணும், பின்னர், "கனோஸ்ஸியன் அருட்சகோதரிகள்" (Canossian Religious Sister) சபையின் உறுப்பினராக இத்தாலியில் வாழ்ந்து, பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதருமாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை:
கி.பி. 1869ம் ஆண்டு, “மேற்கத்திய சூடான்” (Western Sudanese Region) நாட்டின் "டர்ஃபுர்" (Darfur) பிராந்தியத்தின் “ஒல்கொஸ்ஸா” (Olgossa) கிராமத்தில் பிறந்த ஜோசஃபின், ஒரு வசதியான - கௌரவமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அன்புமிக்க மூன்று சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் பிறந்த இவர், கஷ்டம் என்றாலே என்னவென்று அறியாமல் வளர்ந்தார்.
இவருக்கு சுமார் எட்டு வயதாகையில், கி.பி. 1877ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இவர் அரேபிய அடிமை வர்த்தகர்களால் கடத்தப்பட்டார். இவர்கள் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவரது மூத்த சகோதரியையும் கடத்தியிருந்தனர். மிகவும் குரூரமான முறையில், சுமார் 960 கிலோமீட்டர் தூரம் வெறும் கால்களுடன் "இய் ஒபேய்ட்" (El Obeid) என்ற நகரம் நோக்கி நடக்க வைக்கப்பட்டார். அந்நகரத்துக்கு சேரும்முன்னேயே அவர் இரண்டு தடவை விற்கப்பட்டார். அடிமையாக இருந்த சுமார் பன்னிரண்டு வருட காலத்தில் மீண்டும் மீண்டுமாக மூன்று முறை அவர் விற்கப்பட்டார். அவருக்கு நேர்ந்த கடத்தல்களும், அதன் காரணமான அதிர்ச்சிகளும், அவரது சொந்த பெயரைக் கூட அவர் மறக்க காரணமாயின. எதோ ஒரு அடிமை வியாபாரி அவருக்கு இட்ட பெயரான "பகிட்டா" (Bakhita) என்ற பெயரையே அவரும் தேர்ந்துகொண்டார். "பகிட்டா" (Bakhita) என்றால் அரபு மொழியில் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தமாம். ஜோசஃபின் வலுக்கட்டாயமாக இஸ்லாம் (Islam) மதத்துக்கும் மாற்றப்பட்டார்.
அடிமை வாழ்க்கை:
"இய் ஒபேய்ட்" (El Obeid) நகரில் ஜோசஃபின் ஒரு பணக்கார அரேபியரால் அடிமை வர்த்தகர்களிடமிருந்து வாங்கப்பட்டார். அவர் அங்கே அரேபியரின் இரண்டு மகள்களுக்கு சேவை செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார். அவர்கள் பகிட்டாவை நல்ல முறையில் கவனித்தனர். ஆனால், ஒரு தடவை குவளையொன்று உடைந்து போன ஒரு காரணத்துக்காக, அந்த அரேபியனின் மகன்களில் ஒருவன் பகிட்டாவை மிகவும் மோசமாக அடித்து உதைத்து துன்புறுத்தினான். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகிட்டா, ஒரு மாதத்துக்கும் மேலாக தமது வைக்கோல் படுக்கையிலிருந்து நகர இயலாமலிருந்தார்.
நான்காவது தடவியாக, இவரை ஒரு துருக்கிய இராணுவ அதிகாரி (Turkish General) வாங்கினார். இவர் தமது மனைவி மற்றும் மாமியாருக்கு சேவை செய்ய பகிட்டாவை நியமித்தார். இவரது மனைவியும், மாமியாரும் பகிட்டாவுக்கு செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. தாம் அந்த வீட்டிலிருந்த வருடங்களில், அடியோ காயமோ படாமல் கழிந்த ஒருநாளைக் கூட என்னால் நினைவு படுத்தி பார்க்க இயலவில்லை என்று ஜோசஃபின் கூறுகிறார். சாட்டை அடியால் பட்ட ஒரு காயம் ஆற ஆரம்பிக்கும் முன்னேயே அடுத்த காயம் வந்துவிடும் என்கிறார்.
தமக்கு நேர்ந்த மிகவும் திகிலூட்டும் சம்பவத்தை ஜோசஃபின் பின்வருமாறு விவரிக்கிறார்:
உடலில் பச்சை குத்துவதற்கான வடிவங்களை அமைத்து தமது எஜமானியரிடம் காண்பிப்பது இவரது அன்றாட பணிகளுள் ஒன்று. வேறொரு அடிமைப்பெண் ஒரு கிண்ணத்தில் வெண்ணிற மாவும், மற்றொரு கிண்ணத்தில் உப்புத்தூளும், மிகவும் கூரிய (பிளேடு) போன்ற கத்தியும் கொண்டு வருவார். பகிட்டா, வெண்ணிற மாவினால் தம் உடலில் பச்சை குத்துவதற்கான வடிவங்களை வரைவார். உடனே கூறிய கத்தியால் மாவு கோலங்களின் கோடுகள் மீது ஆழமாக கீறுவார். இரத்தம் வெளியேறும் முன்னேயே, ஆழமான தழும்புகளுக்காக உப்புத் தூளை அதில் நிரப்ப வேண்டும். ஜோசஃபினின் உடம்பில் மார்பகங்கள், வயிறு, மற்றும் வலது கரத்தில் மொத்தம் 114 சிக்கலான வடிவங்கள் இருந்தன.
கி.பி. 1882ம் ஆண்டின் இறுதியில் "இய் ஒபேய்ட்" (El Obeid) நகரம் "மாஹ்டிஸ்ட் புரட்சியாளர்களின்" (Mahdist Revolutionaries) தாக்குதலுக்கு உட்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன்காரணமாக, நகரை விட்டு குடும்பத்துடன் கிளம்பிய துருக்கிய இராணுவ அதிகாரி, பத்து அடிமைகளை மட்டும் தம்முடன் வைத்துக்கொண்டு பிறரை அங்கேயே விற்றுவிட்டான். தம்முடனிருந்தவர்களை வழியில் விற்றுவிட முடிவு செய்திருந்தான். கி.பி. 1883ம் ஆண்டு, பகிட்டாவை இத்தாலிய நாட்டின் பிரதிநிதியான (Italian Vice Consul) "கல்லிஸ்டோ லெக்னானி" (Callisto Legnani) என்பவர் வாங்கினார். அவர் பகிட்டாவை மிகவும் பிரியமாகவும் கௌரவமாகவும் நடத்தினார்.
இரண்டு வருடங்களின் பின்னர் "கல்லிஸ்டோ லெக்னானி" இத்தாலி திரும்ப முடிவெடுத்தபோது, பகிட்டா தாமும் அவருடன் வருவதாக கெஞ்சினார். கி.பி. 1884ம் ஆண்டின் இறுதியில், "அகஸ்டோ மிச்சியெலி" (Augusto Michieli) என்ற நண்பரின் உதவியால் முற்றுகையிடப்பட்டிருந்த "கார்ட்டும்" (Khartoum) நகரிலிருந்து அவர்கள் தப்பிச் சென்றார்கள். 650 கி.மீ. தூரம் ஒரு ஒட்டகத்தின்மீது ஆபத்தான பயணம் செய்து, அப்போதைய சூடான் நாட்டின் துறைமுக நகரான "சுவகின்" (Suakin) சென்றடைந்தனர். கி.பி. 1885ம் ஆண்டு, மார்ச் மாதம், அங்கிருந்து கிளம்பி ஏப்ரல் மாதம், இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவா (Genoa) சென்றடைந்தனர். அவர்கள் அங்கே "அகஸ்டோ மிச்சியெலியின்" மனைவி "சிக்னோரா மரியா டுரினா மிச்சியெலியை" (Signora Maria Turina Michieli) சந்தித்தனர். "கல்லிஸ்டோ லெக்னானி" பகிட்டாவை "சிக்னோரா மரியாவிடம்" கையளித்தார்.
பகிட்டா தமது புதிய எஜமானருடன் அவரது இருப்பிடமான "ஸியானிகோ" (Zianigo) சென்றார். அங்கே மிச்சியெலியின் புதிதாய் பிறந்த குழந்தை "அலைஸுக்கு" (Alice) செவிலித்தாயாக மூன்று வருடம் பணிபுரிந்தார். மிச்சியெலி இத்தாலி திரும்புவதன் முன்னர், ஒன்பது மாதங்களுக்காக பகிட்டாவையும் தம்முடன் சூடான் அழைத்து வந்தார்.
கத்தோலிக்க மனமாற்றமும் சுதந்திரமும்:
சூடான் நாட்டின் "சுவக்கின்" (Suakin) முற்றுகையிடப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னமும் "ஆங்கிலோ-எகிப்தியர்களின்" (Anglo-Egyptian) கைகளிலேயே இருந்தது. "அகஸ்டோ மிச்சியெலி" அங்கே ஒரு பெரிய ஓட்டலை வாங்கினார். அவர் இத்தாலியிலுள்ள தமது மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு தமது குடும்பத்துடன் சுவக்கினில் தங்கிவிட முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அவரது மனைவி சிக்னோரா அவர்களது "ஸியானிகோ" இல்லத்தை விற்றுவிட்டார். மீதமுள்ள சொத்துக்களை விற்குமுன் அவர் தமது கணவரை காண சுவக்கின் சென்றார். செல்லுமுன் தமது குழந்தையையும் பகிட்டாவையும் “வெனிஸ்” (Venice) நகரிலுள்ள "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையின்" (Canossian Sisters) பாதுகாப்பில் விட்டுச் சென்றார்.
சுவக்கினிலிருந்து திரும்பிய சிக்னோரா, பகிட்டாவுடன் தமது குழந்தையை அழைத்துச் செல்ல வந்தார். பகிட்டா அங்கிருந்து வெளியேற தீர்க்கமாக மறுத்துவிட்டார். மூன்று நாட்கள் முழுதாக அன்பாகவும், அதட்டியும், மிரட்டியும், முயற்சித்த சிக்னோரா தோற்றுப்போனார். "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையின்" தலைமைச் சகோதரி, பிரச்சினையை இத்தாலிய அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று புகார் செய்தார். கி.பி. 1889ம் ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் தேதி, இத்தாலிய நீதிமன்றமொன்று, ஏற்கனவே பிரிட்டிஷ் அடிமைத்தளைக்கு தடை விதிக்குமாறு சூடான் நாட்டை தூண்டிஇருந்தது. அத்துடன், இத்தாலி நாட்டில் அடிமைகளுக்கு அங்கீகாரம் கிடையாது. ஆகவே பகிட்டா அடிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.
தமது வாழ்க்கையில் முதன்முதலாக சுதந்திரத்தை பகிட்டா அனுபவித்தார். அவர் "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையிலேயே" இருக்க விரும்பினார். கி.பி. 1890ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஒன்பதாம் நாள், பகிட்டா, "ஜோசஃபின் மார்கரெட் மற்றும் ஃபோர்டுனடா" (Josephine Margaret and Fortunata) ஆகிய பெயர்களுடன் திருமுழுக்கு பெற்றார். “வெனிஸ் பேராயர்-கர்தினால்” (Cardinal Patriarch of Venice) "ஜியுசெப் சர்டோ" (Giuseppe Sarto) (எதிர்கால திருத்தந்தை பத்தாம் பயஸ் - Future Pope Pius X) அவர்களது திருக்கரங்களால் உறுதிப்பூசுதலும் புதுநன்மையும் பெற்றார்.
கனோஸ்ஸியன் அருட்சகோதரி:
ஜோசஃபின் கி.பி. 1893ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஏழாம் நாள், "கனோஸ்ஸியன் சகோதரியர் துறவற" சபையில் இணைந்தார். கி.பி. 1896ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எட்டாம் நாள், தமது பிரமாணங்களை ஏற்றார். அவர் இத்தாலியின் வடக்குப் பிராந்தியமான "விசென்ஸாவின்" (Vicenza) "ஸ்ச்சியோ" (Schio) என்னுமிடத்திலுள்ள கனோஸ்ஸியன் பள்ளியில் சேவை செய்ய பணிக்கப்பட்டார். அவர் தமது மீதமிருந்த வாழ்நாள் முழுவதும் அங்கேயே செலவிட்டார். ஜோசஃபின் அங்கிருந்த 42 வருடங்களும் ஒரு சமையல்கார பெண்ணாகவும், தேவாலயத்தில் உள்ள புனிதப் பொருட்களைக் காப்பவராகவும், சுமை சுமப்பவராகவும், காவல்காரராகவும், வாயிற்காக்கும் பெண்ணாகவும், உள்ளூர் சமூகத்தினரிடம் அடிக்கடி தொடர்புகொள்ளும் பணியையும் செய்தார். இவ்வருட்சகோதரியின் மேன்மையான மென்மை, அமைதியான குரல் மற்றும் அவரது வதனத்திலே தங்கிவிட்ட நிரந்தர புன்னகை ஆகியன, அவரை “விசென்ஸா” (Vicenza) நகர மக்களுடன் நீக்கமற இணைத்தன. இந்நகர மக்கள் இன்றளவும் இவரை “சின்னஞ்சிறு பழுப்பு சகோதரி” (“Sor Moretta” - Little Brown Sister) என்றும், “கருப்பு அன்னை” ("Madre Moretta" - Black Mother) என்றும் குறிப்பிடுகின்றனர்.
கடவுளால் அருளப்பட்ட கொடையான இவருடைய அதிர்ந்து பேசாத சிறப்பும், புனிதமான புகழும், இவர் சார்ந்திருந்த துறவற சபையால் குறிக்கப்பட்டது. கி.பி. 1931ம் ஆண்டு வெளிவந்த அவரது சுயசரிதம் தொடர்பான பதிப்பு அவரது புகழை இத்தாலி முழுதும் பரவச் செய்தது. இரண்டாம் உலகப்போரின்போது, (கி.பி. 1939–1945) நகர மக்களின் பயத்தை போக்க ஆறுதலாக இருந்தார். நகர மக்கள் இவரின் அருகாமை, ஒரு புனிதரின் பாதுகாப்பாக உணர்வதாக கூறினர். "ஸ்ச்சியோ" (Schio) நகரமும் குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போர், ஒரு விபத்தோ அல்லது எவருக்கேனும் ஒரு காயமோ இன்றி கடந்து போனது.
ஜோசஃபினுடைய இறுதி ஆண்டுகள் நோயாலும், வேதனையாகவும் இருந்தன. அவர் ஒரு சக்கர நாற்காலியை உபயோகித்தார். ஆனால் எப்போதும் புன்முறுவலுடன் இருந்தார். எப்படி இருக்கிறீர்கள் என்று யார் கேட்டாலும் புன்முறுவலுடன் "இறைவனின் விருப்பப்படி" (As the Master’s desires) என்றே பதிலளிப்பார்.
அவரது இறுதி மணித்துளிகளில் அவர் தமது ஆரம்ப கால அடிமை வாழ்க்கையை நினைத்து மிகவும் வருந்தினார். "சங்கிலிகள் மிகவும் இறுக்குகின்றன, கொஞ்சம் தளர்த்துங்களேன்" என்று சொல்லி அழுதார்.
எவரோ ஒருவர், "இன்று சனிக்கிழமை; எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு ஜோசஃபின், "ஆமாம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; என் அன்னையே, என் அன்னையே" என்றார். அவரிடமிருந்து கேட்ட இறுதி வார்த்தைகள் இவையே ஆகும்.
1947ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், எட்டாம் நாளன்று, இரவு 8:10 மணிக்கு, ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா, நித்திய வாழ்வில் சயனித்தார். அன்னாரது பூவுடல், மூன்று நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
"சிறு வயதில் உங்களை கடத்தியவரகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?" என்று, ஒருமுறை, ஒரு இளம் மாணவன் ஜோசஃபினை நோக்கி கேட்டான்.
சிறிதும் தயங்காமலும் யோசிக்காமலும் ஜோசஃபின் கூறிய பதில்: