பாஸ்கா - 7ஆம் வாரம்
சனி காலைத் திருப்பலி
முதல் வாசகம்
பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20. 30-31
உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார்.
அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, ``சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.
யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், ``சீசரே என்னை விசாரிக்கவேண்டும்'' என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்'' என்றார்.
பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 11: 4. 5,7. (பல்லவி: 7b)
பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.
அல்லது: அல்லேலூயா.
4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. பல்லவி
5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். 7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 16: 7,13
அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25
அக்காலத்தில் பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, ``ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?'' என்று கேட்டவர்.
அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?'' என்று கேட்டார். இயேசு அவரிடம், ``நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா'' என்றார்.
ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை.
மாறாக, ``நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?'' என்றுதான் கூறினார். இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி.
இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.