புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 May 2020

புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi)கப்புச்சின் சகோதரர் May 11

இன்றைய புனிதர் :
(11-05-2020)

புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi)
கப்புச்சின் சகோதரர்
பிறப்பு : 1701
சார்டினியன்(Sardinien), இத்தாலி
    
இறப்பு  : 1785
சார்டினியன், இத்தாலி

21 அக்டோபர் 1952
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்

இவர் இளமையாக இருக்கும்போதே தனது தந்தைக்கும், மாமாவிற்கும் வயலில் வேலை செய்வதற்கு உதவி செய்து வந்தார். தனது 18 ஆம் வயதில் நோயால் தாக்கப்பட்டு, மிகவும் வேதனை அடைந்தார். அப்போது தன் நோய் குணமானால் தான் ஓர் துறவியாகிறேன் என்று இறைவனிடம் சத்தியம் செய்து குணம் பெற வேண்டி தொடர்ந்து செபித்தார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து பூரண குணமடைந்தார். குணமடைந்த உடன் இவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார். அதன்பிறகு ஒருநாள் குதிரையில் சவாரி செய்தார். அப்போது குதிரையின் மீதிருந்து வ்ழுக்கி கீழே விழுந்ததில் பலமாக அடிப்பட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். அப்போது தனது 20 ஆம் வயதில் கப்புச்சின் துறவற மடத்திற்கு சென்றார். பின்னர் 1736 ஆம் ஆண்டிலிருந்து கப்புச்சின் துறவறமடத்தில் உறுப்பினரானார். 

இக்னேஷியஸ் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களுடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். தனது 45 ஆம் வயதுவரை தனது குழுமத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பணிவிடை செய்து வந்தார். ஆனால் அவர் மற்றவர்களை பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதுகூட மற்றவர்களிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார். தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார். 

இவரை தாக்கிய பல நோய்கள் இயேசுவின் அற்புதத்தால் குணமாவதை பார்த்த பலரும் பரவசமடைந்தனர். இறுதியாக இக்னேஷியஸ் தனது 84 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார். 


செபம்:
கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! மருத்துவராய் இருந்து பல அற்புதங்களை செய்து புனித லாக்கோனி இக்னேஷியசை குணப்படுத்தி வாழ்வழ்ளித்தீர். அவரைப்போலவே நாங்களும் எங்களது சிறு, சிறு நோயிலும் உம்மீது நம்பிக்கை வைத்து, உமது ஆசீரால் குணம்பெற உமதருளை தந்து எம்மை காத்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.