புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 August 2020

புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianneyமறைப்பணியாளர் August 4

இன்றைய புனிதர் :
(04-08-2020)

புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney
மறைப்பணியாளர்
பிறப்பு 
8 மே 1786
டார்டில்லிDardilly near Lyon), பிரான்ஸ்
    
இறப்பு 
4 ஆகஸ்டு 1859
ஆர்ஸ், பிரான்ஸ்
குருப்பட்டம்: 1815
புனிதர்பட்டம்: 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பங்குதந்தையர்களின் பாதுகாவலர், 1929 (Patron von Pfarrer)

மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 

இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார். 


செபம்:

அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (04-08-2020)

St. John Mary Vianney

St. John Vianney was born on May 8, 1786 in France. His father was Mathieu Vianney and mother Mary Beluze. When Napoleon withdrew the exemption given to ecclesiastical students from military service, John Vianney was drafted into the army. When he was proceeding to a military post, somebody wrongly guided him to a village named Les Noes, where army deserters were living in a group secretly. John Vianney assumed a new name Jerome Vincent there to prevent detection and opened a school in this name to impart education to village children there. Vianney was very much devoted to St. Philomena. He was ordained a priest on August 12, 1815.He was running a home for poor people to care and feed poor people. His biographer recorded that one day there was only flour to bake only two breads in the poor home. But Vianney prayed and a miracle happened. The flour increased in quantity and they baked 20 breads weighing 20 kilograms each. His biographers also recorded that he had supernatural knowledge about the past and future. He was having powers to cure children from sickness.
St. John Vianney was declared venerable by Pope Pius-IX on October 3, 1874 and declared as blessed by Pope Pius-X on January 8, 1905. He was canonized by Pope Pius-XI on May 31, 1925.

He is the patron saint of all priests. He was also proposed as a model to the parish priests.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 4)

✠ புனித ஜான் வியான்னி ✠
(St. John Vianney)

மறைப்பணியாளர்/ குரு:
(Tertiary and Priest)

பிறப்பு: மே 8, 1786
டார்டில்லி, லியோன்னைஸ், ஃபிரான்ஸ் அரசு
(Dardilly, Lyonnais, Kingdom of France)

இறப்பு: ஆகஸ்ட் 4, 1859 (வயது 73)
ஆர்ஸ்-சுர்-ஃபார்மன்ஸ், எய்ன், ஃபிரான்ஸ்
(Ars-sur-Formans, Ain, France)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜனவரி 8, 1905
திருத்தந்தை 10ம் பயஸ்
(Pope Pius X)

புனிதர் பட்டம்: 1925
திருத்தந்தை 11ம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித ஜான் வியான்னி திருத்தலம்; ஆர்ஸ்-சுர்-ஃபார்மன்ஸ், எய்ன், ஃபிரான்ஸ்
(Shrine of St. John Vianney Ars-sur-Formans, Ain, France)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 4

பாதுகாவல்: 
பங்கு குருக்கள் (Parish Priests)
செயின்ட் ஜான் மேரி வைனென்னின் தனிப்பட்ட திருத்தூதுப்பணி நிர்வாகம் (Personal Apostolic Administration of Saint John Mary Vianney)
“டூபுக்” உயர்மறைமாவட்டம் (Archdiocese of Dubuque)
ஒப்புரவாளர்கள் (Confessors)
“கன்சாஸ் நகர்” உயர்மறைமாவட்டம் (Archdiocese of Kansas City)

புனிதர் ஜான் வியான்னி, ஃபிரான்ஸ் (France) நாட்டில் உள்ள “ஆர்ஸ்” (Ars) எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.

தொடக்க காலம்:
“புனிதர் ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி” (St. John Baptist Mary Vianney) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஆங்கிலத்தில் சுருக்கமாக “ஜான் வியான்னி” என்று அறியப்படுகிறவர் ஆவார். “லியோன்” (Lyon) நகருக்கு அருகில் “டார்டில்லி” (Dardilly) என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் “மத்தேயு வியன்னி” (Matthieu Vianney) மேரி (Marie) என்ற பெற்றோரின் ஆறு குழந்தைகளில் நான்காவது மகனாக கி.பி. 1786ம் ஆண்டு, மே மாதம், 8ம் தேதி பிறந்தவர். இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திருப்பலியில் பங்கேற்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. கி.பி. 1790ம் ஆண்டு, இவருக்கு 4 வயதாக இருக்கும்போது வெடித்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) மறைப்பணியாளர்களுக்கு எதிரான பயங்கரவாத நிலை, கத்தோலிக்க விசுவாசமிக்க குருவானவர்கள் பலரை ஓடி ஒளியவைத்தது.

வியான்னி குடும்பத்தினர் திருப்பலியில் கலந்துகொள்வதற்காக தூர தொலைவுகளிலுள்ள பண்ணைகளுக்கு சென்றனர். பங்கு குருக்கள் ஒரு இடத்தில் நில்லாமல் ஓடியபடியே திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் நிகழ்த்தினர். அத்தகைய குருக்கள் நாள்தோறும் தமது உயிர்களை ஆபத்தில் சிக்க வைத்திருப்பதை ஜான் வியான்னி உணர்ந்துகொண்டிருந்தார். குருக்களை நாயகர்களாக பார்க்க ஆரம்பித்தார்.

கி.பி. 1799ம் ஆண்டு, இவருக்கு 13 வயது நடந்தபோது, இவர் புதுநன்மை பெற்றார். இரண்டு அருட்சகோதரிகள் வியான்னியின் முதல் நற்கருணை விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது.

கி.பி. 1802ம் ஆண்டு, மாமன்னன் நெப்போலியன் (Napoleon) புரட்சியாளர்களைத் தோற்கடித்து, கத்தோலிக்க மறை ஃபிரான்ஸ் நாட்டில் மீண்டும் நிலைநிறுத்தினார். அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.

குருத்துவம்:
தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான ஃபிரெஞ்சு மொழியிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே புனித ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.

கி.பி. 1809ம் ஆண்டு, பேரரசன் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது. எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் உடல் நலம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதியில், “லெஸ் நோஸ்” (Les Noes) எனும் கிராமத்துக்கு செல்ல நேர்ந்தது. அங்கே, நான்கு குழந்தைகளுக்குத் தாயான “கிளாடின் ஃபேயோட்” (Claudine Fayot) எனும் விதவைப் பெண்ணின் பண்ணையிலிருந்த மாட்டுக் கொட்டிலில் மறைந்து, பதினான்கு மாதங்கள் தங்கிவிட்டார். அங்கே, தமது பெயரை “ஜெரோம் வின்சென்ட்” (Jerome Vincent) மாற்றிக்கொண்டார். அங்கே, ஒரு சிறு பள்ளியை நிறுவி, அங்குள்ள கிராமத்து சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தார். பின்பனர், 1810ம் ஆண்டு, மார்ச் மாதம், பிரகடனப்படுத்தப்பட்ட நெப்போலியனின் ஆணை, யுத்த காலத்தில் ஓடிப்போன அனைவருக்கும் மன்னிப்பு வழங்கியது. இதன் காரணமாக, வியன்னியும் 1811ம் ஆண்டு, வீடு திரும்பினார்.

இவருக்கு 25 வயதானபோது, உயர்நிலைப் பள்ளி கல்வி தொடங்கும் கட்டத்தில் இருந்தார். மீண்டும் தன் பங்குத் தந்தையிடம் சென்று குருத்துவப் பணிக்குத் தயாரித்தார். கி.பி. 1812ம் ஆண்டு, இளம் குரு மாணவர் இல்லத்தில் (Minor Seminary) சேர்ந்தார். அங்கு இருந்த 200 மாணவர்களில் இவரே கடைசியாக இருந்தார். பின்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று கற்க வேண்டியிருந்தது. ஆனால் பங்குத் தந்தையின் பரிந்துரையால் கி.பி. 1815ம் ஆண்டு, ஜூன் மாதம், திருத்தொண்டராக அருட்பொழிவு பெற்றார். 1815ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 12ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தமது பங்குத் தந்தைக்கே உதவியாக இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார்.

ஆர்சின் (Ars) குருவாக:
வியான்னியின் பங்குத் தந்தை இறந்த பின்பு இவரை எங்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இறுதியாக மக்கள் அதிகம் இல்லாத “ஆர்ஸ்” (Ars) என்ற கிராமத்தின் ஆலயத்துக்கு பங்குத்தந்தையாக அனுப்பப்பட்டார். அப்போது அந்த பங்கு ஆலயம் இடிந்து கிடந்தது. எனவே அதற்கு அருகில் இருந்த சிற்றாலயம் இவருடைய பங்கு ஆலயம் ஆனது. அந்த ஆலயத்தைச் சார்ந்தவர்கள் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் சமயப் பற்று இல்லாதவர்கள்.

அந்த மறைமாவட்டத்தின் தலைமை குரு வியான்னியிடம் அப்பணியைக் கொடுத்தபோது, “கடவுள் அன்பற்ற மக்களிடம், அவர் அன்பை உணரச் செய்வதே உமது பணியாகும்” என்று கூறினார். இத்தகைய மேலான ஆன்மீகப் பணியையே இவர் தனது உடனிருப்பாலும், போதனைகளாலும், தவ முயற்சிகளாலும் மக்களிடையே ஆற்றினார். அதிகாலையில் எழுந்து திருப்பலி நிறைவேற்றிவிட்டு ஒப்புரவு அருட்சாதன இருக்கையில் அமரும் இவரிடம், எண்ணற்றோர் ஒப்புரவு அருட்சாதனம் பெற வந்தனர்.

நாட்கள் உருண்டோடின. ஃபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவரைத் தேடி வந்தனர். உணவு உண்பதற்கும் நோயாளிகளைச் சந்திப்பதற்கும், மறைக்கல்வி வகுப்புகள் கற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே வியான்னி சிறிது நேரம் ஒதுக்குவார்; மற்ற நேரங்களில் எல்லாம் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டே இருந்தார். இவருடைய மறையுரைகள், மக்கள் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக இவர் மக்களைப் பாதித்த பாவங்களைப் பற்றியே எடுத்துரைத்தார்; அங்கு வாழ்ந்த விவசாயக் குடும்பத்தினர் மத்தியில் பரவிக் கிடந்த குடிப் பழக்கம், இரவு நடனங்கள், பக்தியற்ற நிலைமை ஆகியவற்றை மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்கள் படிப்படியாக மனம் மாறினர்.

புனித அல்போன்ஸ் லிகோரி எழுதிய அறநெறிப் பாடங்களைக் கற்று இவர் தன் பணியில் பயன்படுத்தினார். குருக்கள் மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை இவர் உணர்த்தினார். இவர் ஆன்மாக்களின் பாவங்களைக் கண்டுகொள்ளும் வரம் பெற்றிருந்ததால், பாவிகளிடம் கண்டிப்புடனும் கனிவுடனும் நடந்துகொண்டார். இவர் பாவிகளிடம் மிகவும் கனிவுடன் இருப்பதாக பல குருக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.

புனிதர் பட்டம்:
வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும், துணிவுடனும் போராடி இறையருளால் வெற்றி கண்டார்.

இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக கி.பி. 1859ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 4ம் தேதி, மரணம் அடைந்தார். 1905ம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் (Pope Pius X) இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ம் ஆண்டில் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI), 1929ம் ஆண்டு இவரை உலகளாவிய பங்குத்தந்தையரின் பாதுகாவலராக அறிவித்தார். புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவரது மறைவின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதமாக, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI), 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், 2010ம் ஆண்டு, ஜூன் மாதம் வரையான காலத்தை கத்தோலிக்க திருச்சபையில் குருக்களின் ஆண்டாக (Year of the Priest) அறிவித்தார். அச்சமயம் வத்திக்கான் இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.