புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 April 2020

தூய சொட்டேருஸ் (ஏப்ரல் 22)

இன்றைய புனிதர் : 
(22-04-2020) 

தூய சொட்டேருஸ் (ஏப்ரல் 22)
“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் ( திப 10: 38).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய சொட்டேருஸ் இத்தாலியில் உள்ள போன்டியில் பிறந்தவர். இவர் திருத்தந்தை அனிசெத்துஸ் அவர்களுக்குப் பின்னர் 12 வது திருத்தந்தையாக உயர்ந்து, திருச்சபையை கட்டிக்காத்தார்.

சொட்டேருஸ், தூய பவுலைப் போன்று, தூய கிளமென்டைப் போன்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். இவர் எழுதிய கடிதம் நமக்குக் கிடைக்காவிட்டாலும் கொரிந்து நகரில் ஆயராக இருந்த டைனிசியஸ் இவருக்கு எழுதிய பதில் கடித்தத்தைக் கொண்டு இதனை உறுதிசெய்துகொள்ளலாம். அந்தத் கடிதத்தில் ஆயர் தூய டைனிசியஸ், திருத்தந்தை சொட்டேருஸ் எப்படிப்பட்டவர் என்பதை மிக அழகுபட எழுதுகின்றார். திருத்தந்தை சொட்டேருஸ் நிறைய நன்மைகள் செய்யக்கூடியவர் என்றும், ஆலயங்களுக்கு உதவிகள் செய்யக்கூடியவர் என்றும் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவக்கூடியவர் என்றும் நல்ல ஆலோசகர் என்றும் அதில் குறிப்பிடுகின்றார். இவற்றை வைத்துப் பார்க்கும் திருத்தந்தை சொட்டேருஸ் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

இவருடைய காலத்தில் மார்குஸ் அவுரேலியுஸ் என்பவன் உரோமையை ஆண்டுகொண்டு வந்தான். ஒரு சமயம் அவன் தன்னுடைய படைவீரர்களோடு பொகிமியான் என்ற இடத்தின் வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்த பழங்குடியினர் இவனையும் இவனுடைய படைவீரர்களையும் சூழ்ந்துகொண்டு, தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அப்போது படையில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார்கள். மறுகணமே மார்குஸ் அவுரேலியுசும் அவனுடைய படைவீரர்களும் இருந்த பகுதியில் மழையும், பழங்குடியினர் இருந்த பகுதியில் சூறாவளியும் வீசியும் வீசியது. இதனால் மார்குசும் அவனுடைய படைவீரர்களும் அதிஸ்டவசமாகக் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நிகழ்விற்குப் பிறகு மன்னன் கிறிஸ்தவர்கள்மீது நல்மதிப்பு கொள்ளத் தொடங்கினான்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க, ஒருசில விஷமிகள் மன்னனிடம் கிறிஸ்தவர்களைக் குறித்து தவறாகப் போட்டுக்கொடுக்க, அவன் கிறிஸ்தவர்களைக் கொலை செய்யத் தொடங்கினான். அந்த வழியில் 175 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் நாள், மன்னன் திருத்தந்தை சொட்டேருசை கொலை செய்தான். திருத்தந்தை அவர்களோ கிறிஸ்துவுக்காக உயிர் துறந்து, மறைசாட்சியானர்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சொட்டேருசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம்

தூய சொட்டேருசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, மேலே சொல்லப்போட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய சொட்டேருஸ் எப்போதும் நன்மை செய்வதில் கருத்தாய் இருந்தார். அது திருச்சபையாக இருக்கட்டும் ஏழை எளியவர், வறியவராகட்டும் எல்லாருக்கும் அவர் நன்மையையே செய்துவந்தார். தூய சொட்டேருசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்மை செய்வதற்கு முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பேரரசர் அக்பர் மந்திரிகள் குழுமியிருந்த அவையோரைப் பார்த்துக் கேட்டார். “ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம், வசந்த காலம், மழைக்காலம், கோடை காலம் என பல காலங்கள் வருகின்றனவே. இதில் எந்த காலம் மக்களுக்கு ஏற்ற நல்ல காலம்?”. பேரரசர் கேட்ட கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தி அடையாத அரசர், பீர்பாலைக் கூப்பிட்டு, உங்கள் பதில் என்ன? என்றார். அதற்கு அவர், “அரசே! எந்தக் காலத்தில் மக்கள் அனைவரும் பசியாற உண்டு உறங்குகிறார்களோ அந்தக் காலமே நல்ல காலம்” என்றார். பீர்பால் சொன்ன பதிலைக் கேட்டு, முழு திருப்தி அடைந்த அரசர் அவருக்கு நல்லதொரு சன்மானம் கொடுத்தார்.

எல்லா மக்களும் மகிழ்ச்சியுற்று இருப்பதே நல்ல காலம். அந்த நல்ல காலம் தாமாகவே வந்துவிடாது. நாம் நம்மாலான உதவிகளை ஒருவர் மற்றவருக்குச் செய்கின்றபோதே வரும். தூய சொட்டேருஸ் அப்படித்தான் தன்னால் இயன்ற நன்மைகளை மற்றவருக்குச் செய்தார்.

ஆகவே, தூய சொட்டேருசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம், அதன்வழியாக இப்புவியில் நல்ல காலம் பிறக்கச் செய்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.