புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 April 2020

தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)

24 ஏப்ரல் 2020, வெள்ளி 
இன்றைய புனிதர்

தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)
வாழ்க்கை வரலாறு

தூய பிதேலிஸ், 1577 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சிக்மரின்ஞன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து ரேபர்க் நகரில் இருந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னாளில் தான் எங்கு கல்வி பயின்றாரோ அங்கேயே அவர் பேராசிரியராகப் பணிசெய்தார். ஒருசில ஆண்டுகளில் இவர் சட்டம் பயின்று வழக்குரைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலத்தில் நிறைய ஏழைகள் வழக்குகளைத் தீர்த்து வைக்க போதிய பணமில்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிதேலிஸ் அவர்களுக்கு இலவசமாகவே வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இப்படி அவர் பணம் வாங்காமலே, ஏழைகளின் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைத்ததால், ‘ஏழைகளின் வழக்குரைஞர்’ என அழைக்கப்படவும் தொடங்கினார். 

தொடர்ந்து வழக்குரைஞர் பணியை செவ்வனே செய்துவந்த பிதேலிஸ், ஒரு கட்டத்தில் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் 1617 ஆம் ஆண்டு, எல்லாவற்றையும் துறந்து, கப்புசியன் சபையில் துறவியாக வாழத் தொடங்கினார். வழக்குரைஞர் பணியைவிட்டு துறவியாக வாழத் தொடங்கிய காலகட்டங்களில் தான் பெரிய பதவியில் இருந்தோம் என்ற மமதையில் எல்லாம் அவர் இருக்காமல், மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்தார். இதனால் சபையில் இருந்த எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். 

இவருடைய காலத்தில் கால்வினியன், ஸ்விங்கிளியன் போன்ற தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. பிதேலிஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தார். கால்வினியனிசமோ முன்விதிப்படியே எல்லாமும் நடக்கும், அதாவது யார் யார் விண்ணகம் செல்வார், யார் யார் நரகம் செல்வார் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுப்விட்டது என்று சொல்லி வந்தது. அதோடு திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டு மட்டும் திருவருட்சாதனங்கள் என்று போதித்து வந்தது. இதனை பிதேலிஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். எனவே அந்த தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தவர்கள் பிதேலிசுக்கு எதிரான சதி வேளையில் இறங்கினார்கள். அந்த அடிப்படையில் 1622 ஆம் ஆண்டு, அவரைக் கொலை செய்தார்கள். பிதேலிசுக்கு 1746 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.