இன்றைய புனிதர்
2020-05-16
புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)
குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்
பிறப்பு
1591
சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து
இறப்பு
16 மே 1657
ஜானாவ் (Janow), போலந்து
முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்
புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்தனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ்வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமுமாய் இருந்து பணியாற்றினார்.
கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.
இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.
புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.
செபம்:
மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
குபியோ நகர் ஆயர் உபால்டு Ubald von Gubbio
பிறப்பு: 1080 குபியோ, இத்தாலி
இறப்பு: 16 மே 1160
புனிதர்பட்டம்: 1192
பாதுகாவல்: குழந்தைகள், நரம்பு நோய்கள்
சபைத்தலைவர் சைமன் ஸ்டோக் Simon Stock
பிறப்பு: 1200, அலெஸ்போர்டு, இங்கிலாந்து
இறப்பு: 16 மே 1265 போர்டேக்ஸ் Bordeaux, பிரான்சு
பாதுகாவல்: கார்மேல் மடங்கள்